விசயநகர-நாயக்கர்கள் கோயில்களில் திருவிழாக்கள்
|
||
5.1.1 மண்டபச் சிற்ப அமைப்பு | ||
மண்டபச் சிற்பங்கள் எனும் அமைப்பு விசயநகர- நாயக்கர்களுக்கே உரிய தனிப்பட்ட கலைப் பாணியாகும். இவர்களுடைய மண்டபங்களில் சிற்பங்கள் இரண்டு விதமாக அமைக்கப் பட்டுள்ளன. ஒன்று கதை தொடர்புடைய சிற்பங்களை நேருக்கு நேராக எதிரெதிர்த் தூண்களில் அமைப்பது. மற்றொன்று பக்கவாட்டுத் தூண்களில் தொடர்புடைய சிற்பங்களை அமைப்பது. முதலாவதாகக் கூறப்பட்ட அமைப்பிற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கம்பத்தடி மண்டபச் சிற்பங்கள், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆயிரக்கால் மண்டபச் சிற்பங்கள், அழகர் கோயில் கல்யாண மண்டபச் சிற்பங்கள், போன்றவற்றைக் கூறலாம். பக்கவாட்டுத் தூண்களில் தொடர்புடைய சிற்பங்கள் அமைக்கப் பட்டிருப்பதற்கு எடுத்துக் காட்டாகத் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் மண்டபச் சிற்பங்களைக் கூறலாம். சிற்பங்கள் புராணக் கதைகளையோ, இதிகாசங்களையோ, நாட்டுப்புறக் கதைகளையோ காட்டுவனவாக அமையும். இவை தவிர, அம்மண்டபங்களைக் கட்டிய அரசர்களின் ஆளுயரச் சிற்பங்களை அவற்றில் அமைக்கும் மரபும் உண்டு. |