தமிழகத்தில் மேற்கொள்ளப் பெற்ற புதிய முயற்சி்களில்
பலனாக,
பல நாடகக் குழுக்கள் புதிதாகத் தோன்றின. நல்ல
நாடகத்தைப் படைத்தளிக்கும் நோக்கில் திட்டமிடப் பெற்ற
குழுக்களாக அவை பரிணமிக்கத் தொடங்கின. அக்குழுக்கள்
யாவும் தமக்கெனத்
தனித்தனிக் குறிக்கோள் கொண்டு விளங்கின.
தமிழ் நாடகத்திற்கான நல்ல பங்களிப்பினை இலக்காகக்
கொண்டே அவற்றின் தோற்றம் ஏற்பட்டது. இவ்வகையில்
புதிதாகத் தோன்றிய நாடகக்
குழுக்கள் பொதுவாகச் செயல்பாட்டு
நிலையில் கீழ்க் காணுமாறு அமைந்திருந்தன. அவை
1) |
தொழில் முறை நாடகக் குழுக்கள் (Professional
Drama Troupes) |
2) |
பயில்முறை நாடகக் குழுக்கள் (Amateur Drama
Troupes) |
ஆகியனவாகும்.
5.2.1 தொழில் முறை நாடகக் குழுக்கள் |
நாடகத்தையே தொழிலாகக் கொண்டு நாடகம் நடத்தும் முறை
தொழில் முறை நாடகம் (Professional Dramas) எனப்படுகிறது.
இவ்வகை நாடகங்களைப் படைத்தளிக்கும் குழுக்கள் தொழில்
முறை நாடகக் குழுக்கள் எனப் பெயரிடப்பட்டன. இக்குழுக்கள்
இந்நாடகங்களின் மூலம் பெறப்படும் வருமானத்தை நம்பியே
செயல்படுவதாயின. நடிப்பை மூலதனமாகக் கொண்டு இவ்வகை
நாடகக் குழுக்களில் நடிக்கும் கலைஞர்கள், தொழில் முறை
நாடகக் கலைஞர்கள் (Professional Drama Artist)
எனப்படுகிறார்கள்.
தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்த குறிப்பிடத்தக்க தொழில்
முறை நாடகக் குழுக்கள் பின்வருமாறு: மதுரை தத்துவ
மீனலோசனி வித்துவ பால சபா, மதுரை பால மீனரஞ்சனி சங்கீத
சபா, மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா, மதுரை தேவிபால
வினோத சங்கீத சபா, ஸ்ரீ மங்களபால கானசபா, தேவி நாடக
சபா, பாலமனோகர சபா, ஸ்ரீ பரமானந்த பாஸ்கர ஓரிஜினல்
பாய்ஸ் கம்பெனி போன்றவைகளாகும்.
5.2.2 பயில்முறை நாடகக் குழுக்கள் |
வேறு தொழில் பார்த்துக்கொண்டு ஓய்வு நேரத்தில்
நாடகங்களைப் படைத்தளிக்கும் நிலை பயில்முறை நாடகம்
(Amateur Drama) எனப்படுகிறது. இவ்வகை நாடகங்களைப்
படைத்தளிக்கும்
நாடகக் குழுக்கள் பயில்முறை நாடகக் குழுக்கள்
(Amateur Drama Troupes) என்று அழைக்கப்படுகின்றன.
மேனாட்டுத்தாக்கம்
இது மேனாட்டு நாடகத் தாக்கத்தால் தமிழகத்தில் உருவான
நாடகமுறை எனலாம். குறிப்பாக, ஐரோப்பாவில் இவ்வகை
நாடகமுறை மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியது.
பயில்முறை நாடகங்களில் நடிக்கும் கலைஞர்கள் பயில்முறை
நாடகக் கலைஞர் (Amateur Drama Artist) என்று
அழைக்கப்பட்டனர்.
சம்பந்த முதலியாரின் பணி
தமிழ்நாட்டில் பயில்முறை நாடக முறையை அறிமுகம்
செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பம்மல்
சம்பந்த முதலியாரே
எனலாம். அக்கால கட்டத்தில் தமிழ் நாடகங்களில்
ஏற்படுத்தப்பட்டிருந்த
மோசமான காட்சியமைப்புகள் மீது சம்பந்த
முதலியார் வெறுப்புக் கொண்டிருந்தார். ஆங்கில
நாடகங்களைப்
பார்த்தும் படித்தும் வந்த சம்பந்த முதலியார் தமிழ் நாடகங்களை
மேனாட்டு உத்திகளைக் கொண்டு சீரமைக்க முன்வந்தார்.
இச்செயல்களால் பயில்முறை நாடக முறை தமிழகத்தில்
செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது.
படித்தோர் பங்கேற்பு
1891-ல் பயில்முறை நாடக முறையின் கீழ் சுகுணவிலாச சபை
என்னும் நாடகக் குழு தோற்றம் பெற்றது.
இதன் மூலம், பல
படித்த இளைஞர்கள் தமிழ் நாடகமேடைக்கு அறிமுகமாயினர்.
பரவுதல்
சுகுணவிலாச சபையைப் பின்பற்றித் தமிழகமெங்கும் பல
பயில்முறை நாடகக் குழுக்கள் தோன்றின. கும்பகோணம் வாணி
விலாச சபை, திருச்சி ரசிக ரஞ்சினி சபை, தஞ்சை சுதர்சன் சபை,
குமார
கான சபை முதலியன குறிப்பிடத்தக்க பயில்முறை நாடகக்
குழுக்களாகும்.
புதுப்பொலிவு
புதிய தொழில்முறை மற்றும் பயில்முறை நாடகக் குழுக்களின்
புனரமைக்கப் பெற்ற தோற்றம்,
புதுப்பொலிவினைத் தமிழ் நாடக
மேடைக்கு ஊட்டத் தொடங்கியது. களம் நன்றாக அமைந்தாலே
காட்சி நன்றாக அமையும். நல்ல நாடக சபைகளே நல்ல
நாடகங்களையும் வழங்க முடியும். இவ்வகையில்
புதுத் தெம்புடன்
தமிழ் நாடக மேடை பொலிவு பெறத் தொடங்கியது. |