6: 1 பெண்மை போற்றும் பாரதியார்

மகாகவி பாரதியார் 'பெண்மை வாழ்க' என்றும், 'பெண்மை
வெல்க! 'என்றும் கூத்தாடியவர்;'பெண் விடுதலைக்காகக் கும்மி
வடிவில் குரல் கொடுத்தவர்; 'காற்றே!துன்பக் கேணியிலே
எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ?'

என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப்
பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில்
வடித்தவர்;'புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில்
உலா வரச் செய்தவர்; 'பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து
ஒரு தனிக்காவியம் படைத்தவர்; 'பாரதமாதாவுக்கு'நவரத்தின
மாலை
யும், 'திருப்பள்ளியெழுச்சியும், 'திருத்தசாங்க'மும்
இயற்றியவர். 'தமிழ்த் தாயாக' இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும்
சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும்
ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி,
முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின்
திருப்புகழைத் தம் 'தோத்திரப் பாடல்' களில்
நெஞ்சாரப்போற்றிப் புகழ்ந்தவர்; 'சுதந்திர தேவியினைத்'?
தொழுது வணங்கியவர்; 'பாரதி அறுபத்தா'றில் 'பெண் விடுதலை'
பற்றிப் பேசியவர்;தையலை (தையல்= பெண்) உயர்வு செய்!'என்று
'புதிய ஆத்திசூடி'
புனைந்தவர்.

'பாப்பாப் பாட்டு' வடிவில் சிறு பாப்பாவுக்கும் சீரிய பாடல்
ஆக்கித் தந்தவர்; 'பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா! '
என்று 'குயில் பாட்டில் வியந்து பாடியவர்; 'கண்ணன் பாட்டில்
'கண்ணம்மாவைக் கொண்டு வந்து நிறுத்தி, 'குழந்தை'யாகவும்
'காதலியாகவும் 'குலதெய்வ'மாகவும் கண்டு களித்தவர்; 'பூலோக
குமாரி'
, 'மனப்பெண்', 'கவிதா தேவி', 'கவிதா 'வள்ளி',
'அம்மாக் கண்ணு', 'மனைத் தலைவி'
ஆகியோருக்காக
வகைவகையாகப் பாட்டிசைத்தவர் ; 'வலிமை சேர்ப்பது
தாய்முலைப்பாலடா'
என்றும், 'மானஞ் சேர்க்கும் மனைவியின்
வார்த்தைகள்'
என்றும் ஒரே பாடலில் அடுத்தடுத்துத் தாயையும்
தாரத்தையும் ஒருசேர உயர்த்திக் கூறியவர்;'பெண் இனிது' எனத்
தம் வசன கவிதையிலும் விடாமல் பெண்மைக்குப் புகழாரம்
சூட்டியவர். இனி, கவியரசர் பாரதியாரின் படைப்புகளில்- கவிதை,
கட்டுரை, கதை ஆகியவற்றில் - இடம்பெற்றுள்ள பெண்ணியச்
சிந்தனைகளைக் காண்போம்.