2.5 குறவஞ்சி

பிற சிற்றிலக்கிய நாடக வடிவங்கள் போலவே குறவஞ்சியும்
தனித்தன்மை வாய்ந்த நாடக இலக்கியமாக விளங்குகிறது.
குறவஞ்சி என எப்படிப் பெயர்பெற்றது என்பதை அறிய ஆர்வம்
எழலாம் ! குறத்தியின் சமுதாய வாழ்வின் அடிப்படையில் இஃது
அமைந்துள்ளதால் குறவஞ்சி எனப் பெயர் பெறலாயிற்று. குறம்,
குறத்திப்பாட்டு போன்றவற்றோடு இது தொடர்பு கொண்டு
விளங்கும் வண்ணம் அமைந்துள்ளது.

மீனாட்சியம்மைக்குறம்,     திருக்குற்றாலக்     குறவஞ்சி,
இலட்சனைக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி,
பெத்லகேம் குறவஞ்சி போன்றவை குறிப்பிடத்தக்க குறவஞ்சி
நாடகங்களாகும்.
2.5.1 தோற்றம்

குறவஞ்சியின் தோற்றம் 17 ஆம் நூற்றாண்டில் அமைந்தது.
பொதுவாக, சிற்றிலக்கியங்களின் தோற்றம் இக்காலக்கட்டத்தைச்
சார்ந்து வந்துள்ளது.

முற்காலத்தில் குறத்திப்பாட்டு என்ற பாடல் வடிவம் வழங்கி
வந்துள்ள நிலையை நாம் அறிவோமல்லவா ! இக்குறத்திப்பாட்டே
குறவஞ்சிக்கான முன்னோடியாக     விளங்கியது எனலாம்.
இசைப்பாடல்கள் கலந்து, நாடகத்தன்மை மிளிரும் பல
குறவஞ்சிகள் தமிழகத்தில் தோற்றம் பெறலாயின.

பலவளஞ்சேர் குறவஞ்சி நாட கத்தைப்
படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பயனுண்டாமே

(திருக்குற்றாலக் குறவஞ்சி நூற்பயன். 8)

என்னும் பாடல்வரிகள் குறவஞ்சியின் இலக்கிய வளத்தையும்
நாடகத் தன்மையையும் உயர்வாகக் குறிப்பிடுகிறதன்றோ !

அன்று முதல் இன்று வரை மக்கள் மனத்தைக் கவர்ந்த நாடக
இலக்கியமாக குறவஞ்சி நாடகங்கள் விளங்குகின்றன. இதற்குக்
காரணம், மக்களுக்குத் தேவையான சந்தப்பாடல்களும், நாடகக்
கூறுகளும் கொண்டு குறவஞ்சி தோன்றி வளர்ந்தது தான்.

முதல் குறவஞ்சி நாடகம் என்னும் பெருமையினை
மீனாட்சியம்மை குறம் பெறுகிறது. இது 17 ஆம் நூற்றாண்டில்
குமரகுருபரரால் இயற்றப்பட்டது.
2.5.2 வடிவம்

அமைப்பு நிலையில் குறவஞ்சி நாடகங்கள் யாவும் ஒரே
வகையில் தான் உள்ளன என்பதை நாம் மனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டும். கால மாற்றத்திற்கேற்பவும், இடத்திற்கு
ஏற்பவும் கதையமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
கலை மாற்றத்துக்கு உட்பட்டது தானே !

கட்டியங்காரன்     வருகை     இந்நாடகத்தில் இடம்
பெற்றுள்ளது. காப்பும், தோடயமும், மங்களமும் கூறப்பட்ட
பின்னர் கட்டியங்காரனின் வருகை அமையும்.

கட்டியங்காரன், ஆடியபடி பாட்டுடைத் தலைவன் பவனி
வரும் நிலையை முதலில் கூறிச் செல்வான்.

தலைவன் பவனி வருகையில் தலைவி ஒருத்தி அவனைக்
கண்டு காதல்     கொள்வதுடன்     தலைவனின் உடல்
வருணனைகளையும் கூறி நிற்பாள்.

தலைவியின் பெயரை, குறவஞ்சி நூல்கள் கதைக்கேற்ப
ஒவ்வொரு வகையில் கூறி நிற்பதைக் காணலாம்.

மதனவல்லி, வசந்தவல்லி, காமரசவல்லி, தெய்வ மோகினி,
இராசமோகினி, மோகனவல்லி, மோகனாங்கி, மதனரதி போன்ற
பல பெயர்கள் குறவஞ்சி நாயகியைக் குறிப்பனவாக உள்ளன.

தலைவன்பால் தன்னை இழந்து வாழும் தலைவிக்கு,
குறத்தியின் அறிமுகம் கிடைக்கிறது. தலைவியின் கையை விரித்து,
குறத்தி சொல்லும் எதிர்கால நிகழ்வுகள் குறித்த செய்தி நாடக
வடிவத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக உள்ளது.

குறவஞ்சி நாடகத்தின் இரண்டாவது பகுதியில் குறத்தியின்
கணவனான குறவனின் அறிமுகம் நிகழ்கிறது. குறத்தியை நீண்ட
இடைவெளிக்குப் பின் அவன்     சந்திக்கும் காட்சியும்
இருவருக்குமிடையே நிகழும்     உரையாடலும் மிகவும்
சுவையானவை. இதோ ஒரு காட்சி .... !

சிங்கன் : பாதகி நீ என்னை விட்டுப்பிரிந்து
பரதேசம் போவானேன் - சிங்கி !

சிங்கி : பக்குவத்தில் ஒரு சக்களத்தி வாய்
பார்த்தும் இருப்பே னடா - சிங்கா?

(கும்பேசர் குறவஞ்சி. 108 - 109)

இவ்வாறு சுவையான நிகழ்வுகளும், திருப்பங்களும் குறவஞ்சி
நாடகத்தில் இடம் பெறுவதை நாம் காணலாம். இவை ஒரு
தேர்ந்த நாடகத்துக்கான வடிவைத் தந்து நிற்பதால் குறவஞ்சி
ஒரு இசை நாட்டிய நாடகமாக இன்றளவும் வாழ்ந்து வருகிறது.

வெண்பா, அகவல், விருத்தம், கொச்சகக் கலிப்பா, கட்டளைக்
கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுள்களும்
பொதுவாகக் குறவஞ்சி நாடகங்களில் இடம் பெறுகின்றன.

குறவஞ்சி நாடகம் குறித்து மு. வரதராசனார் பின்வருமாறு
குறிப்பிடுவார்.

அகவல், வெண்பா, கலிப்பா, கலித்துறை, விருத்தம் முதலிய செய்யுட்களோடு சிந்து, கீர்த்தனம் முதலிய இசைப்பாட்டுக்களும் இந்நாடகத்தில் அமைவதால் ஓசை நயமிக்குக் கேட்பவர்க்கு இன்பம் பயக்கும்

(மு. வரதராசன், இலக்கிய மரபு, பக். 95)


2.5.3 கதை

குறவஞ்சி நாடகங்களின் கதையமைப்பு மரபு சார்ந்த
பொதுவான கதையமைப்பே எனலாம்.

குறமகள் குறித்து நாம் சங்க இலக்கியம் முதற்கொண்டே
அறிவோம்.

அகவன் மகள் (குறுந்தொகை. 298)
நுண்கோல் அகவுநர் (அகநானூறு. 152)

போன்றவை குறமகள் குறித்த செய்திகளே ! இப்பாத்திரத்தின்
வளர்ச்சி நிலையிலான பாத்திரமே குறவஞ்சியின் முக்கிய கதைப்
பாத்திரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது எனலாம். தங்களது
எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆவல் கொண்டுள்ள உலகில்
குறத்தியின் பங்களிப்பு முக்கியமாகிறது. அவள் எல்லாக்
காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் தேவையான செய்திகளைத்
தருகிறாள். மேல் தட்டு, கீழ்த்தட்டுப் பாகுபாடின்றி அவள்
கருத்துக் கணிக்கிறாள். குறவஞ்சியில் வரும் தலைவியின்
காதலுக்கும் குறத்தியின் வார்த்தைகளே அடித்தளம் அமைத்துக்
கொடுத்துள்ள நிலை குறிப்பிடத்தக்க கதைக்கூறாக உள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறவஞ்சியின் முழுக்கதையும்
அமைந்துள்ளது.

தலைவனின் அழகில் தன்னை மறந்து தவிக்கும் தலைவியின்
கைகளில் தன்னுடைய மந்திரக் கோலைச் சுழற்றிக் குறி சொல்லும்
குறத்தி, இந்த மண்ணின் மக்கள் யாவரும் விரும்பும்
மனிதநேயமிக்கவள்.

தன்னைப் பிரிந்த கணவன் சிங்கன் தன்னோடு எதிர்வாதம்
செய்யும் போது அவள் பேசும் பேச்சுக்கள் சிறப்பு
வாய்ந்தவையாகும்.

பொதுவான கதையமைப்பு கொண்டிருந்தபோதும் கால
மாற்றத்திற் கேற்பவும்,     கதைப்     பொருளுக்கேற்பவும்
நாடகத்துக்குள்ள செய்திகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சான்றாகப் பிற்காலத்தில் வேதநாயகசாத்திரியார் எழுதிய
பெத்லகேம் குறவஞ்சி என்னும் நாடகத்தைக் கொள்ளலாம். இது,
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தை அடியொற்றி ஆக்கப்
பெற்றது. இந்நாடகம் கிறித்தவ மதக் கருத்துக்கள் உள்ளடங்கிய
பிரச்சார நாடகம் போல் உள்ளதை உணரலாம்.
2.5.4 கருத்து வெளிப்பாடு

குறவஞ்சி நாடகமானது தனித்தன்மை வாய்ந்த ஒரு
குறிப்பிட்ட பாத்திரத்தின் பெயரை மையப்படுத்தியுள்ள நாடகம்
என்பதை அதன் பெயரே நமக்குப் புலப்படுத்தும்.

குறமகளின் சமுதாயப் பங்களிப்பே தான் குறவஞ்சியின்
முக்கியமான கருத்தாக வெளிப்படுகிறது. தனக்கென எந்த
வரையறுக்கப் பெற்ற வாழ்வோ வளமோ இல்லாத நிலையிலும்
பிறர் மகிழ்ச்சிக்காகப் பாடுபடும் ‘குறமகள்’ என்னும் பாத்திரம்
ஒரு தன்னலமற்ற தன்மைக் குறியீட்டுப் பாத்திரம் ஆகும்.

கடவுளரின் மேன்மை குறித்துப் பேசப்பட்ட போதிலும் மனித
மனங்களின் போராட்டமே குறிப்பிடத்தக்க அளவில் இடம்
பெறுகின்றது. மிகச்சிறந்த குடியில் பிறந்தாலும் அவர்களுக்கும்
துயரங்கள் ஏற்படுமென்பதையும், மேல் தட்டில் உள்ளோரும்
கீழ்த்தட்டில் உள்ளோரும் தம் துயரங்களைப் பகிர்ந்து
கொள்ளுதல் நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும் என்பதையும்
குறவஞ்சி விளக்கி நிற்கிறது.
2.5.5 நாடக வழங்கு முறை

ஒரு சிறப்புமிக்க நாடகத்துக்கான நிலையில் குறவஞ்சி
படைக்கப்படுகிறது. அதன் இசை நயத்தாலும், குறமகள் போன்ற
பாத்திரப் படைப்பாலும் அது நாட்டிய நாடக வடிவிலே சிறப்புப்
பெறுகிறது. நாடகத் தொடக்கமே மிக்க எதிர்பார்ப்பினைத்
தோற்றுவிக்கும் வண்ணம் அமைந்து நிற்பதைக் காணலாம்.

மகிழ்ச்சியான சூழல் உருவாக்கப்படுகின்றது. தெருவழியே
தலைவன் வரவிருக்கிற செய்தி கட்டியங்காரன் மூலமாக
வெளிப்படுகிறபோது அவனைக் காண்பதற்காகக் கூடியுள்ள
பெண்களின் முகத்தில் கவலை படருகிறது. தலைவனின் அழகில் தங்கள் மனத்தைப் பறிகொடுத்ததால் வந்த கவலை அது. ஒரு அழகான காதல்     காவியத்துக்கான     சூழல் இங்கே
அமைந்துள்ளதல்லவா?

தொடர்ந்து தலைவனின் அழகில் மயங்கிய தலைவி உறும் கவலை. தலைவன் தனக்குக் கிடைப்பானா என்பதற்கு நல்ல பதில் கூறித் தேற்றும் குறத்தியின் தோற்றம். இரு வேறுபட்ட உணர்வு நிலைகள் ! நாடகப் படைப்பிற்கான நல்ல வளர்ச்சி நிலையல்லவா இது !

அடுத்து, குறத்தியின் தனிப்பட்ட சிக்கல், தனது கணவனான
சிங்கன் கேட்கும் கேள்விகள். சிங்கன் - சிங்கி உறவு மிக்க
அன்புடையது என்பது சுவைபட வெளிப்படு்கிறது.

வந்த வழியில் வந்தென் காலடி பிடிப்பாள்
மனங் கலங்கிச் சிறுக்கி சினந்து பற்கடிப்பாள்
பந்து முலை திறந்தே கைவிரல் நொடிப்பாள்
பயலே யென் றெத்தனை தோதகம் படிப்பாள்

(கும்பேசர் குறவஞ்சி - 103)

குறவஞ்சி நாடகங்கள் இக்காலத்திலும் தமிழகத்தில் மிகுந்த
செல்வாக்குப் பெற்று விளங்குவதை நாம் காணலாம்.
திருக்குற்றாலக்குறவஞ்சியினை அடியொற்றிப் பல நாட்டிய
நாடகங்கள் இன்றும் மிகச்சிறந்த குழுவினரால் நடத்தப் பெற்று
வருகின்றன.
2.5.6 நாடகப் பங்களிப்பு

குறவஞ்சி என்னும் நாடக வடிவம் எத்தகைய பங்களிப்பினை
நல்கியுள்ளது என்பதைக் காணலாம்.

அமைப்பு நிலையில் குறிப்பிடத்தக்க கதைமாந்தர்களுடன்
நாடகம் படைக்கப்பட்டுள்ள முறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அப்பாத்திரங்களின் குணநலன்கள் வெளிப்படும் வண்ணம்
சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளது.

தலைவன் - தலைவி ; சிங்கன் - சிங்கி என மாறுபட்ட
போராட்டங்களை இந்நாடகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வாழ்வுக்குத் தேவையான குறிப்பிடத்தக்க செய்திகளை
இந்நாடகம் வழங்கியுள்ளது. ஒருவர் துயரில் மற்றவர் பங்கு
பெறும் நிலையையும், இதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை
என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தலைவியின் கைகளைப்பற்றி     மந்திரக் கோலினால்
குறிசொல்லும் நிலையில் குறத்தி உயர்ந்த நிலையில்
சித்திரிக்கப்படுகிறாள். அவளது     வார்த்தைகள் மதிப்பு
மிக்கவையாகின்றன. நல்லவை யாரிடமிருந்து வந்தாலும் மதிக்கக்
கற்றுக் கொள்ள வேண்டுமென்னும் படிப்பினையையும் இந்நாடகம்
உணர்த்துகின்றது.

தமிழுக்கு இசை நாட்டிய நாடகம் என்னும் வகையில் ஒரு
தனித்துவம் வாய்ந்த இலக்கியமாகக் குறவஞ்சி உள்ளது. அது
நமக்கு நல்ல வரவுதானே !