3.4 அண்ணாவின் சிறுகதைக் கலை

    கதையின் உள்ளடக்கம், நிகழ்வுப் பின்னல், கதை சொல்லும்
முறை, கதை மாந்தர் படைப்பு, கதை அமைப்பு ஆகியவற்றில்
அமையும் ஒழுங்கும், அழகும் சிறுகதைக் கலை எனலாம்.
இவ்வகையில் அமையும் அண்ணாவின் சிறுகதைக் கலையினை
இனிக் காண்போமா? கருப்பொருள், கதைப் பொருளை
எடுத்துரைக்கும் உத்தி, கதைமாந்தர் படைப்பு, மொழி நடை
அனைத்திலும் அண்ணாவின் தனி முத்திரையைக் காணலாம்.

3.4.1 கதைப்பொருள்

     சமுதாய முன்னேற்றம், அதற்கான சமுதாயச் சீர்திருத்தம்
ஆகிய கருத்துகளையே தம் கதைகளுக்குக் கருப்பொருள்களாக
அமைக்கின்றார் அண்ணா.

     பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சமயப் பொய்மைகள்,
சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமை நிலை,
ஆணாதிக்கம் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும் என்ற
ஆர்வமும் வேகமும் இவர் சிறுகதைகளில் தீவிரமாக
வெளிப்படக் காணலாம்.

3.4.2 பாத்திரப் படைப்பு

    அண்ணா தம் சிறுகதைகளில் கற்பனை மாந்தர்களைப்
படைப்பதை விடத் தம்மைச் சூழ்ந்துள்ள சமுதாயத்தில் உள்ள
மனிதர்களையே     படைத்துள்ளதாகக்    குறிப்பிடுகின்றார்
(குமரிக் கோட்டம், முன்னுரை). "இதிலே காணப்படும் வாதிடும்
மகன், வசீகர மங்கை, ரோசம் நிரம்பிய அண்ணன் இவர்களை
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள்
குழந்தைவேலர் என்றிராது. குமரி என்று இருக்காது. ஆனால்
இவ்விதமான நிலைமையில் உள்ளவர்களை நாட்டிலே
காண முடியும" என்று குறிப்பிடக் காணலாம்.

    பெண் கதை மாந்தர்களில் கல்வி அறிவு பெற்ற துணிச்சல்
மிக்க பெண்கள், கல்வி அறிவு பெறாத, பாசத்திற்கு அடிமையாக
இருக்கும் பெண்கள் என்று இரு சாராரைப் படைத்துக்
காட்டுகிறார். இதனால் பெண்கள் அடிமைத் தளையில்
்இருந்து விடுபட அவர்களே முயற்சி செய்ய வேண்டும்,
அதற்கு அவர்களே குரல் எழுப்ப வேண்டும் என்பதைப்
புலப்படுத்துகிறார் அண்ணா.

     பொருளாதார ஏற்றத் தாழ்வினைப் புலப்படுத்தும்
கதைகளில் செல்வர்கள், வறுமையில் வாடுபவர்கள் என்ற
இருவகை மாந்தர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்."சிறந்த
எழுத்தாளர்கள் கதை மாந்தர்களைப் படைப்பதில்லை, வாழும்
மக்களையே படைத்து விடுகின்றனர்" என்ற எமிங்வேயின்
கூற்றுக்கு அண்ணாவின்     கதைமாந்தர்      சான்றாக
அமைந்துள்ளனர். இனி அவர் கையாளும் உத்தி முறைகள்
பற்றிப் பார்ப்போமா ?

3.4.3 உத்தி முறை

    "அண்ணாவின் கருப்பண்ணசாமி யோசிக்கிறார் சிறுகதை
உத்திச் சிறப்பும் வடிவ முழுமையும் கொண்டுள்ளது" என்று
பாராட்டுகின்றனர். சிட்டி- சிவபாத சுந்தரம் (தமிழ்ச் சிறுகதை
வரலாறும் வளர்ச்சியும்).    பக்தர்களின்     தொந்தரவாலும்
உட்பூசல்களின் விளைவாகவும் ஒரு பிரிவுப் பக்தர்கள்
கருப்பண்ண சாமி சிலையை மண்டப அறையில் வைத்துப்
பூட்டிவிட, கருப்பண்ணசாமி தாம் சிறைப்பட்டிருந்ததைப் பற்றித்
தேவியிடம் முறையிடும் வகையில் கதை அமைந்துள்ளது.1951இல்
லால்குடிப் பக்கத்தில் புஞ்சை சாங்குடி என்ற கிராமத்தில்
ஊர் இரண்டுபட்டு, கிராம தேவதையான கருப்பண்ணசாமியை
ஒரு மண்டபத்தில் போட்டுப் பூட்டி விட்டனர். பின்னர்க்
காவல் துறையின் உதவியுடன் பூட்டு உடைக்கப்பட்டுக்
கருப்பண்ணசாமி, கோயிலில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார்
என்ற உண்மைச் செய்தியை (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்,
ஆகஸ்ட் 22, 1951) ஆதாரமாகக் கொண்டு இக்கதையை
எழுதியதாக அண்ணா குறிப்பிட்டுள்ளார்.

    உத்திக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட ஒரு
கதை தனபாலச் செட்டியார் கம்பெனி. ஒரு கடையின்
முதலாளி தனபாலச் செட்டியார் மற்றும் அவரிடம் பணிபுரியும்
ஊழியர்களின் வரவு செலவுக் கணக்குகளை மட்டும் வைத்து
எழுதிய இக்கதையில் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் வரவு
செலவுக் கணக்குகளை     மட்டும் வைத்து, பற்று வரவு
செய்திருப்பவர்களின் வாழ்க்கை முறையை விளக்கியிருக்கும்
உத்தியைக்     காணலாம்.     இக்கதை     அமைப்பில்
ஒவ்வொருவருடைய குறிப்பேட்டை மாத்திரம் பட்டியலாகக்
காண்பித்து விடுவது சிறப்பு. கடிதங்கள், மருத்துவரின் தர்மா
மீட்டர் கருவி காட்டும் காய்ச்சல் அளவுகள், மளிகைக்
கடைக் கணக்குகள், அச்சடித்த அறிவிப்புகள், அழைப்புகள்
முதலியவற்றைக் கூடக் கதை சொல்ல உதவும் கருவியாகப்
பயன்படுத்தும் உத்தியை அண்ணா கையாள்வதைக் காணலாம்.

    சொல்லாதது என்ற சிறுகதையில் ஒவ்வொரு பத்தியிலும்
கதை நிகழ்ச்சிகளை விவரித்து முடிவில் அக்கதையில் வரும்
கதைமாந்தர்கள் அவ்வாறு கருதினார்களே தவிர வெளியில்
சொல்லவில்லை. சொன்னதில்லை என்றே முடிக்கின்ற ஒரு
உத்தியைக் காணலாம்.

    தொலைபேசி வாயிலாக வாணிகம் பேசும் புதிய உத்தியை
வரவு செலவு சிறுகதையில் அமைத்துள்ளார். நிகழ்ச்சிகளை
அவை நடந்த கால முறைப்படி எழுதாமல் முன் பின்னாக
மாற்றிப் படிப்போரைச் சிந்திக்கத் தூண்டும் வகையில்
அமைப்பதைக் காணலாம். அண்ணாவின் பெரும்பாலான
சிறுகதைகளில் இந்தப்பின்னோக்கு உத்திமுறையைக் காணலாம்.
சிறுகதைகளின் தொடக்கம் பெரும்பாலும் உரையாடலுடனே
தொடங்குகிறது. சிறுகதைகளின் முடிவு பெரும்பாலும் ஆசிரியர்
கூற்றாகவே அமைகின்றன. இனி அண்ணாவின் மொழிநடை
பற்றிப் பார்ப்போமா?

3.4.4 மொழி நடை

    அண்ணாவின் மொழி நடை தனித்தன்மை வாய்ந்தது.
எதுகையும், மோனையும் இவர் நடையில் இயல்பாய்
அமைவதைக் காணலாம். "அருவியின் சலசலப்பைப் போல் ஓர்
அழகு நடையைத் தமக்கென உருவாக்கியவர் இவர்.
கற்றோரையும் கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்து நடை"
என்று எழுத்தாளர் அகிலன் இவர் நடையைப் பாராட்டுகிறார்.
சான்றாக ஒன்றிரண்டைப் பார்ப்போமா?

    “சாருபாலா சமூக சேவை செய்து பிரபல்யமடைந்து
கொண்டிருந்த குமாரி. முகிலுக்கு இணையான குழல். அது
தழுவியிருந்தது வட்ட நிலவு முகம். பிறை நெற்றி. பேசும்
கண்கள். துடிக்கும் அதரம். அங்கம் தங்கம். நடை நாட்டியம்.
பேச்சோ கீதம்” (அண்ணாவின் சிறுகதைகள்).

    பரஞ்சோதி சிறுத்தொண்டனாக மாறிய நிலையினை
அண்ணாவின் அழகுநடை எப்படி எடுத்துரைக்கிறது பாருங்கள்.

    “பரஞ்சோதி சிறுத்தொண்டன் ஆனான். படைத்தலைவன்
பக்தன் ஆனான். முரசு கொட்டியவன் முக்திக்கு வழி தேட
முனைந்து     விட்டான்.     சாளுக்கிய     நாட்டுக்குச்
சண்ட மாருதமாகியவன் சரித்திரத்தில் இடம் பெறாமல்
சாதுக்கள் கூட்டத்தில் ஒருவன் ஆகிவிடுகிறான்” (பிடிசாம்பல்).

    அண்ணாவுக்கே உரிய மொழி நடைக்கு இன்னுமொரு
எடுத்துக்காட்டுப் பாருங்கள்:

    “செங்கோடனின் செவ்வாழைக் குலை ! அவனுடைய
இன்பக் கனவு ! குழந்தைகளின் குதூகலம். அதற்கு மரண
ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்” (செவ்வாழை).

    புதிய உவமைகளைக் கூறுவதும் இவர் தனிச் சிறப்பு.

    “குரோட்டன்ஸ் செடியிலே     குண்டு     மல்லிகை
பூக்குமா?” (அண்ணாவின் சிறுகதைகள்)

    முரண் என்னும் அணியும் அவர் மொழி நடைக்கு வலிமை
சேர்ப்பதைக் காணலாம்.

    “அங்கே 250 ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கோ
இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த
கம்பங் கொல்லையை      250          ரூபாய்க்கு
விற்றுவிட்டார்கள்” (இருபரம்பரைகள்).