3.5 மின்னணு ஊடகங்களில் தமிழ்
அச்சு மூலமாகச் செய்திகளைத் தருகின்ற இதழ்களை அச்சு
ஊடகம் என்று பார்த்தோம். அவ்வாறு மின் ஆற்றலைக்
கொண்டு ஒலி, ஒளி வழியே மக்களுக்குப் பலவற்றை
வழங்குகின்ற வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றை
மின்னணு ஊடகங்கள் என்று குறிப்பிடுகிறோம்.
3.5.1 வானொலி மொழி
வானொலி ‘கேட்டல்’ பண்பு ஒன்றினை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உண்மையில்
அப்பண்புதான் வானொலியின் வலிமை என்று குறிப்பிடுகிறார்
வில்பர் ஸ்க்ராம். வானொலியில் கேட்டல் மட்டுமே
நிகழ்கிறது. எனவே பேசுவோரின் செய்கைகளையோ
உடலசைவுகளையோ நேயர்கள் பார்க்க முடியாது. எனவே
வானொலித் தகவல் தொடர்பில் 1) மொழியும் 2) ஒலியும் 3)
பேச்சுத் திறனுமே முக்கிய இடம் பெறுகின்றன. இந்நிலையில்
மொழிதான் சிறந்து நின்று நேயர்களைக் கவருகிறது.
• மொழி
சொல், தொடர், ஒலியின் கூறுபாடுகள், பேச்சுத்திறன்
ஆகிய வெவ்வேறு தளங்களிலும் மொழியே செயல்படுகிறது.
• சொல்
இக்காலக் கட்டத்தில் பேச்சுமொழிச் சொற்களும்
பிறமொழிச் சொற்களுமே அதிக அளவில் தகவல் தொடர்பில்
பயன்படுத்தப் படுவதால் வானொலியிலும் இம்முறையிலான
சொற்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மதுரை வானொலியின் மகளிர் நிகழ்ச்சிகள் பற்றி
ஆராய்ந்த வி.அநுராதா தமது நூலில் அந்நிகழ்ச்சிகளின்
மொழிநடை பற்றிச் சுட்டுகிறார். அந்நிகழ்ச்சிகளில் பேச்சு
மொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து வந்துள்ள
முறையை அவர் விளக்குகிறார்.
சான்று:
பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கிராம
மூதாட்டி ஒருவர் நேர்காணப் பட்டார். மிகச் சாதாரணமாக,
‘எனக்கு வயது கரெக்டா 80 ஆகுதுங்க’ என்றும், ‘அந்தக்
காலத்துல பொம்பளைங்க ஃப்ரீயாப் பேசமுடியாது; நைட்
நேரத்துல வெளியே போக முடியாது’ என்றும் ஆங்கிலச்
சொற்களை அடுக்கிப் பேசினார். (வானொலியும் மகளிர்
நிகழ்ச்சிகளும், பக். 51)
இச்சான்று நாட்டுப்புற மகளிர்க்கான நிகழ்ச்சி; அதிலும்
கூட ஆங்கிலச் சொற்கலப்பைக் காணமுடிகிறது. எம்மொழிச்
சொல்லாயினும் மக்களுக்குப் புரியக் கூடிய சொற்களைப்
பயன்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையை இங்குக்
காணமுடிகிறது.
• தொடர்
நீண்ட வாக்கியங்கள், கலவை வாக்கியங்கள், கூட்டு
வாக்கியங்கள் வானொலி மொழிக்கு உகந்தவை அல்ல. எனவே
நிகழ்ச்சிக்கு எழுதுபவர் எளிய தனிவாக்கியங்களைப் (simple
sentence) பயன்படுத்தி எழுத வேண்டும்.
சான்று:
Ôகுழந்தை வளர்ப்பு ஒரு கலைÕ என்ற வானொலி உரை
எளிய தொடர்களைக் கொண்டுள்ளது, அவ்வுரையின் முன்னுரை
பின்வருமாறு:
"குழந்தையின் முதல் உலகம் அதன் வீடும்
பெற்றோரும்தாம். குழந்தைகளை நன்கு வளர்ப்பதில் தொடக்கம்
முதலே பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு
நிரம்பச் சுதந்திரமும் கொடுத்துவிடக் கூடாது. அதே சமயத்தில்
அதிகமான அடக்குமுறையும் கூடாது." (வானொலியும் மகளிர்
நிகழ்ச்சியும், பக். 52)
இதே முறையில் அவ்வுரை முழுவதும் எளிய தொடர்களில்
அமைகிறது.
• ஒலி
வானொலியின் ஒலி அமைப்பில் பேசுபவரின் உச்சரிப்புத்
திறன், ஏற்ற இறக்கம், குரல் வளம் போன்றவை முக்கியப்
பங்கு வகிக்கின்றன.
சான்று:
பழம் என்ற சொல்லை உரையில் பயன்படுத்தினால்
பேசுபவர் சரியாக உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரிக்க
இயலாது எனில் கனி என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேச
வேண்டும். மாறாக பலம் என்று பேசினால் நேயர் பொருளைத்
தவறாகக் கொள்ள நேரிடும். குழந்தை என்ற சொல் இடம்
பெறும் போது ழ உச்சரிக்கச் சிரமமாயின் பிள்ளை என்ற
சொல்லைப் பயன்படுத்திப் பேச வேண்டும். பேசுபவர் தம்
குரலில் சரியான ஏற்ற இறக்கத்தைத் தேவைக்கு ஏற்பப்
பயன்படுத்தினால்தான் வானொலி மொழி நேயருக்கு ஆர்வம்
ஊட்டுவதாக அமையும். நிகழ்ச்சியின் இறுதி வரை நேயர்
கவனித்துக் கேட்பார். அது மட்டுமன்றி வானொலியில் உரை
நிகழ்த்துபவர் நல்ல குரல் வளம் உள்ளவராகவும் இருக்க
வேண்டும். அச்சமின்றி, கூச்சமின்றி, நடுக்கமின்றிப் பேச
வேண்டும்.
• பேச்சுத் திறன்
(1) உரை நிகழ்த்துபவர் வானொலி நேயருடன் சுற்றி
வளைக்காமல் நேரடியாகப் பேசித் தம் உள்ளக் கருத்தைத்
தெரிவிக்க வேண்டும். தேவையற்ற சொற்களைத் தவிர்க்க
வேண்டும். அலங்காரம், வருணனை இல்லாமல் தகவலை
ஆற்றொழுக்காகச் சொல்ல வேண்டும்.
(2) நிகழ்ச்சி நேர்காணல், உரையாடல் போன்றவையாக
இருப்பின் எதிராளியின் கருத்தை அறிந்து கொண்டு
அக்கருத்துக்கு ஏற்றவாறு பேச்சினை அமைத்துக் கொண்டு
பேச வேண்டும்.
(3) தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் அறிஞர் தம்
கருத்துகளைப் பொருத்தமாக எடுத்தாண்டு உரை நிகழ்த்த
வேண்டும்.
இவ்வாறு அறிஞர் கருத்துகளை இணைத்துப் பேசினால்
கேட்கும் நேயருக்கு, நிகழ்ச்சியின் மையக் கருத்து பற்றிக்
கூற்று நிகழ்த்துவோரின் கருத்தும் அறிஞர்களின் கருத்தும்
ஒருசேரக் கிடைக்கும்.
சான்று:
பெண் குழந்தைகள் ஆண்டு என்ற தலைப்பில்
அமைந்த நேர்காணல்.
“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று கூறிச் சென்றார்
பாரதியார். ஆனால் இங்கு நடப்பதென்ன? பெண் சிசுக்
கொலைகள். ஒரு கன்னிப்பெண் எல்லா நகைகளையும்
அணிந்து கொண்டு இரவு நேரத்தில் தனியாகத் தெருவில்
நடந்து சென்றால் அப்போது அவளுக்கு எந்தத் தீங்கும்
நேராதிருந்தால் அதுதான் ராம ராஜ்ஜியம் என்று
காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் இன்று நிலைமை
என்ன? பட்டப் பகலிலேயே நகைத் திருட்டும் கற்பழிப்பும்
தான் அன்றாடக் காட்சிகளாய் மிகுந்துவிட்டன.”
(வானொலியும் மகளிர் நிகழ்ச்சிகளும், பக். 58-59)
இச்சான்றில் பெரியோர்களின் கருத்தும் நேயருக்குக்
கிடைப்பதைக் காணலாம்.
(4) பேசுபவர் தம் கருத்தில் உறுதியாக நின்று பேச வேண்டும்.
தாம் சொல்ல வரும் கருத்தை ஐயமின்றித் திட்டவட்டமாக
எடுத்துரைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நான்கு பண்புகளும் பேசுபவரின் பேச்சுத்
திறத்தை உள்ளடக்கியவை. இவை சிறந்தால் வானொலி மொழி
சிறந்து, கருத்து நேயரைச் சென்றடையும்.
3.5.2 தொலைக்காட்சி மொழி நடை
இன்றைய நாளில் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும்
மக்கள் தொடர்புச் சாதனம் தொலைக்காட்சி ஆகும். ஒவ்வொரு
வீட்டின் நடுக் கூடத்திற்குள்ளும் நுழைந்து உலகச் செய்திகளை
வாரி வழங்கி மக்களைத் தன்னை நோக்கிக் கவரும் ஒரு
சாதனம் இது. தனது வண்ண மயமான காட்சிச்
சித்திரிப்புக்களால் (Visuals)
மக்களுக்குப் பொழுதுபோக்கு
நிகழ்ச்சிகளைத் தந்து மக்களைத் தனக்கு அடிமைப்படுத்தி
வைத்திருப்பதனால் இதற்கு முட்டாளாக்கும் பெட்டி (Idiot
Box)
என்றொரு பெயரும் உண்டு. இருபத்தோராம் நூற்றாண்டில்
தொலைக்காட்சியைத் தவிர்த்து விட்டுச் சாதாரணத் தனி
மனிதன் வாழ்வது என்பது இயலாத ஒன்றே.
தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகின்றது.
தனியார் அலைவரிசைகளும் தமிழில் அரசு அலைவரிசையாகிய
பொதிகையும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகின்றன. பொதுவாக
30 நிமிடங்கள் ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் ஏறக்குறைய 14
நிமிடங்கள் விளம்பரங்களுக்குப் போய்விட எஞ்சிய நேரமே
நிகழ்ச்சிக்குத் தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை
வழங்கும் அறிவிப்பாளர் முதலிலும், இடையிடையேயும்,
இறுதியிலும் பேசுவார். நேர்காணல் நிகழ்ச்சி என்றால் அவர்
பங்கு அதிகமாக இருக்கும். இத்தகைய அறிவிப்பாளர்கள்
பேசும் தமிழில் ஆங்கிலச் சொற்கலப்பு அளவு கடந்து
அமைகிறது. சான்றாக வணக்கம் என்பதற்குப் பதில் ஹாய்
என்ற சொல்லும் நிகழ்ச்சியை முடிக்கும் போது பை என்ற
சொல்லும் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் ஆங்கிலச் சொற்கலப்புப் பற்றிக்
கவலைப்படுவதில்லை. பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் பாங்கே அமைகிறது.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிகமாக இடம்
பெறும் நிகழ்ச்சிகள் நாடகங்கள், இந்த நாடகங்களின்
உரையாடல்களில் மொழி அதிகமான கவனத்துடன்
எழுதப்படுகின்றது என்று கூற முடியாவிட்டாலும் இங்கும்
பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம்.
செய்திகள் (News
Programme) தமிழகத்தில் எல்லா
மாவட்ட மக்களுக்கும் புரியும் வகையில் தரமான
பொதுத்தமிழில் (Standard
Common Tamil) எழுதப்படுகின்றன.
இத்தமிழில் வட்டார மொழிக் (Dialect)
கலப்பிற்கு இடமில்லாத வகையில் எழுதப்படுவது அதன் சிறப்பு ஆகும்.
தற்காலப் பேச்சுத் தமிழில் ‘வந்து’ என்ற இடைச்சொல்
பொருளற்ற முறையில் எல்லாத் தொடர்களிலும் கலந்து
பேசப்படுகிறது. இதனைக் குறித்துப் பேசுவோர் எள்ளளவும்
கவலைப் படுவதில்லை. இதே அமைப்பு அப்படியே
தொலைக்காட்சியிலும் காணப்படுகிறது.
விளம்பரத் தமிழிலும் கேட்போரைக் கவர்ந்திழுக்கும்
சொற்களே தெரிந்தெடுக்கப் படுகின்றன. இவ்வகையிலும்
ஆங்கிலச் சொற்கலப்பு அதிகம் இடம் பெறுகிறது.
தொலைக்காட்சி என்ற கவர்ச்சி ஊடகம் 24மணி நேரமும்
பிற அலைவரிசைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு
செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தருவதில் மொழி பற்றி
மிகுந்த அக்கறை கொள்ளாமல் பேச்சுத் தமிழைப் பதிவு
செய்யும் வகையி்ல் தன் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்கிறது.
1) உடனுக்குடன் செய்தி தருதல், 2) விரைவாகத் தருதல், 3)
பொழுது போக்கு என்ற வகையில் தன் நேயர்களைத் தக்க
வைத்தல் என்ற மூன்றிலும் கவனம் செலுத்தும் தனியார்
அலைவரிசைகள் உள்ளடக்கத்தை விட மொழி மீது குறைவான
கவனமே கொள்கின்றன எனலாம்.
3.5.3 திரைப்பட மொழி நடை
பத்திரிகை, வானொலி ஆகிய ஊடகங்களை விடத்
தொலைக்காட்சி போலவே மக்களைக் கவரும் மற்றொரு
சாதனம் திரைப்படம் ஆகும். மிகுந்த சக்தி வாய்ந்த ஊடகம்
இது. காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில்
அமைக்கப்படுவதால் மக்களை அதிகம் கவரும் சாதனமாகத்
திரைப்படம் அமைகிறது.
தொடக்கக் காலத்தில் திரைப்படங்கள் நாடகப் பாணியில்
அமைக்கப்பட்டன. இலக்கிய வளர்ச்சிக்கும் இவை அடித்தளமாக
அமைந்தன. எனவே செந்தமிழில் உரையாடல்கள் அமைந்தன.
வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வசனங்களைச்
சரியாகப் பேசி உச்சரித்து நடித்த நடிகர்கள் புகழ் பெற்றனர்.
பி.யு. சின்னப்பா, எஸ்.வி. சுப்பையா, சிவாஜி கணேசன்
முதலானோர் இதற்கு முன்னோடிகள் ஆவர்.
அன்று புராண, வரலாற்றுப் படங்களே மிகுதியாய்
உருவாக்கப்பட்டன. இளங்கோவன், பாரதிதாசன், சுரதா,
கம்பதாசன் போன்றோர் சிறந்த உரையாடல்களைச்
செந்தமிழில் எழுதினர். அண்ணா திரைப்பட வரலாற்றில்
கதையின் கருத்திலும் உரையாடல்களை எழுதுவதிலும்
புதுமையைக் கையாண்டவர். அவரது ஓர் இரவு, நல்லதம்பி,
வேலைக்காரி போன்றவை அடுக்குமொழி, பொருள்
பொதிந்த சொற்கட்டு போன்ற சிறப்புடைய
உரையாடல்களைக் கொண்டவை. அண்ணா அமைத்துத் தந்த
தமிழ் அழகு என்று எல்லாராலும் போற்றப்பட்டது. இவரைத்
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி இவரைப் போலவே
சிறப்பாக எழுதினார். பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா,
பூம்புகார், இருவர் உள்ளம் போன்ற பல படங்களை இவரது
திரைத் தமிழ் வெற்றி பெறச் செய்தது.
திருவாரூர் கே. தங்கராசுவும் மிகச்சிறந்த திரை
உரையாடல் எழுதிப் புகழ்பெற்றார். இரத்தக் கண்ணீர் இன்று
வரை இவருக்குப் புகழ் சேர்க்கிறது.
அவரை அடுத்து, திரைக்கதை உரையாடல் எழுதிய ஸ்ரீதர்
கரடுமுரடான வசனங்களாக இல்லாமல் எளிய தமிழில்
சுருக்கமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுதினார். மக்கள்
வரவேற்பை இத்தகைய மொழிநடை பெற்றது. ஸ்ரீதர் எழுதிய
முதல் நாடகமான ரத்தபாசம் அவரது முதல் திரைப்படமாகவும்
வந்தது. அதை அடுத்து அவர் கதை வசனம் எழுதி வந்த படம்
எதிர்பாராதது என்ற திரைப்படம்.
காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான
எஸ்.டி.சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்ற நாடகம் வீர
வசனங்களுக்குப் பெயர் பெற்றது. கல்கியின் கள்வனின் காதலி
கதைக்குத் திரை உரையாடல் எழுதும் பொறுப்பு இவருக்குக்
கிடைத்தது.
இல்லறஜோதி என்ற திரைப்படத்திற்குக் கண்ணதாசன்
எழுதிய வசனம் இலக்கிய ரசனை ததும்பும் வசனமாக நின்று
தனி முத்திரை பதித்தது. அவர் திரைப்படங்களுக்கு எழுதிய
பாடல்கள் கருத்துச் செறிவும் கவிதை நயமும் கொண்டு எளிய
நடையில் அமைந்தன. எனவே ரசிகர்களுக்கு இவரது பாடல்கள்
மிகவும் பிடித்தன.
புராணப் படங்களுக்குத் தெளிவாகவும் எளிமையாகவும்
வசனம் எழுதி மக்களை ஈர்த்தவர் ஏ.பி. நாகராஜன், எளிய
வசனங்களும் இப்படங்கள் வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்
ஆகும்.
புராணக் கதைகளைத் திரைப்படமாக்கும் முறையினின்று
மாற்றி, சமூகக் கதைகளைக் கொண்டு வந்த பெருமை சக்தி
கிருஷ்ணசாமிக்கு உரியது. வீரபாண்டியக் கட்டபொம்மன்
திரைப்படத்திற்கு வீரவசனம் எழுதிய பெருமை இவருக்கு
உண்டு.
கருத்தாழம் மிக்க வசனங்களை எழுதிப் புகழ் பெற்றவர்
ஆரூர்தாஸ். இவர் வாழவைத்த தெய்வம் என்ற படத்திற்கு
எழுதிய வசனம் இப்படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது.
சிறந்த வசனகர்த்தா என்ற விருதினைப் பெற்றவர் இவர்.
வீரத்திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள்
போன்ற பல படங்களுக்கு இவரது வசனத்தால் பெருமை
உண்டு.
குடும்பச் சிக்கல்களை மையப் படுத்திய கதைகளையும்
உரையாடல்களையும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாக
அமைத்த பெருமை கே.எஸ். கோபால கிருஷ்ணனைச்
சாரும். குமுதம், சாரதா, தெய்வத்தின் தெய்வம், கற்பகம்,
படிக்காத மேதை, கைகொடுத்த தெய்வம், தெய்வப் பிறவி
போன்ற பல திரைப்படங்களில் இவர் வரைந்த உரையாடல்கள்
திரைத் தமிழுக்குப் பெருமை சேர்த்தவை.
புதுமையான கதைக் கருக்களையும் புதிய பாணி
உரையாடல்களையும் திரைப்படங்களில் புகுத்தியவர்
கே.பாலச்சந்தர் ஆவார். நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர்
சந்திரகாந்த், புன்னகை, தாமரை நெஞ்சம் போன்ற பல
படங்களில் இவரது தமிழ் உரையாடல் மிகச் சிறப்பாக
அமைந்திருந்தது.
பாக்கியராஜ் மிகச் சிறந்த உரையாடல் ஆசிரியர் ஆவார்.
இத்துறையில், எம்.எஸ். சோலைமலை, ஜி.பாலசுப்ரமணி,
ஆர்.கே. சண்முகம், பாலமுருகன், துறையூர் மூர்த்தி,
ஏ.எல். நாராயணன், மணிவண்ணன், டி. ராஜேந்தர்,
லியாகத் அலிகான் போன்றோரும் குறிப்பிடத் தக்கவர்கள்
ஆவர்.
|