"பெண்களுக்கென ஓர் உள்ளுலகம் இருக்க
முடியாது
என்றே ஆண்களின் உலகம் நம்பி
வந்தது. ஆண்களைப்
பொறுத்தவரை பெண்கள் போகக்
கருவிகள். தமக்கென
வாழாப் பிறர்க்கு உரிமையானவர்கள்.
அவர்களுக்கென்று ஒரு
வானம் இருக்க முடியாது. அவர்கள்
ரசிக்க நட்சத்திரம்
இல்லை. அவர்கள்
சுவாசிக்கக் கரிப்புகையே
போதும்.
அவர்களுக்கு நண்பர்கள் இருக்க முடியாது.
ஆண்களின் இந்த
மனோ பாவத்தின் பயனாய்ச்
சீரழிக்கப்படும் பெண்கள்
கோடிக் கணக்கானவர்கள். உங்கள் சொந்த
வாழ்வில் நீங்கள்
இவ்விதமான நீசச் செய்கைக்குத்
துணை போதல் ஆகாது".
(நேற்று மனிதர்கள் -
முன்னுரை) என்ற ஆசிரியரின்
கட்டளையை எதிரொலிப்பவை பிரபஞ்சனின்
பெண்கள் பற்றிய
கதைகள் எனலாம்.
பெண்களின்
உரிமையும் உணர்வும் மதிக்கப்படாத நிலை
இன்றும் சமுதாயத்தில் நிலவுவதை
எடுத்துரைக்கும் சிறுகதை
'அம்மாவுக்கு மட்டும்' (இருட்டின் வாசல்).
விடியற்காலை
நாலரைக்கு எழுந்து வேலை
செய்யத்
தொடங்கிய சாந்தாவை அவன் மகன்
சித்து பார்க்கிறான்.
தொடர்ந்து அவள் (காபி,
இட்லி, சமையல்) வேலை
செய்வதைப் பார்த்துக் கொண்டே
இருக்கிறான். கணவன் அவசர
அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு
அலுவலகம் செல்கிறான்.
புறப்படும்போது வந்த தன் நண்பனுக்கு மனைவியை
அறிமுகம்
செய்து வைக்கிறான். "வேலைக்குப் போறாங்களா?" என்று
நண்பன் கேட்ட போது, "இல்ல, வீட்டுல சும்மாதான் இருக்கா"
என்கிறான். வேலைக்காரியை
நிறுத்திவிட்டு, மேலும்
சிக்கனமாக இருக்கச் சொல்கிறான்.
"ஆபீஸ்ல நாலு ஆள் வேலையை நான் செய்யறேன்.
ரொம்பக் களைப்பா ஆயிடுது.
வீட்டுல சும்மா இருக்கிற
உனக்கு எங்க கஷ்டம் விளங்காது" என்கிறான். தூக்கம்
வரவில்லை என்று சொன்ன மகனிடம்," உங்களுக் கென்ன?
அம்மா, வீட்டுக்குள்ள மகாராணியா
இருக்கா. நீ படிக்கிறே.
காலைலே பஸ்சுல நசுங்கி, நடந்து,
ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வீடு
வந்து சேர்றதுக்குள்ள நான் படற
கஷ்டம் எனக்குத்தான்
தெரியும்.’
"எதுக்கப்பா இத்தனை
கஷ்டப்படறே?"
"கஷ்டப்படலேன்னா, சம்பளம், சுளையா மூவாயிரம்
யார் கொடுப்பா?"
"அப்பா, உனக்கு ஆபிசுல சம்பளம் கொடுக்கறாங்க.
அம்மாவுக்கு யாருப்பா சம்பளம் கொடுப்பா?"
"அம்மாவுக்கு சம்பளமா?"
"அம்மாவும்தானே வேலை
செய்யறாங்க.
காலையிலே உனக்கு முன்பே எழுந்திருக்கிறாங்க. தெருப்
பெருக்கி காபி போடறாங்க. சோறு ஆக்கிறாங்க. துணி
துவைக்கிறாங்க, வீடு கழுவி விடறாங்க, ராத்திரியும்
சோறு
ஆக்கிறாங்க. இதுக்கெல்லாம் சம்பளம் தர வேணாமாப்பா
நீ?ஆபீசுல நீ வேலை பார்க்கிறதுக்கு உனக்கு சம்பளம்.
வீட்டுல வேலை பார்க்கிறதுக்கு அம்மாவுக்கு யார்
சம்பளம் கொடுப்பா?"
பதில் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தான் சேகர்.
சேகருக்கு மட்டுமா பதில் சொல்லத் தோன்றவில்லை என்ற
பாவனையை இச்சிறுகதை உண்டாக்குகிறதல்லவா?
வரதட்சிணைக்
கொடுமையைச் சொல்வது
தொலைந்து
போனவள் (விட்டு விடுதலையாகி) சிறுகதை.பெண்ணினத்தையே
அவமானப்படுத்துவதைப் போல்
நடைபெறும் பெண்பார்க்கும்
நிகழ்ச்சி இப்படி விமர்சிக்கப்படுகிறது:
சீதா
அக்காவைப் பெண்பார்க்க
வருபவர்கள் இரண்டு
வகைப் பட்டவர்களாக
இருப்பார்கள். காலை
நேரத்தில்
வருபவர்கள் மற்றும் மாலை வேளையில்
வருபவர்கள். மிக
நிம்மதியாகக் காலைப்
பலகாரம்
சாப்பிட்டு விட்டு,
பெரும்பாலும் ஞாயிறுகளில் பொழுது
போக்க, வேறு ஒரு
காரியமும் இல்லையெனின் அப்படியே தமாஷாக
அக்காவைப்
பார்க்க வருபவர்கள். மாலை
வேளைக்காரர்கள்... காலாற
நடந்து ஒரு மாறுதலுக்காக
வருபவர்கள். வந்தவர்கள்
இனிப்பு காரமெல்லாம்
சாப்பிட்டார்கள். எல்லா
மாப்பிள்ளைகளையும் போலத்தான் அவரும்
இருந்தார். அதே
விறைப்பு, அதே ஒட்டாத பார்வை எல்லாம். "மிஸ் சீதாவுக்கு
என்ன அடிப்படைச் சம்பளம், நானூற்றைம்பதா?
எழுநூறுக்கு
மேலேன்னாரே தரகர்" அலுத்துக் கொள்ளும் மாப்பிள்ளை.
பண
விஷயத்தில் மாப்பிள்ளைப்
பையன் குறியாக
இருப்பது பற்றித் தயங்கினார் பெண்ணைப்
பெற்றவர். பெண்
என்ன முடிவெடுக்கிறாள் பாருங்கள்:
"வரப் போகிறவரைப் புரிந்து கொண்டு,
அவரிடம் இருக்கிற
நல்ல குணத்தை அல்லது கெட்ட குணத்தைப் புரிஞ்சுகிட்டுக்
கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியா நாம இருக்கோம்?
கண்ணுக்கு விகாரமா இல்லை; ஏதோ சம்பாதிக்கிறார். அதுக்கு
மேலே நம்மால போக முடியாதுடி. ஒவ்வொரு சம்பந்தமும்
முறிஞ்சு போறப்போ அப்பா எவ்வளவு சங்கடப்படறார்?
உனக்கும் வயதாகிறது. நான் எதுக்கு நந்தி மாதிரி நடுவில்
கிடந்து உன் வாழ்க்கையை மறிக்கணும்" என்கிறாள்
தங்கையிடம். இப்படித் தன் ஆசைகளை விருப்பத்தைத்
தொலைத்துக் கொண்டு மற்றவர்கள் மனத்தை நோகடிக்காத,
பெண்ணின் மேன்மையான உணர்வுகளைச் சொல்லும்
கதைதான் ‘தொலைந்து போனவள்’ (விட்டு விடுதலையாகி).