2.4 பாத்திரப் படைப்பு

    தி.ஜா. படைப்புக்களின் வெற்றிக்குப் பெரும்பாலும் அவர்
படைக்கும்     உயிரோட்டமான     கதை மாந்தர்களே
காரணமாகின்றனர்.

    தம் சிறுகதைகளில் எல்லா வகையான கதைமாந்தர்களையும்
தி.ஜா. படைத்துள்ளார். பெருநிலக் கிழார்கள், செல்வர்கள்,
வறியவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,
சிறுவர்கள், துறவிகள், ஆண்டிகள், பரதேசிகள், தாசிகள் என்று
தொடரும் கதை மாந்தர்களில் புத்தர், கருவூர்த் தேவன்,
இராவணன் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

    அப்பாவித் தனத்தின் எல்லையிலும், சூழ்ச்சித் திறத்தின்
எல்லையிலுமாக இருவேறு துருவங்களான கதை மாந்தர்களைப்
படைத்துக் காட்டுவது இவர் சிறப்பு. பேராசைக்காரர்களையும்,
பொறாமைக்காரர்களையும் எத்தர்களையும், ஏமாற்றுபவர்களையும்,
வாய்ச்சொல் வீரர்களையும் படம் பிடித்துக் காட்டுவதுபோல்
துல்லியமாகக் காட்டுவது இவர் தனிச்சிறப்பு. உலகில் நாம்
காணும் உண்மை மனிதர்களாகவே அவர்கள் தோன்றுவர்.
இச்சிறப்பினால் இவர் படைக்கும் கதை மாந்தர்கள் பலர் வாசகர்
மனத்தில் பதிந்து விடுகின்றனர்.

    இவருடைய பாத்திரப் படைப்பின் வெற்றிக்கு முதல்
காரணமாக அமைவது கதை மாந்தரைப் பற்றிய முழு
வர்ணனை. அடுத்ததாக உரையாடல் திறனைக் குறிப்பிடலாம்.
சிறப்பான வெளியீட்டு நெறியாக இவர் உரையாடலைப்
பயன்படுத்துகின்றார். "தி.ஜா. உரையாடல்கள்     மூலமே
பாத்திரங்களின் இயல்பையும் ஈடுபாட்டையும், தவிப்பையும்,
விழிப்பையும்     சுட்டிக்காட்டுகிறார்"     என்கிறார்
க.நா. சுப்பிரமணியம் (நாவல் விமர்சனம், ப.89).

    “உரையாடலில் இவர் கையாளும் மௌன இடைவெளிகள்
இவருக்கு மட்டும் கைவந்த சிறப்பான உத்தி. மிகவும்
இக்கட்டான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கதை மாந்தர் என்ன
சொல்லி விடுவாரோ என்று வாசகர் திகிலுடன் எதிர் நோக்கும்
நேரங்களில் அந்த ஆணோ, பெண்ணோ ஒன்றும் பதில்
சொல்லாமல் இருப்பது மூலமே எவ்வளவோ சொல்லும்
ஜால வித்தை ஜானகிராமனில் தனிப்பட்ட உத்தியாகப்
பரிணமித்து     விடுகிறது” என்கிறார்     சிட்டி (சிட்டி
இலக்கியத் தேடல் - நளபாகம்).

    கதை மாந்தரை வர்ணிப்பதற்கு ஒரு சான்று பாருங்கள்
“பார்த்தால் ‘பாவம்’ என்று இரக்கப்பட வேண்டும்
போலிருக்கும். அப்படி ஒரு தயவை எழுப்புகிற தோற்றம்.
கட்டை குட்டையான உடல்; சற்று உருண்டையாக,
பூசினாற் போலிருக்கும், உருண்டைத் தலை வழுக்கை. பின்
உச்சியில் பூனை மீசை மாதிரி எண்ணி ஐந்தாறு நரைமயிர்கள்.
கண்ணுக்கு ஒரு வெள்ளி பிரேம் மூக்குக் கண்ணாடி . . .
எப்போதும். ஒரு மோட்டா அரைக்கைக் காக்கிச் சட்டை.
நடக்கிறபோது கூடக் குழந்தை நடக்கிற மாதிரி இருக்கும்.
மேலே பார்த்துக்கொண்டு அடிப்பிரதட்சிணம் செய்வது
மாதிரியான நடை” (கண்டாமணி,யாதும் ஊரே ப.33 ) -நேர்முக
வர்ணனை செய்வது போல் இருக்கிறதல்லவா!

    கதை மாந்தர் பண்பினை எளிமையாகவும், அழுத்தமாகவும்
பெரும்பாலான சமயங்களில் நகைச் சுவையாகவும் சொல்வது
இவருக்குக் கைவந்த கலை. ஒரு சிறு நிகழ்ச்சியிலேயே கதை
மாந்தர் பண்பை அளவிட்டுச் சொல்லும் ஆற்றலும் இவருக்கு
உண்டு. மனிதாபிமானம் சிறுகதையில் ஒரு காட்சியைப்
பாருங்கள்!

    மனைவிக்கு வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரம், வாங்கிய
ஒரு மணி நேரத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் நழுவி விழுந்து
விட்டது. “கையிலே வாட்ச் இருக்கா பாத்தியானு நீங்களாவது
சொல்ல மாட்டளோ? உங்களுக்கு சங்க ஞாபகம்தான்” என்று
அவருக்குக் குழி வேறு பறித்தாள் அவள். அது அவள் சுபாவம்.
“வாழைப்பழத் தோலில் சறுக்கி அவள் விழுந்தால் கூடச்
சுற்றி இருப்பவர்கள் தொலியை முன்னாலேயே பார்த்து அவளை
எச்சரித்திருக்க வேண்டும் என்பது அவள் பார்வை”
(மனிதாபிமானம், ப.3-4). இனி தி.ஜா.படைத்த விந்தை
மாந்தர்களைப் பார்ப்போமா?

2.4.1 விந்தை மனிதர்கள்

    இவ்வுலகில் நாம் காணும் விந்தை மனிதர்கள் சிலரையும்
தி.ஜா. தன் சிறுகதை மாந்தர்களாக்கியிருக்கிறார். தத்தோஜி
என்ற ஏழைப் புரோகிதரும் அவர் மனைவியும் வாழ்க்கையை
எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச் சுவையோடு
சொல்லும் கதை கோதாவரிக் குண்டு (சக்தி வைத்தியம், ப.63).
இதை நேராகப் பார்த்து அனுபவித்த ஒருவர் நோக்கிலேயே
கதை சொல்லப்படுகிறது. புரோகிதர் மனைவி ஒரு நாள்
காலையில் கோடி வீட்டுக்கு (கதை சொல்பவர் வீடு) ஒரு
கோதாவரிக் குண்டை எடுத்துக் கொண்டு வந்து இரண்டு ரூபாய்
பணம் கேட்கிறாள். வீட்டுக்காரரே செலவுக்குப் பணமில்லாமல்
பழைய பேப்பர் காரனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் பணம்
கொடுக்க முடியாது என்கிறார். புரோகிதர் மனைவி
கெஞ்சுகிறாள். முப்பது ரூபா விலை பெறும் பாத்திரத்திற்கு ஒரு
ரூபாய் கேட்பதென்றால் பணமுடையாகத்தானே இருக்கும் என்று
வாதாட, ஒரு ரூபாயைக் கொடுக்கிறார் அவர்.

    மாலை அலுவலகம் சென்று திரும்பும் வழியில் தத்தோஜி ராவ்
நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “என்ன இங்கே
நிற்கிறீர்!” என்றார்.

    “என் சம்சாரம் மூணுமணி ஆட்டத்திற்குப் போயிருக்காள்.
அவளை அழைச்சிண்டு போக வந்தேன்”.

    "நீர் கூடப் போக வேண்டாமோ?"

    “இல்லை சார். ரெட்டிப் பாளையத்திலிருந்து காலையில் ஒரு
பெண் மல்லிகைப்பூ கொண்டு வந்தா. என் சம்சாரம் ஒரு சேர்
வாங்கிப்பிட்டா. உள்ளே காசில்லை. அப்புறம் ஏதோ
பாத்திரத்தை வச்சு ஒரு ரூபா வாங்கிண்டு வந்தா. மல்லிப்பூ
பத்தணாதான் மீதி ஆறணா இருந்தது. என்ன செய்யலாம்னு
கேட்டா.”

    “புதுப்படம் இன்னிக்கு வருதாமே. பாத்திட்டு வாயேன்னேன்.
சரின்னு புறப்பட்டு வந்தா. அழச்சிண்டு போக வந்தேன்”

    இவர்கள் விந்தை மனிதர்கள் தாமே!

    மருத்துவமனை நோயாளியாய் இருந்து கொண்டே காசு
சம்பாதித்து ஊருக்கு அனுப்பும் ராமன் நாயர் (நான்தான்
ராமன் நாயர்
- சிவப்பு ரிக்ஷா, ப.182), கேட்டவருக்கெல்லாம்
இரக்கப்பட்டுப் பணம் கொடுத்து அதைத் திரும்பப் பெற
முடியாமல் ஏமாந்து நின்று ஆத்திரப்பட்டாலும் தொடர்ந்து
அதையே செய்து வரும் கிருஷ்ணன் (கள்ளி - அக்பர்
சாஸ்திரி), ஆசையாய் வளர்த்த தம்பி சொத்தைப் பிரிக்கும்
போது, தனிக்கட்டையாய் இருந்த அண்ணனுக்கு ஒரு பாகமும்,
அப்போதுதான் திருமணமான தனக்கு இரண்டு பாகமும்
கேட்டதால், திடீரென்று ஒரு கேரளப் பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டு விடும் அண்ணன் கிட்டன் (அர்த்தம் -
அக்பர் சாஸ்திரி) - இவர்களெல்லாம் விந்தை மனிதர்கள் தாமே!

2.4.2 அக்பர் சாஸ்திரி

    படித்தால் மறக்க முடியாத ‘அக்பர் சாஸ்திரி’ பாத்திரத்தைப்
பார்ப்போமா!

    கதை நிகழ்களம் ஓடுகின்ற புகைவண்டி. “மாயவரம்
ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது,
வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று பையை நகர்த்திவிட்டு
என் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது
குரல்! தொண்டைக்குள் வெண்கலப் பட்டம் தைத்த குரல்.
அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற
குரல்". இப்படித் தொடங்கும் அக்பர் சாஸ்திரி சிறுகதையில்
இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் குரல் அக்பர் சாஸ்திரியின்
குரல். ஆசிரியர் அவரை வர்ணிப்பதைப் பாருங்கள்.

    “ஆள் ஆறடி உயரத்துக்குக் குறைவில்லை. இரட்டை
நாடியில்லை. ஆனால் ஒல்லியுமில்லை. சாட்டை மாதிரி முறுக்கு
ஏறிய உடம்பு. நேரான உடம்பு. உட்கார்ந்திருந்த போது கூட
வளையா நேர் முகுகு. கறுப்பில்லை, மாநிறமுமில்லை, அப்படி
ஒரு கறுப்பு - நீள மூக்கு, நீளக் கைகால். குரலில் தெறித்த
அதிகாரத்திற்கேற்ற உடம்புதான்.” “எனக்கு மதுரை கோவிந்த
சாஸ்திரின்னு பேரு. அட்வகேட்டாயிருக்கேன். ஒரு கேஸ்
விஷயமா     பட்டணம்     போயிட்டு வரேன்” என்று
அறிமுகப்படுத்திக் கொண்டவர், சற்று நேரத்தில் தன்வந்திரி
போல் வைத்தியக் குறிப்புகள் கூறி அனைவரையும் தன்
வசப்படுத்தி விடுகிறார். தன்வந்திரி சித்தர்கள் எல்லாரும் அவர்
மேல் கருணை கொண்டு இரண்டாம் வகுப்பில் சக பிரயாணியாய்
வந்தது போல் அவர் செயல்பட்டு அனைவரையும் கவர்ந்து
விடுகிறார். உடல் ஆரோக்கியம் மிகுந்த அவர் டாக்டருக்காக
ஒரு பைசா கூடச் செலவழிக்காதவர். மற்றவர்களிடம் பொறாமை
உணர்வைத் தூண்டும் வண்ணம் அமைந்திருந்த அவர்
வாழ்க்கை அவரைப் போலவே சுறுசுறுப்பாகச் சென்று, முடிந்தே
போகிறது. திருவிடை மருதூரில் மகிழ மாலை இங்கு விற்குமே
என்று எழுந்தவர் பேச முடியாமல் கலங்கிச் சாய்ந்தார். சைகை
காட்டியவர் உடலிலிருந்த உயிரும் பிரிந்தது. ‘அப்போது கூட
டாக்டரின் உதவியின்றியே சென்றுவிட்டார்’ என்று கதை
முடிகிறது. அக்பர் சக்கரவர்த்தி உலகத்திலே இருக்கிற
நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை
ஏற்படுத்திக் கொண்டார். மேற்கூறிய கோவிந்த சாஸ்திரி
அவ்வாறு வாழ்ந்ததால் அவருடைய சம்பந்தி அக்பர் சாஸ்திரி
என்று அவரை அழைக்க அதுவே அவருக்குப் பெயராயிற்றாம்.

    இவ்வாறு தி.ஜா. படைக்கும் பாத்திரங்கள் அவர்
கதைகளைப் பல்வேறு சுவைகளால் நிரப்புகின்றனர்.

2.4.3 மாவட்ட மணம்

    தஞ்சை மாவட்டத்தில் பிறந்த தி.ஜா. படைப்புகளிலும்
பாத்திரங்களிடமும்     மாவட்ட     மணம் கமழுவதில்
வியப்பொன்றுமில்லை. அதில் அவருக்கிருந்த ஈடுபாட்டை
அவருடைய படைப்புகள் வழி பார்ப்போமா?

    தஞ்சை மாவட்டத்துக்கே வளம் சேர்க்கும் காவிரியை
அவரால் மறக்க இயலவில்லை. முடிந்த இடங்களில் எல்லாம்
காவிரி நீராடலையும், காவிரியின் பெருமையையும் கதை
மாந்தர்களே பேசுகின்றனர்.

    கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கும் சின்னசாமியிடம்
ஒடிக்கொண்டிருக்கும் கங்கையின் அகலம் பற்றி அவர் மனைவி
கேட்கிறாள்.

    “ரண்டு கும்மாணம்     (கும்பகோணம்)     காவேரி
இருக்குமாங்கறேன் அகலம்” (கங்கா ஸ்நானம் - சக்தி
வைத்தியம் பக்.1 ). அப்பா பிள்ளை சிறுகதையில் வரும்
குஞ்சுவின் எண்ண ஓட்டத்தைப் பாருங்கள். “ஒன்பது மாத
காலம் அல்லில்லை பகலில்லை - வெயிலில்லை - மழையில்லை
- அப்படி கர்ம சிரத்தையாக இந்தக் காவேரி ஓடிக்
கொண்டிருக்கிறது. . . குடிக்க, குளிக்க எல்லாவற்றுக்கும் இந்தக்
காவேரிதான். அம்மாவும் நினைத்து நினைத்து வந்து முழுகுவாள்.
அம்மாவுக்கே     காவேரி     ஓடினாற்     போலிருந்தது”.
(யாதும் ஊரே, ப.82).

    நஞ்சை வயல்களால் கொழிக்கும் தஞ்சை மண்ணின்
வளத்தை வியந்து பேசுவதைப் பாருங்கள்.

    “உங்க ஊர்லே நூறு ஏக்கரும் சரி. இந்த ஊர்லே பத்து
ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம்
போயிண்டேயிருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே
இருக்கும்” (வீடும் வெளியும் - மனிதாபிமானம், ப.62,63).

    காவிரியில் நீராடலை தி.ஜா.வின் பல கதைகளில் காணலாம்.
“கையைக் காலை வீசி இப்படி ஒரு நாளைக்கு வந்து
காவேரியிலே ஒரு முழுக்கு போட முடியுமான்னே” - பாயசம்
(பிடி கருணை, ப.33).

    காப்பிப் பிரியர்கள் மிகுந்த தஞ்சை மாவட்டம் என்பதால்
அந்த ரசனையும் பல இடங்களில் கூறப்படுகிறது.

    “கள்ளிச் சொட்டாக நுரைத்து, மணத்த காபியை நெஞ்சு
சுட, உள்ளம் குளிரக் குடித்தான்” (தூரப்பிரயாணம், சிவப்பு
ரிக்ஷா, ப.199).