5.0 பாட முன்னுரை

அன்பிற்கினிய மாணவர்களே! நல்லியக்கோடனிடம் தான் பெற்ற
பரிசின் சிறப்பை வறுமையில் வாடிய பாணனிடம் வியந்து கூறினான்
பரிசு பெற்ற பாணன். அது மட்டுமன்றித், தனக்குப் பரிசு வழங்கிய
நல்லியக்கோடனின்     அரண்மனைக்குச் செல்வதற்கு உரிய
வழிகளையும் அவன் கூறினான். இச் செய்திகளை முந்தைய
பாடத்தில்     விளக்கமாகப்     படித்தீர்கள். இப்பாடத்தின்கண்
நல்லியக்கோடனின் அரண்மனைச் சிறப்பு, மன்னனைப் பலரும்
புகழ்ந்து கூறுதல், மன்னன் இரவலர்க்குப் பரிசு வழங்கும் சிறப்பு
உள்ளிட்ட செய்திகளை விரிவாகப் படிக்க இருக்கிறீர்கள்.
இச்செய்திகள் சிறுபாணாற்றுப்படையில் 203 முதல் 269 அடிவரை
உள்ள பகுதியில் அமைந்துள்ளன.

நல்லியக்கோடனின் அரண்மனை

நல்லியக்கோடனின் அரண்மனை பெரிய மேரு மலையைப்
பெயர்த்து வைத்தது போன்று காட்சி அளித்தது. அந்த
அரண்மனையின் வாயில் கதவு திறந்து இருந்த காட்சி மேரு
மலையானது கண் ஒன்றைத் திறந்து வைத்துப் பார்த்துக்
கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. இம்மன்னனிடம் பரிசு பெற
விருப்பமுடன் வரும் பொருநர், புலவர், அருமறை அந்தணர்
போன்றோர் தங்குதடையின்றி உள்ளே வருவதற்கு வசதியாக
அரண்மனையின் வாயில் கதவு எப்பொழுதும் மூடப்படாமல் திறந்தே
இருக்கும். இதை அடையா நெடுங்கதவம் என்று சிறப்பித்துக்
கூறுவர் (அடையா வாயில் - அடி 206).