4.4 சிறுகதைக் கலை

    தமிழ் எழுத்துகளை ஆயுதமாக்கித் தம்மை ஓர்
இனப் போராளியாக ஆக்கிக் கொண்டவர் இவர் என்பதை
இவர் படைப்புகள் இனம் காட்டுவதாகக்     கூறுகிறார்
முனைவர். இராம.குருநாதன். சமூக உணர்வும், மானிட
நேயமும், உண்மை உணர்த்தும் இயல்பும், எழுத்தின் வழி
நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்தும் உடையவர்
சு.சமுத்திரம். நியாய மீறலைக் கண்டபோது ஏற்படும் சத்திய
ஆவேசம் பல கதைகளுக்குக் கருப்பொருளாக அமைந்துள்ளது
எளிமையாகக் கருத்தைச் சொல்லும் உத்தியைக் கையாளக்
கூடியவர். அங்கதம் என்று சொல்லப்படும் எள்ளல் சுவை
இவர் படைப்புகளில்     இயல்பாக அமைந்துள்ளதைக்
காணலாம். அவலச் சுவையையும்     நகைச்சுவையோடு
வெளிப்படுத்தும் நிலை இவரிடம் சிறப்பாக அமைந்துள்ளது.
பெயருக்கேற்ப சமுத்திரத்தின் கதைகள் ஆழம் காணமுடியாத
அழகினை உடையவை. தமிழுக்கு இவர் கதைகள் ஒரு
சமுத்திரம், கதைக்கடல் என்கிறார் ச.மெய்யப்பன்.

4.4.1 கதைப் பொருள்

    "இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்ப்புதின ஆசிரியர்களின்
பார்வை சமூகத்தின் பக்கம் திரும்பி விட்டது. சமூகத்தில்
மண்டிக் கிடந்த சாதி வேற்றுமைகளும், அங்கொன்றும்
இங்கொன்றுமாகத் தெரிந்த ஊழல்களும், வேறு பல
பிரச்சினைகளும் புதினங்களின் கருப்பொருள்கள் ஆயின.
மு.வ. செயகாந்தன்,     தி.சானகிராமன், நா.பார்த்தசாரதி,
சு.சமுத்திரம் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்" என்கிறார்
டாக்டர்.இரா.தண்டாயுதம் (தற்காலத் தமிழ் இலக்கியம்).

    இன்றைய     சமுதாயத்தைப்     பிடித்திருக்கின்ற
சில நோய்களைக் கண்டு கூறுவதும்,அவற்றைத் தீர்ப்பதற்கான
வழிமுறைகளை     எடுத்துரைப்பதும்     பெரும்பாலான
கதைகளுக்கான கருப்பொருள்கள் ஆகின்றன.

    அரசியல் கட்சி மற்றும் அக்கட்சித் தலைவர் மீது மோகமும்,
திரைப்பட மோகமும்     கொண்ட நிலை சமுதாயச் சீர்
கேட்டுக்குக் காரணமாவது சுட்டிக் காட்டப்படுகிறது.

    பணத்தாசை கொண்டு நீதி, நியாயம், நேர்மை
ஆகியவற்றைப் புறக்கணிக்கும் நிலையும், தனிநபர் வழிபாடு,
மக்களைத் தன்மானம் இழக்க வைக்கும் நிலையும் பல
கதைகளின் உள்ளடக்கமாகிறது.

    அரசு     அலுவலகங்களின்     அவலம், அதிகாரிகளின்
ஆணவப் போக்கு, ஏழைகளுக்கு நியாயம் புறக்கணிக்கப்படுதல்
ஆகியவை துணிவுடன் பேசப்படுகின்றன.

4.4.2 பாத்திரப் படைப்பு

    நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்கின்ற மனிதர்களையே
தம் படைப்புகளில் கதை மாந்தர்களாகப் படைத்திருக்கின்றார்
ஆசிரியர் சு. சமுத்திரம். இவர்களில் நல்லவர்களும் உண்டு.
வல்லவர்களும் உண்டு. ஏமாற்றுப் பேர்வழிகள், சோம்பேறிகள்,
கடமை மறந்த வாய்ச்சொல் வீரர்கள், சுயநலவாதிகள்
அனைவரும் இதில் அடங்குவர். மனச்சாட்சி அற்றவர்களையும்,
ஒத்தவர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் உதவி செய்து ஏழைகள்
வயிற்றில்      அடிப்பவர்களையும்     கதைமாந்தர்கள்
ஆக்கியிருக்கிறார்.

    சிறப்பாக விழாக் கொண்டாடுவதற்கு ஊர்ப் பணத்தை
நாசப்படுத்துகிறார்கள் காடசாமி, மாடசாமி என்பவர்கள்.
நேர்மைக்கும் நீதிக்கும் போராடும் பழனிச்சாமி, கடல்மணி
போன்றவர்கள் போராடிச் சாகிறார்கள். நட்பின் உயர்வுக்கு
எடுத்துக்காட்டாக,' சிநேகித சாதி'யில் உயர்ந்த மனிதர்களைப்
படைத்துக் காட்டுகிறார்.

    கட்சித் தலைவர்கள் மீது மோகத்தால் தமக்குள்
பகை கொள்கிறார்கள். தங்கள் வீட்டுத் திருமணத்தையே
நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கே கல்யாணம் இங்கே
கலாட்டா (குற்றம் பார்க்கில்).உறவு பகையாக மாறியது.யார்
காரணமாக இவ்வுறவு பகையாகின்றதோ அவர்கள் வீட்டுத்
திருமணம் நடைபெறும் செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது.

    கடமை மறந்து, ஆடம்பர விழாக் கொண்டாடும்
மக்களையும் நமக்குக்     காட்டுகிறார். பழம்பெருமை
பேசிக்கொண்டு பாராட்டு விழா எடுப்பவர்கள் பாகிஸ்தான்
போரில் காலை இழந்த சிப்பாயைக் கண்டு கொள்ளவில்லை
என்று மக்கள் மனப்பான்மையையும் அவர்களை வழிநடத்தும்
தலைவர்களின் சுயநலப் போக்கினையும் தோலுரித்துக்
காட்டுகிறது 'ஐம்பெரும் விழா'(ஒரு மாமரமும் மரங்கொத்திப்
பறவைகளும்
)."காற்றில் தென்னை ஆடும்போது அதில்
இருக்கும் ஓணான் தானே அந்தத் தென்னையை ஆட்டுவதாக
நினைத்து, தனது தலையை ஆட்டுமாமே... அப்படிப்பட்ட
அலுவலக ஓணான் பயல்கள்" (ஒரு மாமரமும் மரங்கொத்திப்
பறவைகளும்
) என்று பதவியும் அதிகாரமும் இருக்கும்
துணிச்சலில் தற்பெருமை கொள்ளும் மனிதர்களைச் சாடுகிறார்.
இனி அவர் கையாளும் உத்தி முறைகள் பற்றிப் பார்ப்போமா?

4.4.3 உத்தி முறை

    எதையும் எளிதில் சொல்லும் உத்தியே     இவர்
கையாளக்கூடியது. அவலங்களையும்     நகைச்சுவையாகச்
சொல்லும் உத்தியை இவர் படைப்புகளில் காணலாம். அரசு
அலுவலகங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை
நகைச்சுவையாக வெளிப்படுத்துவதைப் பாருங்கள். ஒரு
மின்விசிறி ஓடவில்லை என்றால் கூட அதைச் சரி
பண்ணுவதற்கு வைத்திருக்கும் சட்ட திட்டங்கள் உடனடியாகச்
செயல்படுத்த முடியாமல் இருப்பது     பின்வருமாறு
சொல்லப்படுகிறது:

    "நம்ம மெக்கானிக் ஒரே நிமிடத்தில் முடிச்சுடுவாராம்.
ஆனால் அது தப்பாம் .ஒரு அதிகாரியோ அல்லது ஊழியரோ
சர்க்கார் பணத்தை மோசடி பண்ணக் கூடாதுங்கிறதுக்காக
இப்படிப்பட்ட சட்ட திட்டங்களைப் போட்டிருக்காங்க. ஆனால்
அதில் தங்கள் சுயநலத்தையும், சோம்பல் குணத்தையும்,
பொறுப்பற்ற தன்மையையும் காட்டுவதால் ஏற்படும் அவலங்கள்
இவை". அரசு வேலை என்றால் இப்படி அல்லல் ஏற்படுத்தும்
என்ற அச்சம் ஓர் இளைஞனை அரசு வேலைக்கான நியமன
ஆணையையே கிழித்துப் போட வைக்கிறது என்று
‘அரவிந்தும் ஆறுமுகமும்’ கதையில் எடுத்துரைக்கிறார்.

    ஓர் அமைச்சரின் வருகையை ஒட்டிய முன்னேற்பாடுகள்,
குறிப்பாகப் போக்குவரத்துக்     கட்டுப்பாடு ஏற்படுத்திய
குழப்பத்தை நகைச்சுவையாகச் சொல்கிறது. ‘அமைச்சர் புகுந்த
மணவிழா’.போக்குவரத்து நெரிசலில் அமைச்சர் திருமணத்திற்கு
வரத் தாமதமாகவே மணமகனே அமைச்சரை எதிர்கொண்டு
அழைக்கச்     செல்கிறான்.     போக்குவரத்து நெரிசலில்
மணமகன் மாட்டிக் கொள்ள, மணமகனைக் காணாததால்
"அவனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை" என்று சிலர் பேச,
அதை நம்பிய அமைச்சரும் அவன் பொறுப்பற்றுப் போனதாகக்
கருதி, வேறொரு சொந்தக்காரப் பையனை மணமகனாக்கினார்.
தாமதமாக வந்த மணமகன் சோகமாக எங்கோ சென்றான்.
மறுநாள் வந்த பத்திரிகைச் செய்தி:'மணப்பெண் பிடிக்காமல்
மாப்பிள்ளை தலைமறைவு! அமைச்சரின் சமயோசிதத்தால்
மணமகள் குலமகளானாள்!'. இப்படி, சிறுகதை முடிவில் தரும்
அழுத்தம் இவருக்கே உரிய உத்தி எனலாம்.

    சிறுகதைத் தலைப்பிலேயே சொல்ல வந்த கருத்தைச்
சுருக்கி உரைப்பதும்     இவருடைய     உத்தி எனலாம்.
எ.கா: புலித்தோல் போர்த்திய மாடுகள், கண்ணுக்குத் தெரிந்த
கிருமிகள்,     பொறுத்தது     போதாது, (ஒரு மாமரமும்
மரங்கொத்திப் பறவைகளும்
), மேதைகள் தோற்றனர்
(குற்றம் பார்க்கில்), சிநேகித சாதி, வேலையில்’காயம்’ (மனம்
கொத்தி மனிதர்கள்
.)

4.4.4 மொழி நடை

    அங்கத நடையில் எள்ளல் சுவையினை அளிப்பது இவர்
நடை. சாமர்த்தியமாகச் சொல்லைக் கையாள்வதை இவருடைய
நடையில் காணலாம். புதிய உவமைகளையும், கிராமிய மணம்
கமழும் உவமைகளையும் இவருடைய படைப்பில் காணலாம்.
‘செண்பகாதேவி அருவி யாரோ தள்ளி விட்டது போல
ஓலத்துடன் விழுந்து கொண்டிருந்தது’.'வரவேற்புத் தாசில்தார்
முதல் இல்லாத சினிமாத் தயாரிப்பாளர் போல் கலங்கினார்'
(மனம் கொத்தி மனிதர்கள்),'அதற்குள் ஒரு டெலிபோன்
சத்தம், துஷ்டக் குழந்தையின் குவா, குவா சத்தம் மாதிரி',
கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள் (ஒரு மாமரமும்
மரங்கொத்திப் பறவைகளும்
).' பய மவள் புண்ணாக்கை
மாடுபாக்கிறது மாதிரி உன்னை ஆசையோடு பார்ப்பாள்’
நியாயம் (ஒரு சத்தியத்தின் அழுகை), 'அந்த ஜீப் தன்னை
சீப்பாக நினைத்து விடக் கூடாது என்பது மாதிரி அந்த ஓட்டை
உடைசல் கடையை விட்டுத் தள்ளியே நின்றது' (ஏவல்
பூதங்கள்
).