5.1 பேரிலக்கியமும் சிற்றிலக்கியமும்

    அடிகளால் மிகுந்து பொருள்களால் சிறந்து, உயரிய மாந்தர்களை மாதிரிகளாய் முன்நிறுத்தி, வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா போன்ற ஏதாவதொரு பா வகையால் கதை சொல்லும்  இலக்கியங்கள் பேரிலக்கியங்கள் ஆகும்.

     அடிகளால் குறைந்து, கற்பனை மிகுந்து, கடவுள்களையும் செல்வர்களையும் பொதுமக்களுள் சிலரையும் தலைவர்களாகக் கொண்டு எளிய பா வகையால் இயற்றப்பட்ட இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் எனப்பட்டன. பொதுவாக இவ்வகை இலக்கியங்கள் தாம் கொண்டுள்ள பா வகையால் பெயர் பெற்றிருக்கும். இவ்வகை     இலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள என அழைக்கப் பெற்றன.

· இலக்கணம் கூறும் நூல்கள்

     சிற்றிலக்கியங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற சிற்றிலக்கிய இலக்கணத்தை, பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலை, சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல்  ஆகிய நூல்களிலிருந்து அறியலாம்.