5.3 சிறுகதை நோக்கும் போக்கும்

    குழந்தைகள், பெண்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்
என்ற பிரபஞ்சனின் நோக்கம் அவருடைய பல சிறுகதைகளில்
வெளிப்படக் காண்கிறோம். நேற்று மனிதர்கள் சிறுகதைத்
தொகுப்பின் முன்னுரையில் ஆசிரியர் ஆணாதிக்க உணர்வுகள்
சமுதாயத்தில் மிகுந்து இருப்பதை எப்படிச் சொல்கிறார் என்று
பாருங்களேன்:

    எனக்காக அவள் உயிரை, உடம்பை, அணு அணுவாய்த்
தேய்த்து உடம்புத் தோலை எனக்குப் பாதுகையாய்த் தைத்துத்
தருவாளா? நல்லது அவளை     சக்தி என்று நான்
கொண்டாடுவேன். அவளை நான் தெய்வம் ஆக்குவேன்.
கோவிலில் வைத்துக் கும்பிடுவேன். ஆனால் ஒரு சக மனுஷி
யாக, சிநேகிதியாக, சகாவாக,உயிர்ப் பிண்டமாக, ஆத்மாவாக
மட்டும் நான் நடத்த மாட்டேன்! அப்படிப் பெண்ணைச் சக
மனிதராக ஏற்றுக் கொண்டால் என் ஆணாதிக்கம் என்னாவது?
(நேற்று மனிதர்கள் - முன்னுரை)

    இருட்டின் வாசல் சிறுகதையில் வேலைக்குச் சென்று
பொருள் ஈட்டும் பெண்ணுக்கு அவளுடைய சம்பளத்தில் கூட
உரிமை இல்லாதிருப்பதைச் சொல்கிறார் பிரபஞ்சன்.

    கணவன் திருமணமாகிப் பதின்மூன்று மாதங்களில் சம்பளம்
தருகிற நாளில் ஏதோ வேலையாக வருவது போல் வந்து
அவள் சம்பளக் கவரைப் பெற்றுக் கொண்டு விடுவான். ஒரு
நாள் அப்படி வாங்கிக் கொள்ளும் போது,

    "ஒரு அஞ்சு ரூபாய் கொடுங்களேன்; தலையை வலிக்குது
காபி சாப்பிடணும்" என்றாள். அவன் பைக்குள் கையை
விட்டான் . சில்லறையை எடுத்தான். எண்ணினான்.

    "காபிக்கு ரெண்டு ரூபாய் போதாதா" என்கிறான்.

    இவ்வாறு தனி மனிதனின் மன மாறுதல்களும், சமுதாய
மாற்றங்களும் பிரபஞ்சன் சிறுகதைகளில் நுணுக்கமான
உணர்வுகளோடு பதிவு செய்யப்படுகின்றன.

    மாறுதல்கள் என்ற சிறுகதையில் தந்தை மகன் என்ற
நிலையில் மகனைப் பற்றிய தந்தையின் உணர்வுகளையும்,
இருவரிடையே உள்ள மாற்றங்களையும் எடுத்துரைக்கக் காணலாம்.

    மனித நேயத்தை வெளிப்படுத்துவதை இவருடைய
படைப்பின் நோக்கமாகக் காணலாம். எவ்வித உணர்வுகளையும்
நுணுக்கமாக வெளியிடும் திறன் இவர்க்குரிய சிறப்பு எனலாம்.

5.3.1 மனித நேய வெளிப்பாடு

    மனிதனை மனிதனாகவே அவனது நிறை குறைகளுடனே
நேசிக்க வேண்டும் என்பதை, பிரபஞ்சன் படைப்புகளில்
காணலாம்.

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

    என்று     வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமானவர்
அண்ணாச்சி (பூக்களை மிதிப்பவர்கள்,) தனக்கென்று
உறவினர்    யாருமில்லாத அண்ணாச்சி     எல்லாரையும்
நேசிப்பவர். அவருக்கும் எதிரியாக ஒருவன் அவரைக்
கத்தியால் குத்திவிட்டுச் சென்றுவிட்டான்.குத்தியது யாரென்று
தெரிந்தும் அவன் மீது இரக்கப்பட்டவர்.அவனைக் காட்டிக்
கொடுக்காமல் இருக்கிறார் என்றால் அவருடைய பண்பினை
என்ன என்று சொல்வது?

    மனிதர்கள்     மனிதப் பண்பு     மிக்கவர்களாக
இருக்கும் பொழுது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
அப்படி உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பது
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க
வேண்டும். இக்கருத்தை, ' சுந்தா மாமா'     (பூக்களை
மிதிப்பவர்கள்
) சிறுகதையில் பிரபஞ்சன் எப்படிக் கூறுகிறார் பாருங்கள்:

    விமர்சன சிம்மன் வரது, நாணாவின் பாட்டைக் கேட்டு
மேடையில் ஏறி விமர்சனம் செய்கிறார்.

    "நாணா மகாவித்வான். வித்வான்களுக்கெல்லாம் வித்வான்.
அந்த சரகுண பாலிம்ப, அட்சரலட்சம் பெறும். . . சங்கீதம்
பெரிசு இல்லை. எந்த வித்தையுமே பெரிசு இல்லை.
உத்தமமான மனுசனா வாழறது தான்ய்யா பெரிசு. நல்ல பாட்டு
கீதம், நல்ல ஜீவிதம் சங்கீதம். ‘ச’ என்றால் ரொம்ப
உசத்தியானதுன்னு அர்த்தம். நாணா! உன் பாட்டை விடவும்
நீ உசந்தவனா இருக்கணும்".

    அலிகளின் வாழ்க்கை இரக்கத்திற்குரியது. அவர்தம்
உணர்வுகள் மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட்டதன்
விளைவு ' சின்னி ' என்ற சிறுகதைப் படைப்பு (இருட்டின்
வாசல்
). அலிகளின் மென்மையான உணர்வுகளும் அவர்களும்
மனிதர்களே, மனிதாபிமானத்தோடு அவர்களைப் பார்க்க
வேண்டும் என்பதும் இக்கதையில் வாசகர்களுக்கு உணர்த்தப்
படுகிறது.

5.3.2 உளவியல் நோக்கு

    மனிதர்களின் செயல்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியில்
காரணம் சொல்வது உளவியல் நோக்கு எனலாம். உளவியல்
அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை 'பாலர்' (பூக்களை
மிதிப்பவர்கள்
) என்ன சொல்கிறதென்று பார்ப்போமா?

    மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்பவர் தாணு.அவருடைய
அறிமுகம் பற்றியும் அவர் நடவடிக்கைகள் பற்றியும் அவர்
நண்பர் சொல்வதாகக் கதை தொடர்கிறது. கொஞ்சம்
பழகிவிட்டாலே தங்க பஸ்பம் பற்றியும், லேகியம் பற்றியும்
சொல்லத் தொடங்கி விடுவார். நண்பர்களுக்கு வைத்தியக்
குறிப்புகள் சொல்லும் தாணுவைப் பற்றி அவர் நண்பர்
மூர்த்திக்குச் சந்தேகம் வந்து விடுகிறது. தன் அந்தரங்க
வாழ்க்கை பற்றி மற்றவர்களிடமெல்லாம் சொல்லி விடுவாரோ
என்று பயந்து அவர் தொடர்பே வேண்டாம் என்று வெறுத்துப்
பேசுகிறார்.

    அப்போதுதான் மனம் திறந்து பேசுகிறார் தாணு.“நான்
ஒரு     ஆம்பிளையே இல்லை சார். நான் ஒரு
இரண்டுங்கெட்டான். அதனால்தான் என் பெண்டாட்டி
எங்கிட்டேர்ந்து ஓடிப்போயிட்டா. நான்தான் அப்படி
ஆயிட்டேன்... என்     சினேகிதர்கள்     சந்தோஷமா
இருக்கணும்னுதான்...” என்கிறார் தாணு.

    தாணு திடீரென்று இறந்து போனதை, சிறுகதைத்
தொடக்கத்தில் கூறிவிட்டு, இறப்பதற்கு முன் நடந்த
நிகழ்ச்சிகளைப் பின்னால் கூறும் உத்தியை இக்கதையில்
கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.

5.3.3 உணர்வுகளின் வெளியீடு்

    நிகழ்ச்சி ஒன்றுதான். ஆனால் படைப்பாளிகள் காணும்
கோணங்கள் தான் எத்தனை வகை! பிரபஞ்சன் நிகழ்வுகளை
வர்ணிக்கும் விதம் பற்றிப் பார்ப்போமா?

    மாலைக் காலத்தில் அலுவலகத்தை விட்டுப் புறப்படும்
நேரத்தில் ஏற்படும் சப்தங்கள் பற்றிய வர்ணனையைப்
பாருங்கள்:

    வீட்டுக்குப் புறப்படும் நேரத்துக்குரிய சப்தங்கள்-மேசைக்
களவயத்தை இழுக்கும் சப்தம் ‘சர்ர்.... . ‘ அப்புறம்
சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து ‘டக்’ என்று மேசை மேல்
வைக்கும் சப்தம். அதை எடுத்துக் கைப்பைக்குள் ஜிப்பை
‘ஸ்ஸ்’ என்று இழுத்து, அதை உள்ளே தள்ளும் சப்தம்...
களவயத்தைக் கடைசித் தடவையாக நோட்டம் விட்டுச் சாத்தும்
சப்தம்... இந்தச் சப்தங்கள்     எதன் பொருட்டும்
மாறுபடுவதில்லை. எவ்வளவு இனிமையான சப்தம்... விடுதலை
உணர்வின் சப்தம் இது. 'மன மயக்கம்', ( பூக்களை
மிதிப்பவர்கள்
)

    பிரபஞ்சனின் இசை ஈடுபாட்டை அவர் படைப்புகளின்
வழி அறியலாம். இசைப் புலமையையும் மிக நுணுக்கமாக
வெளிப்படுத்தும் இடங்கள் பல. எடுத்துக்காட்டாக, கீழ்வரும்
பகுதியைப் பாருங்கள்:

    சுந்தா மாமா, நாணாவின் பாட்டைக் காதே உடம்பாகக்
கேட்டுக்     கொண்டிருந்தார்... நாணா, ஏணிப் படிகளில்
செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தான். முதலில் கணபதியைத்
தொட்டான். அப்புறம் இந்தோளத்தில் முழுகி சாமஜ வர
கமனாவில் நீந்தினான். அப்புறம் ‘வருவாரோ’ என்று
சாமாவைக் கேட்டான். மின்னல் தோரணையில் பிர்க்காக்கள்.
ஜரிகை மாதிரிக் கார்வை.(சுந்தா மாமா)

    இனி, பிரபஞ்சனின் சிறுகதைக் கலை பற்றிப் பார்ப்போமா!