4.5 தொகுப்புரை

    சு.சமுத்திரம் 300க்கும்     மேற்பட்ட சிறுகதைகளைப்
படைத்துள்ளார். தன்மானத்தை எந்நிலையிலும் இழக்காதவனாக
மனிதன் இருக்க வேண்டும் என்ற இலட்சியமும், சமுதாயத்தில்
நடைபெறும் அநியாயங்களைக் கண்டு உள்ளம் கொதிக்கும்
ஆவேசமும், அதன் வெளிப்பாடும் இவருடைய சிறுகதைகளில்
காணலாம்.

    தன்னலம் மிகுந்து பொதுநல உணர்வற்றுப் போய் வாழும்
மனிதர்கள் மிகுந்த சமுதாயம் இவர் கதைகளில் படம்
பிடிக்கப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் உயர வேண்டும் என்ற
நோக்கம் பல கதைகளில் எதிரொலிக்கிறது. அதற்குரிய
வழிமுறைகளையும் இவர் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

    வறியவர் அவலம், குடும்ப உறவுகள், அவற்றின் நிலைகள்
பல கோணங்களில் எடுத்து உரைக்கப்படுகின்றன.சமூக அநீதியை
எதிர்த்துப் போராடும் வலிமை படைத்த உள்ளங்களையும்,
அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் சு.சமுத்திரம் நயமுற
எடுத்துரைக்கின்றார்.

    கூறவந்த கருத்தை அங்கதச் சுவையோடு எடுத்துரைக்கும்
ஆற்றல் பெற்றவர் சு.சமுத்திரம். சமத்காரமாகக் கையாளும்
ஆற்றல் பெற்றவர். தமக்கெனத் தனிநடை கொண்டவர்.

    "சமுத்திரத்திடம் சீற்றமுண்டு - சீதளக் குளிருமுண்டு.
எல்லாவற்றுக்கும் மலோக அவரிடம் மானிட நேயம் உண்டு"
என்னும் முனைவர். இராம குருநாதனின் கூற்று மிகப்
பொருத்தமாக உள்ளது எனலாம். சமூகப் பொறுப்புணர்வு
அனைவர்க்கும் வேண்டும் என்ற உயரிய நோக்குடைய
சு.சமுத்திரத்தின் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்
தனியிடம் பெற்று விளங்குகின்றன எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

சு.சமுத்திரம் சிறுகதைகளின் நோக்கம் எவ்வாறு
அமைந்துள்ளது?

(விடை)
2) எதிர்ப் பரிணாமம் - சிறுகதையின் உள்ளடக்கம்
யாது?
(விடை)
3) ‘இலவு காத்த பலவேசம்’ சிறுகதையில் யாருடைய
மனித நேயம் எடுத்துக் காட்டப்படுகிறது?
(விடை)
4) தன் சிறுகதையில் ‘மாப்பிள்ளை’ என்று யாரைக்
குறிப்பிடுகிறார் சு.சமுத்திரம்?
(விடை)
5) தலைப்பிலேயே கதைக்கருவை வெளிப்படுத்தும்
சிறுகதைகளுக்கு இரண்டு சான்றுகள் தருக.
(விடை)