6: 2 நிவேதிதை அம்மையார் - பாரதியின் வழிகாட்டி

பாரதியாரின் தனிவாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும்போது
புலனாகும் ஓர் உண்மை உண்டு. பாரதியார், காந்தியடிகள்
இருவருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு எத்துணை
முக்கியமானதோ, அத்துணை முக்கியமானது - பாரதியார்,
நிவேதிதை அம்மையார் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த
சந்திப்பு. 1905-ஆம் ஆண்டினை ஒட்டி நிகழ்ந்த இச் சந்திப்பு
பாரதியாரின் தனிவாழ்வில் - சிந்தனைப் போக்கில் ஒரு
திருப்புமுனையை ஏற்படுத்தியது; பெண்மை
பற்றிய அவரது பார்வையில் பெருமாற்றத்தினைத் தோற்றுவித்தது.

இதன் விளைவாக, பாரதியார் நிவேதிதை
அம்மையாரைத் தம் குருவாக ஏற்றுக்
கொண்டார்; 'மாதரசி' என்று அவரை மிகுந்த
மதிப்புடனும் மரியாதையுடனும் சுட்டினார்.
1909-ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது
'ஸ்வதேச கீதங்கள்'
என்னும் நூலின்
இரண்டாம் பாகத்தை நிவேதிதை
அம்மையாருக்கு 'ஸமர்ப்பணம்' (dedication)
செய்தார். ஒருமுறை நிவேதிதை அம்மையார்
நோய்வாய்ப்பட்டிருந்தபோது விரைவில் அவர்
உடல்நலம் பெற இறையருளை வேண்டி
'இந்தியா' இதழில் ஒரு கட்டுரை எழுதினார்; பின்னாளில் 'தாய் நிவேதிதையைத் தொழுது'ஒரு பாடலும் புனைந்தார்.

பெண்மை பற்றிய பாரதியாரின் கண்ணோட்டத்தில் ஒரு நல்ல
மாற்றம் விளைவதற்கு நிவேதிதை அம்மையார் தூண்டுதலாக
இருந்தார் என, 'பாரதி சரித்திரம்' என்னும் நூலில் அவரது
துணைவியார் செல்லம்மா பாரதி குறிப்பிட்டுள்ளார் (பக். 37-38).
மேலும், "மகனே! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும்
ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்கள்.ஸ்திரீகளை
அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன் போன்ற
அறிவாளிகள்,அவர்களும் கூட இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்குச் சம உரிமையும் தகுந்த கல்வியும்
கொடுக்காவிட்டால், எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம்
அடையும்? . . . சரி, போனது போகட்டும்.
இனிமலோகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல்,உனது
இடக்கை என்று மதித்து, மனத்தில் அவளைத் தெய்வமெனப்
போற்றி நடந்து வருதல் வேண்டும்
" (பக். 38) என்று
நிவேதிதை அம்மையார் பாரதியிடம் கூறியதாக எழுதியுள்ளார்
செல்லம்மா. நிவேதிதையின் சொல்லை அப்படியே
'குருஉபதேசமாக' ஏற்று அதன்படி செயல்பட்டார் பாரதியார்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.