4.3 பிற்காலச் சோழர் சிற்பக் கலை

பிற்காலச் சோழர் காலத்தில் பேரரசு விரிவாக்கம்
பெற்றதனால் அவர்களது காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மிக
உயரமான விமானங்களுடன் கட்டப்பட்டன என்பதனை முன்னர்க்
கண்டோம். அத்தகைய விமானங்களில் வைக்கப்பட்ட
சிற்பங்களும் பெரிய அளவில் அமைந்தன. பிற்காலச் சோழர்
கோயில்களுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகத் தஞ்சைப்
பிரகதீசுவரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்
இராசேந்திரசோழீசுவரர் கோயில், திரிபுவனம் கம்பகேசுவரர்
கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்
ஆகியவற்றைக்
கொள்ளலாம்.

4.3.1 தஞ்சைப் பெரிய கோயிற் சிற்பங்கள்

தமிழகத்தில் உள்ள சைவக் கோயில்களிலேயே மிகப் பெரிய
விமானம் உடையது பெரிய கோயிலாகும். இக்கோயிற்
கருவறையில் உள்ள சிவலிங்கமும் மிகப் பெரிதாக உள்ளது.
தமிழகக் கோயில்களில் மிகப் பெரிய சிவலிங்கங்கள்
இந்த தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலிலும், கங்கைகொண்ட
சோழபுரத்துக் கோயிலிலும் அமைந்துள்ளன.


தஞ்சைப் பெரிய கோயில்

பெரிய கோயிற் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின்
உயரத்திற்கு ஏற்பக் கருவறையின் முன்னே இருபுறமும் துவார
பாலகர் சிற்பங்கள் சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில்
அமைக்கப் பட்டுள்ளன.

கருவறைச் சுவரில் பெரிய அளவிலான திரிபுராந்தகர்
சிற்பங்கள் பல்வேறு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அவை
இன்ன காரணத்திற்காக அமைக்கப் பட்டிருக்கலாம் என்பதை
முன்னரே கண்டோம். மேலும் கோட்டச் சிற்பங்களாக
இடம்பெற்றுள்ள கஜ லட்சுமி, சரசுவதி, கால சம்ஹார மூர்த்தி
ஆகிய உருவங்கள் மிக அழகாக அமைந்துள்ளன. தெற்குச்
சுவரில் உள்ள நடராசர் சிற்பம் இயக்க நிலையில் காணப்படுகிறது.
இச்சிற்பம் செப்புத் திருமேனியின்     அமைப்பில் மிக
மென்மையானதாகக் காணப்படுகிறது. (கஜ லட்சுமி - தாமரையில்
அமர்ந்துள்ள திருமகளுக்கு, இருபுறமும் நின்று இரு
யானைகள் குடத்தில் நீரெடுத்து ஊற்றுவது போன்ற அமைப்பு)

  • கரணச் சிற்பங்கள்


  • கருவறையின் உட்சுவரில் 108 பரத நாட்டியக் கரணங்கள்
    சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தாராசுரம் ஐராவதேசுவரர்
    கோயிலிலும் இத்தகு கரணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
    ஆனால் பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ள 108 கரணச்
    சிற்பங்களிலும்    சிவபெருமானே     நடனம் ஆடுவதாக
    அமைக்கப் பட்டுள்ளது சிறப்பானதாகும். பிற்காலச் சோழர்
    கோயில்கள் பலவற்றிலும் இத்தகு கரணச் சிற்பங்களைக்
    காணலாம். சோழர்கள் காலத்தில் பல்வேறு கலைகளுக்குச்
    சிறப்பிடம் அளிக்கப் பட்டிருந்ததை இதன் மூலம் அறியலாம்.


    கரணச் சிற்பம்


    4.3.2 கங்கை கொண்ட சோழபுரம் கோயிற் சிற்பங்கள்

    இராசராசனது மகன் இராசேந்திரனால் கட்டப்பட்ட கங்கை
    கொண்ட சோழபுரத்துக் கோயிலானது தஞ்சைப் பெரிய
    கோயிலைப் போன்று சிற்பக் கலையழகு மிக்கதாகும்.
    இக்கோயிலில் இடம்பெற்றுள்ள நடராசர், கங்காதரர், திருமால்,
    பிரம்மா, கால சம்ஹாரர், சண்டேச அனுக்கிரக மூர்த்தி,
    கலைமகள், நர்த்தன கணபதி, ரிசபாந்திக அர்த்த நாரி ஆகிய
    சிற்பங்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. இச்சிற்பங்களில்
    உலகப்புகழ் பெற்ற சிற்பங்களாகக் கலைமகள் சிற்பமும்,
    சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பமும் கருதப்படுகின்றன.


  • சண்டேச அனுக்கிரக மூர்த்தி


  • இராசராசன் தன் வெற்றிகளின் நினைவாகத் திரிபுராந்தகர்
    சிற்பங்களைப் பெரிய கோயிலில் அமைத்தது போல.
    இராசேந்திரன் சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தை
    இரண்டு விதமான     கருத்துகளின்     அடிப்படையில்
    அமைத்துள்ளான். சிவபெருமான் தனக்குப் பால் முழுக்குச்
    செய்ததைத் தடுத்த தன் தந்தையின் கால்களை வெட்டிய
    சண்டேசருக்கு அனுக்கிரகம் செய்தல் என்ற புராண
    அடிப்படையிலான கருத்து ஒன்று. மற்றொன்று இராசேந்திர
    சோழன் கங்கைவரை சென்று வெற்றி பெற்றதனைப் பாராட்டிச்
    சிவபெருமானே அம்மன்னனுக்குப்     பரிவட்டம் கட்டி
    வாழ்த்துவதாக உள்ள கருத்து.

  • கலைமகள்


  • கலைமகள் சிற்பம் இரண்டு கரங்களோடு அமைந்துள்ளது.
    கால்கள் இரண்டையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படும்
    கலைமகள்     தன்     கரங்களில் மலர்ச் செண்டுகளோடு
    காணப்படுகிறாள். தலையில் காணப்படும் கரண்ட மகுடம் அழகு
    வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. கழுத்திலும், காதிலும்
    அணிகலன்கள் அழகு செய்கின்றன. அருகில் இரண்டு பெண்கள்
    கையில் சாமரத்துடன் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.
    இவர்கள் இருவருக்கும் மார்பிலே கச்சை காணப்படவில்லை.
    ஆனால் கலைமகளுக்கு மார்புக் கச்சை உள்ளது. அணிகலன்களும்
    ஆடையும் குறைந்த நிலையில் இயற்கையான அழகுடன் விளங்கும்
    கலையன்னையின் சிற்பம், கண்டு இன்புறத் தக்கதாகும்.

  • ரிசபாந்திக அர்த்த நாரி


  • கோட்டச் சிற்பங்களுள் சிறப்பான நிலையில் காணப்படும்
    அடுத்த சிற்பம் ரிசபாந்திக அர்த்த நாரி சிற்பம் ஆகும்.
    சிவபெருமானின் உருவங்களில் அர்த்த நாரி என்பது சிவனும்
    சக்தியும் இணைந்த அமைப்பாகும். இது இவ்வுலகம் இயங்க ஆண்
    பெண் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.
    ரிசபாந்திகர் என்பது சிவபெருமான் தனது வாகனமான இடபத்தின்
    (எருது) மீது சற்றே சாய்ந்த நிலையில், தனது வலக்கையினை
    இடபத்தின் மீது வைத்திருக்கும் வடிவம் ஆகும். இச்சிற்பம்
    சிற்பியின் கைவண்ணத்திற்கும் பிற்காலச் சோழர் சிற்பங்களின்
    அழகிற்கும் உதாரணமாக விளங்குகிறது.


    அர்த்த நாரி


  • ஹரிஹரர்


  • நின்ற நிலையில் வடிக்கப்பட்டு உள்ள ஹரிஹரர் (சிவனும்
    திருமாலும் சரிபாதியாக இணைந்த உருவம்) சிற்பத்தில் நான்கு
    கரங்கள் காட்டப் பட்டுள்ளன. பின்னிரு     கரங்களில்
    சிவபெருமானுக்கு உரிய வலப்பாகத்தில் வலக்கரத்தில் மழுவும்,
    திருமாலுக்கு உரிய இடப்பாகத்தில் இடக் கரத்தில் சங்கும்
    அமைந்துள்ளன. முன் இரு கைகளில் வலக்கை அபயத்திலும்
    இடக்கை கடிஹஸ்தத்திலும் உள்ளன. இங்கு இடம்பெறும்
    சிற்பங்களில் நர்த்தன கணபதி, அர்த்த நாரி, ஹரிஹரன்,
    தட்சிணா மூர்த்தி, நடராசன், கங்காதரர், சுப்பிரமணியர் என
    எல்லாச் சிற்பங்களுமே அதிக உயரம் இன்றி அழகுறச்
    செதுக்கப் பட்டுள்ளன.


    ஹரிஹரர்


  • தட்சிணா மூர்த்தி


  • தட்சிணா மூர்த்தி மேருவின் மேல் அமர்ந்த நிலையில்
    இடக் காலை மடக்கி வலக் காலின் மேல் வைத்துக்
    காணப்படுகிறார். கால் முயலகன் மீது உள்ளது. நான்கு கரங்களில்
    பின்னிரு கைகளில் உத்திராட்ச மாலையும் பூச்செண்டும் உள்ளன.
    முன்னிரு கரங்களில் வலக் கரம் சின்முத்திரை காட்டுகிறது; இடக்
    கரத்தினைக் காலில்     வைத்துக்     கருணை வடிவாகக்
    காணப்படுகிறார்.
  • நடராசர்


  • நடராசர் சிற்பத்தில் நடராசர் சிரித்த முகத்துடன் ஆடுவது
    அழகுடையதாகும். நடராசருக்குக் கீழே சிவ கணங்கள் மேளம்
    தட்டுகின்றன. சில இசைக் கருவிகளை இசைக்கின்றன. அவற்றிற்கு
    அருகே காரைக்கால் அம்மையார் பேயுருவமாக அமர்ந்திருப்பது
    போல் செதுக்கப்பட்டு     உள்ளது.     முயலகன் சிற்பம்
    சிவபெருமானின் காலுக்கடியில் கையில் நாகத்தைப் பிடித்தபடி
    காட்டப்பட்டு உள்ளது. சிவபெருமானுக்கு அருகே சிவகாமியின்
    நடன உருவம் சிறிய உருவமாக இடம்பெற்று உள்ளது.


    நடராசர்


  • திருமால்


  • திருமால் சிற்பம் நின்ற நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக
    நான்கு கரங்களுடன் காட்டப்பட்டு உள்ளது. பின்னிரு கரங்களில்
    சங்கும் சக்கரமும் உள்ளன. முன்னிரு கரங்களில் வலக் கரம்
    அபய     முத்திரையிலும்     இடக் கரம் கடிஹஸ்தத்திலும்
    காணப்படுகின்றன. பூணூல் அழகுறக் காட்டப்பட்டு உள்ளது.
    தலையில் கிரீட மகுடம் உயரமாகவும் வேலைப்பாடுகளுடனும்
    அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் கையில்
    மலர்ச்செண்டுடன் இருபுறமும் காணப்படுகின்றனர்.

    4.3.3 தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிற் சிற்பங்கள்

    இரண்டாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த தாராசுரம்
    ஐராவதேசுவரர் கோயிற் சிற்பங்களில் கலையழகு மிக்க
    சிற்பங்களாகத் திரிபுராந்தக மூர்த்தி, அர்த்த நாரி, கஜ சம்ஹார
    மூர்த்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் சிவபெருமானின்
    பிச்சாடனர் கோலச் சிற்பத் தொகுதி மிக அழகாக
    அமைந்துள்ளது. இச்சிற்பத் தொகுதியில் ரிசி பத்தினிகளது
    சிற்பங்களும் காட்டப்பட்டு உள்ளன. தாருகா வனத்து
    முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்தவர் பிச்சாடனர்.
    திருமால் வராகமாக வந்த பொழுது அவரைக் கொன்று அவரது
    முதுகெலும்பைக் கையில் தண்டமாக ஏந்தியவர் கங்காளர். இந்த
    இரண்டு கருத்தமைதிகளை ஒரே சிற்பத்தில் இங்குப் படைத்துக்
    காட்டியுள்ளான் சிற்பி. ஆனால் இச்சிற்பம் தற்பொழுது தஞ்சைக்
    கலைக் கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.


    தாராசுரம் ஐராவதேசுவரர்


  • கஜ சம்ஹாரர்


  • கருவறையின் வடக்குப் பக்கம் இருப்பது கஜ சம்ஹார
    மூர்த்தி சிற்பம். வேழம் உரித்த நாயகன் எனத் தேவாரத்தில்
    போற்றப்படும்     சிவபெருமான்     இயக்க நிலையில்
    காட்டப்பட்டு உள்ளார்; எட்டுக் கரங்களுடன் நடனக் கோலத்தில்
    வேழத்தை உரிப்பது போல் செதுக்கப்பட்டு உள்ளார். இவரது
    வேகமான ஆற்றலைக் கண்டு பார்வதி தேவி பயந்த நிலையில்
    அருகே சிறிய உருவமாகக் காட்டப்பட்டு உள்ளார். சோழரது
    சிற்பக் கலை தமிழகச் சிற்பக் கலை வரலாற்றில் சிற்பக்
    கலையின் பொற்காலம்
         என்று கூறும் அளவிற்கு
    வளர்ந்திருந்தது. முற்காலச் சோழர் சிற்பங்கள் மிக அழகுடனும்
    செய்திறனுடனும் காணப்படும் அளவிற்குப் பிற்காலச் சோழர்களது
    சிற்பங்களில் அத்தகு கலைக் கூறுகளைக் காண முடியவில்லை
    என்பது கலை வரலாற்று அறிஞர்களது கூற்றாகும். பிற்காலச்
    சோழர்கள் வானளாவிய விமானங்களைக் கட்டுவதில் கவனம்
    செலுத்தியதால் கட்டடக் கலை அளவிற்குச் சிற்பக் கலையில்
    ஆர்வம் காட்டவில்லை என்பது விளங்குகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. மிகப் பெரிய விமானங்களைக் கொண்ட கோயில்கள்
    எவை?

    விடை

    2. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு இராசராசன் இட்ட பெயர்
    என்ன?

    விடை

    3. சோழர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள் சிலவற்றைக்
    கூறுக.

    விடை

    4. கண்டச் சிற்பங்கள் பற்றி எழுதுக.

    விடை

    5. கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச அனுக்கிரக
    மூர்த்தி சிற்பத்தின் முக்கியத்துவம் என்ன?

    விடை