3.6 பாண்டியரது ஓவியக் கலை

பாண்டியர்கள் பல்லவர்களைப் போலச் சிற்பக் கலையில்
ஆர்வம் உடையவர்களாக இருந்தனரேயன்றி ஓவியக் கலையில்
ஆர்வம் உடையவர்களாக இல்லை. பாண்டியர் படைத்த
ஓவியங்களில் அழிந்தவை போக எஞ்சியுள்ளவை சித்தன்ன
வாசல், திருமலைப் புரம்
ஆகிய இரு இடங்களில்
உள்ளவை மட்டுமே ஆகும். இவை இரண்டும் முற்காலப்
பாண்டியர் கால ஓவியங்கள் ஆகும்.

3.6.1 சித்தன்ன வாசல் ஓவியம்

புதுக்கோட்டைக்கு வடமேற்கில் பதினைந்து கி.மீ. தூரத்தில்
அமைந்துள்ள சித்தன்ன வாசல் என்னும் ஊரில் உள்ள சமணக்
குகையில் ஓவியங்கள் அமைந்துள்ளன. இவற்றைப் பல்லவரது
ஓவியம் என்றே பலரும் பல காலமும் கருதியிருந்தனர்.
அண்மைக் காலத்தில்தான் இவை முற்காலப் பாண்டியரது
காலத்தில் தீட்டப் பட்டவை எனக் கண்டறியப் பட்டுள்ளன.
கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அவனி சேகரன்
என்ற சீமாற சீவல்லபன் காலத்தில் (கி.பி.830 - 862)
இளங்கௌதமன்
என்னும் சமண சமயாசிரியர் மண்டபத்தைப்
புதுப்பித்து ஓவியங்களை வரையச் செய்திருக்கக் கூடும் என அறிகிறோம்.


சித்தன்ன வாசல்


மண்டபத் தூண் ஓவியம்

இந்தக் குடைவரையின் நடு மண்டபத்தின் மேல் விதானத்தில்
தீட்டப் பட்டுள்ள தாமரைத் தடாகம் இயற்கைச் சூழலைச்
சித்திரிப்பதாய் அமைந்துள்ளது. அரும்பு முதல் மலர் வரை
பல்வேறு நிலைகளில் உள்ள அல்லி, தாமரை பசுமையான
இலைகள் நீர்த் தடாகம் முழுவதும் நீரே தெரியாத அளவிற்குப்
பரந்து விரிந்துள்ளன. மீன்கள் துள்ளித் திரிதல், யானைகள்
தாமரைத் தண்டுகளை ஒடித்து விளையாடுதல், எருமைகள் நீரில்
மூழ்கி மகிழ்தல், அன்னங்கள் நீரில் நடம் புரிதல் ஆகிய
காட்சிகள் அழகுடன் தீட்டப் பட்டுள்ளன. தடாகத்தின் ஒரு
பக்கம் இருவர் கோவணாண்டிகளாய் அமைதி தவழும்
முகத்துடன் நிற்கிறார்கள். இந்த ஓவியக் காட்சிகளைச் சமண
சமயத் தொடர்புடையன எனக் கருதுவர்.

மண்டபத் தூண்களில் பல     அழகிய ஓவியங்கள்
காணப்படுகின்றன. ஒரு தூணில் அரசரது உருவமும் அவருக்குப்
பின்னிருந்து பார்ப்பது போல அரசியின் உருவமும்
வரையப் பட்டுள்ளன. அரசருடைய மகுடமானது அழகிய
ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அவரது காதுகளில்
உள்ள குண்டலங்களும் கழுத்தணிகளும் அவ்வுருவம் அரசரின்
உருவமே என்பதை உறுதி செய்கின்றன. இவர்கள் இருவரும்
பாண்டிய மன்னரும் அரசியுமாக இருக்கலாம். இவர்களுக்கு நிழல்
அளிக்கும் வகையில் குடை ஒன்று காணப்படுகிறது. நுழைவாயில்
தூண்களில் உள்ள ஆடல் மகளிரின் ஓவியத்தில் புருவ வளைவுகள், முடியலங்காரம், ஆபரணங்கள், முக பாவனைகள்,
உடல் வனப்பு முதலியன மிக அழகாக அமைந்துள்ளன.

இந்த ஓவியத்தைக் கி.பி. 20    ஆம் நூற்றாண்டில்
டி.ஏ.கோபிநாத ராவ் என்பவரும் ஜோவோ துப்ரயல்
என்பவரும் கண்டறிந்தனர். மதுரைக்கு அருகில் உள்ள ஆனை
மலை
யிலும், கீழ வளவு, கீழக் குயில்குடி ஆகிய இடங்களிலும்
சிதைந்து போன ஓவிய எச்சங்கள் காணப்படுகின்றன.

3.6.2 திருமலைப் புரம் ஓவியம்

திருமலைப் புரம் திருநெல்வேலி     மாவட்டம் சங்கரன்
கோயிலுக்கு அருகில் உள்ள ஊர் ஆகும். இங்குள்ள குகையின்
மேற்கூரையில் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை 1935 ஆம்
ஆண்டு ஜோவோ துப்ரயல் கண்டறிந்தார். இந்த ஓவியத்தின்
பெரும்பகுதி சிதைவடைந்து உள்ளது. இவ்வோவியம் முற்காலப்
பாண்டியர் காலத்தைச் சார்ந்தது.

கூரையின் நடுவில் பூத கணங்கள் காணப்படுகின்றன. இவை
கோடுகளால் நேர்த்தியாக வரையப் பட்டுள்ளன. பிரம்மனது
உருவமும் அருகில், சிம்மத்தின் மேல் இனம் காண இயலாத ஓர்
உருவமும் காணப்படுகின்றன. இவ்வோவிய உருவங்கள்
ஆபரணங்கள் அதிகம் இன்றித் தீட்டப் பட்டுள்ளன. ஆண்களும்
பெண்களும் கூட்டமாக வரையப் பட்டுள்ளனர். ஆண்கள் நீண்ட
தாடியுடன் தோள்களின் மீது காட்டுப் பன்றியைச் சுமந்து வரும்
வேடர்களாகக் காட்சி அளிக்கின்றனர். மேலும் இதில் அன்னம்,
கொக்கு, தாமரை மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியன
தீட்டப் பட்டுள்ளன. மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை
போன்ற வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.