1.4 குறிஞ்சி |
|
புணர்தலையும் புணர்தல் சார் ஒழுக்கங்களையும்
ஒழுக்கமாக, உரிப்பொருளாகக் கொண்டது குறிஞ்சித் திணை. இத்திணைக்கு மலையும் மலை சார்ந்த இடங்களும்
முதற்பொருள் (நிகழிடம்) ஆகும். இப்பகுதி வாழ் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு,
குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பகுப்பு வழிக்
காணலாம்.
|
1.4.1 பாடல்கள் |
|
அன்னாய் வாழிப் பத்து முதலாகப் பத்துப் பகுப்புகள் குறிஞ்சித் திணை பற்றிப் பாடுகின்றன.
• அன்னாய் வாழிப் பத்து
தோழியைத் தலைவியும் தலைவியைத் தோழியும் அன்னாய் என விளித்து, வாழி என வாழ்த்தி, தங்கள் கருத்தைக் கூறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அன்னாய் வாழிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
அன்னாய் வாழி வேண்டன்னை! என்னை- தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின பொன்வீ மணிஅரும் பினவே என்ன மரங்கொல் அவர்சாரல் அவ்வே. - (201) |
|
(என்னை- என்+ஐ = என் தலைவன்; தழை = ஆடை; மலைந்தான் = அணிந்தான்; பொன்வீ = பொன்மலர்; சாரல் அவ்வே = மலைச்சாரலில் உள்ள அவை) |
என்ற பாடலில் தலைவி, தலைவனின் மலைச் சாரலில் உள்ள மரங்களின் பூக்கள் தலைக்குப் பயன்பட்டன;
தழை ஆடை ஆகியது எனக் கூறு முகத்தான்
தோழியிடம்
அறத்தொடு நிற்கும் செய்தி இடம் பெறுகிறது.
• அன்னாய்ப் பத்து
தோழி, தலைவியிடமும் செவிலியிடமும் தனித்தனியே செய்திகளைக் கூறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அன்னாய்ப் பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. பாடலின் இறுதியிலேயே அன்னாய் என்ற விளி அமைந்திருக்கிறது.
• அம்ம வாழிப் பத்து
தலைவி தோழியிடமும், தோழி தலைவியிடமும், ‘அம்ம வாழி தோழி’ என விளித்து, வாழ்த்தி, பின்பு செய்திகளைக் கூறும் பாங்கில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அம்ம வாழிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. தலைவியும் தோழியும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது போல் சிறைப் புறத்தில் இருக்கும் தலைவனுக்குக் கருத்தை வெளிப்படுத்துவர்.
அம்ம வாழி, தோழி காதலர் பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய நன்மா மேனி பசப்பச் செல்வல் என்பதம் மலைகெழு நாடே.- (221) |
|
(பாவை = பதுமை; கவின் = அழகு; பசப்ப = வெளிர; செல்வல் = செல்வேன்) |
என்ற பாடலில், ஒருவழித் தணிப்பேன் என்ற தலைவனுக்கு உடன்படாத தலைவி, அவன் சிறைப்புறத்தானாகத் தோழியை விளித்துத் தன் கருத்தைத் தெரிவிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• தெய்யோப் பத்து
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘தெய்யோ’ என்னும் இடைச்சொல் இடம்பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி தெய்யோப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஒருவழித் தணத்தல், வரைவு கடாஅதல், உடன் போக்கு போன்ற நிலைகளில் தெய்யோப் பத்து அமைந்துள்ளது. தெய்யோ என்பது அசைநிலை; குறிப்பிட்ட பொருள் என்று ஏதும் இல்லாதது.
• வெறிப்பத்து
நறுமணம் என்ற பொருளிலும் வெறியாட்டு என்ற பொருளிலும் வெறி என்ற சொல் பயின்று வந்த பத்துப் பாடல்களின் தொகுதி வெறிப்பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
நம்முறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தன ளாயின், அவ்வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறிஎயிற் றோயே- (241) |
|
(வெறி = மணம்; கேண்மை = நட்பு; எயிற்றோய் = பற்களை உடையவள்) |
என்ற பாடலில் வெறி என்ற சொல் நறுமணம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.
அறியாமையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள்- (242) |
எனத் தொடங்கும் பாடலில் வெறி என்ற சொல் வெறியாட்டு என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.
• குன்றக் குறவன் பத்து
குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• கேழற் பத்து
கேழல் என்ற சொல் காட்டுப் பன்றியைக் குறிக்கும். குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்களில் ஒன்று. கேழல் என்ற சொல்லோ பன்றி என்ற சொல்லோ பயின்று வர அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கேழற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக்கொல் அதுவே மன்ற வாரா மையே - (261) |
|
(தறுகண் = ஆண்மை; அடுக்கல் = மலை) |
என்ற பாடலில் பன்றி (கேழல்) இடம் பெற்றுள்ளது.
• குரக்குப் பத்து
குறிஞ்சித்திணைக் கருப்பொருள்களில் ஒன்று குரங்கு. குரங்கு, மந்தி, கடுவன் என்ற சொற்கள் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி குரக்குப் பத்து என்று குறிக்கப்படுகிறது. குரங்கு என்பது வலித்தல் விகாரமாய்க் குரக்கு எனப்பட்டது.
• கிள்ளைப் பத்து
கிள்ளை என்பது கிளியைக் குறிக்கும் சொல். குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் ஒன்றான கிளி இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிள்ளைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• மஞ்ஞைப் பத்து
மஞ்ஞை என்பது மயிலைக் குறிக்கும் சொற்களுள் ஒன்று. குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் மயிலும் ஒன்று. மஞ்ஞை, மயில் என்ற சொற்கள் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி மஞ்ஞைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
இப்பகுப்புகளில் முதல் மூன்று பகுப்புகள் கேட்போர் இயல் குறித்துப் பெயர் பெற்றுள்ளன. ஒன்று இடைச்சொல்லால் பெயர் பெற்றுள்ளது. ஒன்று வெறியாட்டு என்ற ஒழுக்கத்தால் பெயர் பெற்றுள்ளது. எஞ்சிய ஐந்தும் கருப்பொருளால் பெயர் பெற்றுள்ளன. |