5.1 பிரபஞ்சன்

    சிறுகதை, புதினம்     என்ற     இரு    இலக்கிய
வகைகளிலும் மக்களறிந்த சிறந்த படைப்பாளிகளில் பிரபஞ்சன்
குறிப்பிடத் தகுந்தவர். சமூக விமர்சனக் கட்டுரைகளும் எழுதி
வருபவர்.56 வயது நிறைந்த இவர், பாண்டிச்சேரியில் பிறந்தவர்.
தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரியில் பள்ளிப்
படிப்பை நிறைவு செய்தபின் பட்டப் படிப்பைத் தஞ்சையில்
பயின்றார்.

    பிரபஞ்சன் என்ற புனைபெயரைக் கொண்ட இவருடைய
இயற்பெயர் வைத்தியலிங்கம்.சென்னையில் வாழும் பிரபஞ்சன்
பல வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் சிறுகதைகள்
படைத்து நாடறிந்த எழுத்தாளராக இருப்பவர்.

    பிரபஞ்சம் என்பது, உலகத்தைக் குறிக்கும். உலக
மனிதனாக ஆசைப் பட்டதால் பிரபஞ்சன் என்ற புனைபெயரை
வைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

    "மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும்.
எனில் மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில்
அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது
அவசியம். இங்ஙனம் மனிதன் தன்னை அறிவதற்குக் கலையும்
இலக்கியமும் மிகப் பெரும் துணையாய், ஒரு நல்ல
சினேகிதனாய் நிற்கும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்"
என்கிறார் (நேற்று மனிதர்கள்- முன்னுரை).

     மேற்கூறிய நம்பிக்கை பிரபஞ்சன் படைப்புகளில்
எதிரொலிக்கக் காணலாம்.

    தனக்குப் பிடித்த பத்துப் புதினங்களைப் பட்டியலிடும்
பிரபஞ்சன்,     தி. ஜானகிராமனின்    ‘அம்மா வந்தாள்’,
ஜி.நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே’ என்று
தொடங்கி, பத்தாவது புதினமாகத் தன்னுடைய வானம்
வசப்படும்
புதினத்தைக் குறிப்பிடுகிறார். இனி இவர் பெற்ற
பரிசுகளும் பாராட்டும் பற்றிப் பார்ப்போமா?

5.1.1 பரிசுகளும் பாராட்டுகளும்

    தமிழக அரசும், புதுச்சேரி அரசும் சிறந்த எழுத்தாளர் என்று
இவரைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. இவரது வானம்
வசப்படும்
புதினம் சாகித்திய அகாதமி பரிசு பெற்றுள்ளது.
இவரது ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் சிறுகதைத்
தொகுதி சிறந்த சிறுகதைத் தொகுப்புக்குரிய முதல் பரிசு
பெற்றுள்ளது. நேற்று மனிதர்கள் சிறுகதைத் தொகுதி 1986-
ஆம் ஆண்டு அரசின் முதற் பரிசு பெற்றுள்ளது. இச்சிறுகதைத்
தொகுதி பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடமாக
வைக்கப்பட்டுள்ளது.

    இவரது புகழ்பெற்ற நாடகப் படைப்பு முட்டை தில்லிப்
பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது
மானுடம் வெல்லும் சரித்திரப் புதினம் 'இலக்கியச் சிந்தனை'
பரிசு பெற்றுள்ளது.

    இவரது மகாநதி புதினம் கோவை கஸ்தூரி ரங்கம்மாள்
நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது சந்தியா புதினம் 1997-
ஆம் ஆண்டு ஆதித்தனார் நினைவுப் பரிசு பெற்றுள்ளது.
இவரது பிருமம் சிறுகதை இலக்கியச் சிந்தனையால்
ஆண்டின் சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு
முதலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

5.1.2 சிறுகதைப் படைப்புகள்

    இவர் படைத்த பல சிறுகதைகள் தமிழன் எக்ஸ்பிரஸ்,
குங்குமம், குமுதம், தினமலர், கல்கி, நக்கீரன், இந்தியா டுடே,
அலைகள், தினமணி கதிர், புதிய மனிதன், தாய், மங்களம்,
காலச்சுவடு, ஆனந்த விகடன், தமிழரசு, மின்மினி ஆகிய
இதழ்களில் வெளிவந்தவை.

    1986 ஆம் ஆண்டில் வெளிவந்த நேற்று மனிதர்கள்
சிறுகதைத் தொகுதி 1997 ஆம் ஆண்டில் நான்காம் பதிப்பாக
வெளிவந்துள்ளது. சைக்கிள் தொடங்கி நேற்று மனிதர்கள்
முடிய 13 கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு அது.
1995 இல் வெளிவந்த விட்டு விடுதலையாகி சிறுகதைத்
தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

    2001 இல் வெளிவந்த இருட்டின் வாசல் சிறுகதைத்
தொகுப்பில் ஒரு மதியப் பொழுதில் தொடங்கி, சிட்டை
முடிய 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நாளிதழ்களிலும்,
வார இதழ்களிலும், இலக்கிய மலர்களாக வரும் மாத
இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும், இவரது சிறுகதைப்
படைப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.