| |
நூற்றுக்கு
மேற்பட்ட சிறுகதைகளை அண்ணா
படைத்துள்ளார். இவற்றில் 7 சிறுகதைகள்
வரலாற்றுச்
சிறுகதைகள் ஆகும். அண்ணாவின் சிறுகதைகள்
அனைத்திலும் சமுதாய விடுதலை
உணர்விற்கான
விழிப்புணர்வைக் காண முடிகிறது. வரலாற்றுச் சிறுகதைகளில்
மன்னர்கள் ஆட்சியின் வீழ்ச்சிக்கும்,
சூழ்ச்சிக்கும்
காரணங்களை வெளிப்படுத்தும் முயற்சிகளைக்
காண்கின்றோம். சமுதாயச் சிறுகதைகளில் பொருளாதார
ஏற்றத் தாழ்வு, வறியவர் உழைப்புச் சுரண்டப்படுதல்,
பெண்களின் அவலநிலை,
இடைத்தரகர்களின்
தன்னலப் போக்கு ஆகியவற்றை
எடுத்துரைக்கக்
காண்கிறோம்.பொருளாதாரச் சமநிலையே ஏற்றத் தாழ்வற்ற
சமுதாயம் உருவாக வழிகாட்டும் என்பதை அண்ணா
வலியுறுத்துவதைக் காண முடிகிறது. பெண்கள் துணிவு
மிக்கவர்களாக வாழ வேண்டும், அவர்களுடைய உரிமைக்கு
அவர்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற அண்ணாவின்
நோக்கத்தை அவருடைய சிறுகதைகளில் காணமுடிகிறது.
"உத்தி, உள்ளடக்கம்,
நடை ஆகிய அம்சங்களில்
முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த
அண்ணா, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தும்
இந்தத்
துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில்
ஒருவர்"
என்கின்றனர் சிட்டி மற்றும் சிவபாத சுந்தரம்.
அண்ணா தம் சிறுகதைப்
படைப்புகளில் சாதி பெற்றுள்ள
ஆதிக்கம், அதனால் ஏற்படும் சீர்கேடுகள்,மூட நம்பிக்கையால்
தன்னம்பிக்கை இழந்து சாதகம், சோதிடம் என்று அலையும்
மக்களின் அவல வாழ்வு ஆகியவற்றை எடுத்துரைக்கின்றார்.
அடுக்கு மொழியும், கேலியும், கிண்டலும்,வாதத்திறமையும்
கொண்டது இவர் மொழி நடை. பண்பட்ட நகைச்சுவை
இவருடைய சிறுகதைகளில் வெளிப்படக் காணலாம்.அறிவுக்கு
ஒவ்வாத மூட நம்பிக்கைகள் அழிய வேண்டும் என்பதை
வலியுறுத்துவன இவர் சிறுகதைப் படைப்புகள், கலப்பு மணம்,
விதவை மணம், சுயமரியாதைத் திருமணச்
சட்டம்
ஆகியவற்றைச் செயல்படுத்தத் தூண்டுவனவாக அமைந்தவை.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அண்ணா தமக்கெனத்
தனியிடத்தைப் பெற்று விளங்குகிறார் எனலாம்.
|