5.3 வள்ளல் |
சீறி
யாழ் கொண்டு இனிய இசையை மீட்டி நல்லியக்கோடனின்
புகழைக் கூறத் தொடங்கிய உடனேயே அவன் உங்களை மிக விருப்புடன்
எதிர்கொண்டு வரவேற்பான் என்று
பரிசல் பெற்ற
பாணன் கூறுகிறான். |
5.3.1 உடையும் உணவும்
|
வறுமையில்
வாடும் ஒருவனுக்குத் துன்பத்தை
நீக்குவதில் முக்கியமானது உணவும்
உடையும் ஆகும். ஏனெனில் தமிழர் மானத்தைப் பெரிதாகக் கருதுவர். மானத்துக்குச்
சோதனை தரத்தக்க வகையில் கிழிந்த கந்தல் ஆடையைப் பாணன் உடுத்தி இருக்கிறான். இதைப் பார்த்த மன்னன் முதலில் பாணனுக்கு மென்மையானதும் அழகானதுமான ஆடையைக் கொடுத்து உடுத்தச் சொன்னான். |
மானம்
காத்த பிறகு அவனின் உயிர் காத்தல் அடுத்த
பணி ஆகும். அதனால் அவன் வயிறார உண்ணுவதற்கு ஏற்றவாறு அறுசுவை உணவை வழங்கினான்.
அந்த உணவையும் அரசன் அவர்களின் அருகில் இருந்து தானே பரிமாறினான். |
உடை
|
நல்லியக்கோடன் ஆடை வழங்கும்
தன்மை பற்றி,
|
"பாணர்களே!
நீங்கள் அணிந்திருக்கும் கந்தல்
ஆடையைக் களையச் செய்து மூங்கிலின் உள்பட்டையை உரித்ததைப் போன்ற தூய்மையான, மென்மையான ஆடைகளை உங்களுக்குத் தந்து உடுத்தச் சொல்வான். |
. . . . . . . . . . மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ" |
(அடிகள், 235-6)
|
என்கிறான் பரிசு பெற்ற பாணன்.
|
உணவு
|
நல்லியக்கோடன் உணவு வழங்கும்
தன்மை பற்றி,
|
"மயக்கமும்
மகிழ்ச்சியும் தருகின்ற தெளிந்த கள்ளைக் கொடுத்து உங்களைப் பருகச் செய்வான். சமையல் கலையில் வல்லவன் வீமன். அவன் எழுதிய
நூலில் கூறியவாறு சுவை தரும் வகையில் சமைத்த பல்வேறு
உணவு வகைகளைப் பொன் பாத்திரத்தில் இட்டு உங்களை உண்ணச் செய்வான்.
அருகில் நின்று அவனே உங்களுக்கு உணவு வழங்கி
மகிழ்வான்" என்று ஆற்றுப்படுத்தும் பாணன்
கூறினான். |
5.3.2 பரிசும் பாணனும்
|
பசியும்
வறுமையும் வாட்ட, தன்னிடம் வந்த
பாணர்களின் துன்பத்தைப் பரிவுடன்
போக்கியவன் நல்லியக்கோடன். அவர்கள் மனம் மேலும் மேலும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் மீண்டும் வறுமைத்
துயரம் ஏற்படா வண்ணமும் அவர்களுக்குப் பல்வேறு பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கினான். |
பகைவர்களை
விரட்டி அடித்த தன் படைத் தலைவர்கள் கொண்டு வந்த பொன் குவியலுடன் தொழிலில் சிறந்த தச்சர்கள் செய்த சிறப்பு மிக்க
தேர், குதிரைகள், வெள்ளை எருது, பாகனொடு ஊரும் யானை, அணிகலன் ஆகிய பொருட்களைக் கொடுத்து மகிழ்ந்தான். |
மென்தோளும்,
ஆடிய சாயலும் உடைய மகளிர் அகில் புகை ஊட்டுவதன் பொருட்டுத் தம் கூந்தலை விரிப்பர். பெண்களின் விரிந்த கூந்தலைப் போன்று மயில் தன்
தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான கருமேகங்கள்
வெண் மேகங்களிடையே தவழ்கின்ற மலை; மூங்கில்கள் நிறைந்த மலை; யாராலும் ஏறுவதற்கு அரிய உயர்ந்த உச்சியைக் கொண்ட மலை. இத்தகைய மலைகள் சூழ்ந்த
நிலத்திற்குத் தலைவனும் கொடைத்திறம் மிக்கவனுமாகிய
நல்லியக்கோடனை நாடி நீங்கள் செல்லுங்கள்; பரிசில்களைப்
பெறுங்கள்; சுற்றம் சூழ வறுமை நீங்கி வாழுங்கள் என்று பரிசில் பெற்ற பாணன் வறிய பாணனுக்குப் பரிசு பெற வழிகாட்டுகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற உதவுகிறான். |
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு
மாசெலவு ஒழிக்கும் . . . . . தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் . . .
. . . . . . . . . . . . . . . . .
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க்கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. |
(அடிகள், 249-269)
|