6.7 அளவு அடிப்படை நாடக வகை |
முழுநாடக அமைப்பினின்று மாறுபட்டு, சுருக்கமாக, குறுகிய
கால அளவுக் கணக்கில் எழுதப்படும் அல்லது மேடையில்
நடிக்கப்படும் நாடகங்களும் காணக் கிடைக்கின்றன. இவ்வகையில்
நீளமான நாடகத்தை ‘முழுநாடகம்' (Full Play) எனவும், சிறு
நாடகத்தை ‘ஓரங்க நாடகம்‘ (One act play) எனவும்
அழைக்கலாம்.
முழுநாடகம் என்பது, நாடகத்தின் அடிப்படைக் கூறுகளான
கதையமைப்பு, சிக்கலான பாத்திரப்படைப்பு, நடிப்பு, பின்னணி,
உணர்ச்சி வெளிப்பாடு நிலைகள் யாவும் அமைந்து வரும். பல
அங்கங்கள் கொண்டிருக்கும். ஒர் அங்கத்தில் பல காட்சிகள்
இடம்பெறும்.
கால அளவில் இரண்டு மணி நேரமாவது மேடையில்
நடிக்கும் அளவிற்கு இஃது இருக்கும். நாடக ‘இடைவேளை‘
தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.
தமிழகத்தின் மிகப்பெரிய நாடகக் குழுக்கள் யாவும் முழு
நாடகங்களையே மிகுதியாகப் படைத்தளித்துள்ளன. எனினும் பல
மணி நேரங்கள் நாடகம் நடந்த நிலை மாறி, இன்றைய நிலையில்
முழு நாடகங்களும் ஒரு
குறிப்பிட்ட கால
வரையறைக்குட்படுத்தப்பட்டே படைக்கப் பெறுகின்றன எனலாம்.
ஒரு குறிப்பிட்ட பகுதியினை (கூறு) மட்டுமே வலியுறுத்தி
அமைந்து வரும் சிறிய நாடகத்தினை ஓரங்க நாடகம்
என்றழைக்கலாம்.
நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள தொடர்பினை ஒத்த
நிலையே, முழுநாடகத்திற்கும் ஓரங்க நாடகத்திற்கும்
உரியதெனலாம்.
பொதுவாக ஓரங்க நாடகங்கள் ஒற்றைக் காட்சியமைப்பில்
நடந்து முடிவதாக அமையும். ஓரங்க நாடகம் அழுத்தம்
மிக்கதாகச் சிறப்பானதாகப் பார்வையாளரைச் சென்று சேரும்.
எந்திரமயமான இன்றைய சூழலில் ஓரங்க நாடகங்கள்
மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. |