3.2 சமூகச் சிறுகதைகள்

    பொருளியல் ஏற்றத் தாழ்வு     சமுதாயத்தில்     பல
பிரச்சினைகளை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இவை
சமுதாயச் சீர்கேடுகளாக மாறிச் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன.
சமயத்தின் பெயரால் நடக்கும்     சதி     வேலைகள்,
மூட நம்பிக்கையாலும், அறியாமையாலும் மக்கள் படும்
துன்பங்கள் இவற்றை எடுத்துக் காட்டி, அவற்றை ஒழிப்பதற்கு
எடுக்கும் வலுவான முயற்சிகளாக இவர் சிறுகதைகள்
அமைந்துள்ளன எனலாம்.சாதி பேதக் கொடுமையும் அதுதரும்
அவலங்களும் இவருடைய பல கதைகளுக்குக் களன்களாக
அமைந்திருக்கின்றன.     சமுதாயத்தில்     பெண்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் கொதித்தார்
அண்ணா. ஏழை அழுத கண்ணீர் மட்டுமல்ல ஏந்திழையார்
சிந்திடும் கண்ணீரும் நமது சமுதாயத்தை நாசமாக்கும்; நச்சு
நீராக மாற்றும் என எச்சரித்தார். பொருளாதாரச் சார்பில்லாது
பெண்கள்படும் துன்பம், வரதட்சிணைக் கொடுமை, விதவைகள்
துன்பம், பொருந்தா மணக் கொடுமை, வறுமை-பெண்கள்
ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாதல் ஆகியனவும் இவர்
கதைகளுக்குக் கருப்பொருள்களாக அமைந்தன." சாதி ஒழிப்பு,
கைம்பெண் மறுமணம், கலப்பு     மணம், சம்பிரதாயச்
சடங்குகளின் மறுப்பு போன்றவை சி.என். அண்ணாதுரையின்
சிறுகதைகளில் தலைதூக்கி நிற்கின்றன" என்கின்றார் எழுத்தாளர்
அகிலன். பொருளாதார ஏற்றத் தாழ்வைக் கதைப் பொருளாகக்
கொண்ட அண்ணாவின் கதைகளை இனிக் காண்போம்.

3.2.1 பொருளாதார ஏற்றத் தாழ்வு

    வறுமை கொடியது. அக்கொடும் துன்பத்தால் பெற்ற
குழந்தையைச் சந்தையில் விலை கூறி விற்கும் கொடுமையை
சரோஜா ஆறணா என்ற சிறுகதை காட்டுகிறது. வறுமைத்
துன்பத்தால் வாழ முடியாது மடிவதை இருவர் என்ற
சிறுகதையும், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனின்
சோகச் சித்திரத்தை ஒருவன்தான் பிடிபட்டான் என்ற
சிறுகதையும் காட்டுகின்றன. ராஜாதி ராஜா என்ற கதையில் ஓர்
ஏழை காரணமின்றித் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டதால் அவன்
இறுதியில் திருடனாகவே மாறுவது காட்டப்படுகிறது. ஏழைகள்
செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை.
ஆகவே தண்டிக்கப்பட வேண்டியது பொருளியல் ஏற்றத் தாழ்வு
மிகுந்த இந்தச் சமுதாய அமைப்பே என்று தீர்ப்பளியுங்கள்
சிறுகதையில் தம் தீர்ப்பை எடுத்துரைக்கின்றார். இதனால்தான்
பல கதைகளில் சமீன்தார்கள் பற்றியும், அவர்கள் ஆடம்பர
வாழ்க்கை பற்றியும்     எடுத்துச்     சொல்லப்படுகின்றது.
உழைப்பின் பயன் உழைப்பவனுக்குக் கிடைக்காமல் போகும்
அவல நிலையைச் ‘செவ்வாழை’ படம் பிடிக்கிறது. “ஒரு
சமுதாயத்தில் உடையான், இல்லான் என்ற     இருவேறு
வர்க்கங்கள் இருக்கிறவரை வறுமையும் இருந்தே தீரும்
என்பதை சி. என். அண்ணாதுரையின் ‘இரு பரம்பரைகள்’
தொனிப் பொருளாகப் புலப்படுத்துகிறது” என்று பாராட்டுவர்.

    பொருளாதாரச் சமநிலை சமுதாயத்தில் அமைய
வேண்டுமென்பதை அண்ணாவின் சமூகச் சிறுகதைகள்
வற்புறுத்துவதைக் காண முடியும்.

3.2.2 சமயப் பொய்மை

    சமயம் மக்களை நல்வழிப் படுத்தவே உதவ வேண்டும்.
ஆனால் அது பேதங்களையும் மூட நம்பிக்கைகளையும்
சமுதாயத்தில் வளர்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அண்ணா
அவற்றைத் தம் சிறுகதைகளுக்குக் கருப் பொருளாக்கினார்.
வரலாற்றுக் கதைகள் வாயிலாகவும், சமூகக் கதைகள்
வாயிலாகவும் சமயப் பொய்மையின் தீமைகளைச் சுட்டிக்
காட்டுகிறார். சமயத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக் கொண்டு
சதி வேலைகள் செய்து கொண்டிருக்கும் சில சமய வாதிகளின்
இழி செயல்களை அம்பலப்படுத்துகிறார்.

    சமய வாதிகளின் பொய் வேடத்தை எடுத்துக் காட்டும்
கதைகள் ஜெபமாலை, கடைசிக் களவு போன்றவை.
ஒழுக்கக் கேடுடைய மதத்     தலைவர்களின்     இரட்டை
வாழ்க்கையை ஜெபமாலை என்ற சிறுகதை காட்டுகிறது.
மக்களின் சமய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு
போலித் துறவிகள் அவர்களை ஏமாற்றும் நிலையைச் சொல்கிறது
அன்ன தானம். வணிகராகவும் துறவியாகவும் மாறி மாறி வேடம்
பூண்டு மக்களை ஏமாற்றிக் கன்னி வேட்டை செய்து திரியும்
கயவனைப் பற்றிக் கூறுகிறது தேடியது வக்கீலை என்னும்
சிறுகதை.

    சமயம் மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கப் பயன்பட
முடியாத தன்மையை மதுரைக்கு டிக்கெட் இல்லை என்னும்
சிறுகதை சொல்கிறது. சமயப் போர்வையில் செய்யப்படும்
அநீதிகளைச் சுட்டிக் காட்டுவதே இத்தகைய படைப்புகளின்
நோக்கம் எனலாம்.

3.2.3 சாதிப் பாகுபாடு

    தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பாகுபாடு
பின்னர்ப் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
மக்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்தும் சாதிப் பாகுபாட்டை
ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினைப் புலப்படுத்தும்
சிறுகதைகளைப் பார்ப்போமா?

    சாதிக் கொடுமையினால் காதல் வாழ்வு முறிந்து போவதைச்
சிங்களச் சீமாட்டி என்ற சிறுகதை மூலமாகக் காட்டுகிறார்.
தங்கத்தின் காதலன் என்ற கதை நெஞ்சம் கலந்த
காதலர்களிடையே சாதி தடையாக இருந்ததைக் காட்டுகிறது.
இக்கதையில், சாதிவெறி தணியக் கலப்பு மணமே சிறந்தது
என்பதைத் திருமலைப் பிள்ளைக்கும் சுந்தரிக்கும் நடக்கும்
திருமணத்தின் மூலம் காட்டுகிறார். சாதி பேதம் அற்ற சமத்துவச்
சமுதாயம் அமைக்க விரும்பிய அண்ணா. கலப்பு மணத்தைச்
சிறந்த வழியாகக் காண்கிறார். தாம் ஆட்சியில் அமர்ந்த
பின்னர்த் தாழ்த்தப்பட்டோரை மணந்தோர்க்குத் தங்கப்
பதக்கம் அளித்தும், அரசுப் பணிகளில் அமர்த்தியும் கலப்பு
மணத்திற்கு ஊக்கம் அளித்தார்.

3.2.4 மூட நம்பிக்கை ஒழிப்பு

    அச்சம் காரணமாகவும், அறியாமை காரணமாகவும்
மக்களுக்கு ஏற்பட்ட சில நம்பிக்கைகள் காலப் போக்கில்
மூட நம்பிக்கைகளாக உருவெடுத்தன. மக்கள் சாதகம்,
சோதிடம் முதலியவற்றை அளவுக்கு மீறி நம்புவதையும்,
பூசாரிகளின் ஏமாற்று வேலைகளையும், சோதிடர்களின்
பொய்மைப்     போக்கினையும்     தம்      கதைகளுக்குக்
கருப்பொருளாக்கினார் அண்ணா.

    பலா பலன் என்ற சிறுகதையில் சின்னப்பன்
மார்வாடியிடம் பட்ட      கடனை எண்ணி எண்ணி
நோய்வாய்ப்பட்டான். சோதிடனிடம் செல்கிறாள் அவன்
மனைவி. கிரகங்கள் சரியான நிலையில் இல்லாததால் இந்த
நோய் என்கிறான் சோதிடன். நிலத்தை விற்றுக் கடனை
அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டவுடன்
சின்னப்பன் நோயிலிருந்து விடுதலை பெற்றான். மனைவியோ
சோதிடர் கூறிய சாதக பலனாலே நோய் நீங்கியதாக
மகிழ்கிறாள். உண்மையை அறிந்து கொள்ள முயலாமல்
சோதிடத்தை நம்பும் மூட நம்பிக்கையைச் செல்வர்கள் தமக்குச்
சாதகமாகப் பயன்படுத்தும் போக்கினைச் சுடுமூஞ்சி என்ற
சிறுகதை காட்டுகிறது.

    பேய் பூதங்களைக் கண்டு மக்கள் அஞ்சுவதையும்
அவற்றை ஓட்டும் பூசாரிகள் மக்களிடையே செல்வாக்குப்
பெற்றுத் திகழ்வதையும் வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்
அண்ணா. பேய்பிடித்தது என்று பூசாரிகளை நாடும் மக்களின்
அறியாமையைப் பேய் ஓடிப் போச்சு என்ற சிறுகதையில்
காணலாம்.

    அறிவியல் உண்மைகள் பரவப் பரவ மூட நம்பிக்கைகள்
மறையத் தொடங்குகின்றன என்ற உண்மையை விழுப்புரம்
சந்திப்பு
சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

3.2.5 பெண்ணுரிமை

    சென்ற நூற்றாண்டில் குழந்தைத் திருமணம் வழக்கில்
இருந்தது. இதன் விளைவாக மிக இளம் வயதிலேயே கணவனை
இழந்து விதவையாகும் நிலையும் இருந்தது. இந்த இளம் விதவைப்
பெண்கள் பல வகையிலும் துன்புற்றனர். விதவைப் பெண்களுக்கு
மறுவாழ்வு தரவேண்டும் என்று இராசாராம் மோகன்ராய் போன்ற
சீர்திருத்தவாதிகளும்     சுயமரியாதை     இயக்கத்தவர்களும்
போராடினர். இந்த முற்போக்கான சீர்திருத்தம் அண்ணாவின்
சிந்தனையிலும் இருந்ததை அவருடைய சிறுகதைகள்
காட்டுகின்றன. விதவைகளின் துயரைப் படம் பிடித்துக் காட்டும்
சிறுகதைகளுள் ஒன்று கன்னி விதவையான கதை.
கபோதிபுரக் காதலில்
    வரும் விதவை சாரதா
கண்ணிழந்தவனான பரந்தாமனை மணந்து கொள்கிறாள்.
விதவைத் துயர் களைய விதவைகளுக்கு மறுமணம் செய்வதே
சிறந்த வழி என்பதைத் தம் படைப்புகளில் வலியுறுத்துகிறார்
அண்ணா.

• பொருந்தா மணம்

    அண்ணாவின் சிறுகதைகளில் சில, பொருந்தா மணம் பற்றிப்
பேசுகின்றன. வாலிப விருந்து என்னும் கதையில் சந்தான
கிருஷ்ண அய்யர் மோகனாவை இரண்டாம் தாரமாக மணந்து
கொண்டார். அவர்களுக்கு இடையே உள்ள மணப்
பொருத்தத்தை அண்ணா எப்படிக் கூறுகிறார் பாருங்கள்:

    "இளமை மெருகும், எழில் மணமும் வீசிட அவள்
உலவினாள். இவர் காலத்தால் கசக்கப்பட்டு, முதுமையென்னும்
முற்றத்திலே கிடந்தார். ஐயருக்கு மட்டும் அறுபது வேலி
நிலமும் அரை இலட்சம் ரொக்க லேவாதேவியும் இல்லாவிடில்
இந்தப் பேத்தி பெண்டாட்டி ஆகியிருக்க முடியாது".

    பொருந்தாத் திருமணம் ஒழுக்கக் கேட்டிற்கும் வழிவகுக்கும்
என்பதைக் கபோதிபுரக் காதல், காமக் குரங்கு, சுடுமூஞ்சி,
வாலிப விருந்து
முதலான சிறுகதைகளில் எடுத்துரைக்கக்
காணலாம்.

• சொத்துரிமை

    பெண்கள் அடிமைப்பட்டு இருப்பதற்கு அடிப்படைக் காரணம்
அவர்களுக்குச் சொத்துரிமை இல்லாததே ஆகும். 1943 ஆம்
ஆண்டு மத்திய சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை
உண்டென்று மசோதா கொண்டு வந்தபோது ஆண்களில் சிலர்
அம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களது
மனைவியர்     அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டி
உண்ணாவிரதம்     இருந்தனர்.     இவ்வேடிக்கையைக்
கருத்துரையாக்கி உண்ணாவிரதம் ஒரு தண்டனை என்ற
சிறுகதையைப் படைத்தார். பெண்களும் ஆண்களைப் போல்
சொத்துரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற
அண்ணாவின் நோக்கத்தை இக்கதை புலப்படுத்தக்
காண்கிறோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

அண்ணா மொத்தம் எத்தனை சிறுகதைகளைப்
படைத்துள்ளார்?

(விடை)
2) அண்ணாவின் புனை பெயர்களைக் குறிப்பிடுக. (விடை)
3) அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகளைக்
குறிப்பிடுக.
(விடை)
4) ‘பலாபலன்’ சிறுகதையின் கருப்பொருள் யாது? (விடை)
5) சி.என்.அண்ணாதுரையின் சிறுகதைகளில்
தலைதூக்கி நிற்பவையாக அகிலன்
குறிப்பிடுவன யாவை?
(விடை)