5.3 தென்கிழக்கு நாட்டுச் சொற்கள்

    பழங்காலத்திலேயே தமிழ்நாடு பிற நாடுகளுடன் வாணிகத்
தொடர்பு கொண்டிருந்தது. குறிப்பாக, கிழக்குப் பகுதியில் கடல்
வாணிபம் மூலமாகத் தொடர்பு பெருகியது. பிற்காலச்
சோழர்கள் காலத்தில் கடல் படையெடுப்புகளும் இடம்
பெற்றன. இவற்றால் தமிழ் மொழியும் பண்பாடும் கடல்
கடந்தும் சென்றன. அதுபோலவே, பிற நாட்டுச் சொற்களும்
தமிழில் கலந்து வழங்கப்பட்டன.

• சிங்களம்

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழர்கள் இலங்கையோடு
தொடர்பு கொண்டிருந்தனர். பழங்காலத்தில் இலங்கையில்
ஆண்ட எலாரா போன்ற மன்னர்களுள் சிலர் தமிழராவர்.
இலங்கையுடனான இத்தகைய உறவின் விளைவாகச் சில
சிங்களச் சொற்கள் தமிழில் வந்து புகுந்தன. ஈழம், முருங்கை,
பில்லி, அந்தோ
போன்ற சொற்கள் சிங்களத்திலிருந்து
தமிழுக்கு வந்தவை.

• மலாய்

    சவ்வரிசி என்பதிலுள்ள சவ் என்பது மலாய் மொழிச்
சொல்லான sagu என்பதிலிருந்து வந்ததாகும். கிடங்கு
கிட்டங்கி
என்னும் சொற்கள் gadong என்ற மலாய்ச்
சொல்லிலிருந்து வந்தவை. மலாக்கா, மணிலா என்னும் இடப்
பெயரிலிருந்து வேர்க்கடலையைக் குறிக்கும் மல்லாக்
கொட்டை, மணிலாக் கொட்டை
ஆகிய பெயர்கள்
ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.

• சீனம்

    சீனர்களோடும் நமக்குத் தொடர்பு உண்டு. தமிழ்
மாலுமிகளுடன் சீனர்கள் தொடர்பு கொண்டிருந்தனர்.
யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார். படகு
வகையைச் சார்ந்த சாம்பான் என்ற சொல், பெரிய
மண்கலத்தைக் குறிக்கும் காங்கு என்ற சொல், பீங்கான் என்ற
சொல் ஆகியன சீனத்திலிருந்து நமக்குக் கிடைத்த சொற்கள்.