6.2 சிறுகதைக் கருவும் களமும்

     பெண்கள் பற்றிய ஆண்கள் மதிப்பீடும் தம்மைப் பற்றிய
பெண்கள் மதிப்பீடும் முரண்படத் தொடங்கிவிட்டதை
எடுத்துக் காட்டுவன அம்பை படைக்கும்     சிறுகதைகள்.
இம்முரண்பாட்டிற்கான காரணத்தை வெளிப்படுத்தும் கதைக்
கருக்களையும், அதற்கேற்ற கதைக் களன்களையும் அம்பை
உருவாக்கிக் கொள்கிறார். பெண்கல்வி, தொழில் நுட்பம்,
அறிவியல் முன்னேற்றம் காரணமாகப் பெண்கள் விழிப்புணர்வு
பெற்றுள்ளனர். ஆண்களால் தாங்கள் சக மனிதர்களாக
நடத்தப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.
பெண் அடங்கி இருக்க    வேண்டும். சமையலறையே
அவளுடைய பிரதான இருப்பிடம் என்ற கருத்துடைய
இச் சமுதாயம் பெண்களைச் சக மனிதர்களாக நடத்துவதில்லை.
ஆண்கள் பெண்களை அலட்சியப்படுத்துவதை நுணுக்கமாகவும்,
ஆவேசமாகவும், சில சமயங்களில் நகைச்சுவையாகவும்
வெளிப்படுத்துகிறார் அம்பை.

6.2.1 குடும்பம்

    பெண் வளரும் குடும்பச் சூழ்நிலையிலேயே அவளுக்கு
விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவளை எந்த அளவுக்குப்
பாதிக்கச் செய்கிறது என்பதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’
சிறுகதை (சிறகுகள் முறியும்) எடுத்துக் காட்டுகிறது.

    ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்த போது
அவளுடைய தாய் ஊரில் இல்லை. பருவமடைந்ததை ஒட்டி
அவள் உடலில் ஏற்படும் மாறுதல்களால் அச்சம் கொள்கிறாள்.
அதற்குப் பிறகு தனக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக்
கண்டு வியப்படைகிறாள். ஊரிலிருந்து வரப்போகும் தாயிடம்
தனக்கு ஆதரவு கிடைக்கும், அஞ்சி நடுங்கும் தன்னை அவள்
ஆதரவோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்வாள்
என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவள்
தாய் அப்படிப்பட்டவள். எதற்குமே பதற்றப்படாமல் தன்னை
வளர்த்தவள். தான் கறுப்பாக இருந்தாலும், அது குறித்து
எதுவுமே பேசாமல் "என்ன அடர்த்தி உன் தலைமுடி".
"உனக்கு நடனம் கற்றுக்கொடுக்கப் போகிறேன்" என்றெல்லாம்
சொல்லித் தனக்கு உற்சாகம் ஏற்படுத்தும் அந்தத் தாய்
அசுத்தங்ளைச் சுத்திகரிக்கும் நெருப்பாகத் தோற்றமம் தந்தவள்.
ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானு கோடி அழகுகளைத்
தோரணமாட வைக்கும் அவள் தாய், சிறுமிக்கு ஒரு
தேவதையாகவே தெரிந்தவள்.

    அந்தத் தாய் ஊரிலிருந்து வந்ததும், "உனக்கு
ஆகியிருக்கும் இதுவும் அழகுதான்" என்று சொல்வாள்.
பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லாரையும்
புன்னகையின் ஒரு தீப்பொறியில் ஒதுக்கித்தள்ளி விடுவாள்
என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாள் அந்த சிறுமி,

    ஆனால், “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்?
இது வேறே இனிமே ஒரு பாரம்” என்கிறாள் தாய். தேவதை
போன்ற அம்மா, யதார்த்தத்துக்கு உட்பட்ட வெறும் மனித
அம்மாவாகத் தெரிகிறாள். இந்த அதிர்ச்சியை அவளால்
தாங்கிக்     கொள்ள முடியவில்லை.     இச்சிறுகதையில்
இளம்பருவத்திலேயே ஒரு பெண்ணின் மன உணர்வுகள்
ஒடுக்கப்படுவதையும் குற்ற உணர்வு ஏற்பவளாக ஆகக்கூடிய
நிர்ப்பந்தச் சூழலையும் எடுத்துக் காட்டுகிறார் அம்பை.

6.2.2 சமூகம்

    ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் எதற்கெல்லாம்
உரிமையில்லாமல் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது அம்பையின்
பல சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆண்களுக்கு
சைக்கிள் கற்றுக் கொள்ள முழு உரிமை உண்டு. பெண்ணுக்கு
என்றால், "சைக்கிள் பக்கம் போனால் தெரியும்" போன்ற
கூப்பாடுகள் ; பிறகு, "கை, கால் முறிந்த பெண்ணுக்குத்
திருமணமாகாது" போன்ற எச்சரிக்கைகள் வருகின்றன.ஆனால்
தொடர்ந்து தம்பிக்கு மட்டுமே சைக்கிள் ஓட்ட அனுமதி
வழங்கப்படுகிறது. (வாகனம், காட்டில் ஒரு மான்).
"அவனுக்குக் கை, கால் உடைந்தால் அவனை யார் கட்டிக்
கொள்வார்கள்?" போன்ற இவள் வாதங்கள் யார் காதிலும்
விழவில்லை.

    இச்சமுதாயத்தில் ஆண் செய்யும் போது சரியாகத்
தோன்றும் ஒன்று ஒரு பெண் அதைச் செய்தால்
பைத்தியக்காரத்தனமாக ஏன் தோன்றுகிறது என்ற வியப்பில்
எழுந்த கேள்விகளைப் பாருங்கள:

    பாரதியார் பக்கத்து வீட்டுக்குப் போய் அரிசி கடன்
கேட்பதைப் போலவும், அவர் கொண்டு வந்த அரிசியைச்
செல்லம்மாள் உற்சாகமாகக் குருவிகளுக்குப் போடுவதைப்
போலவும் அப்படி இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற
கற்பனை உதிக்கிறது ஒரு சிறுகதையில் (பிரசுரிக்கப்படாத ஒரு
கைப்பிரதி, காட்டில் ஒரு மான்).

6.2.3 புராணங்களில் புதிய பார்வை

    அறிவியல் முன்னேற்றமும் கல்வியறிவும்     இன்று
மக்களிடையே விழிப்புணர்வைத்     தோற்றுவித்து, பல
சிந்தனைகளை அவர்களுக்குள் எழுப்பியிருக்கின்றன. சிறுவர்,
சிறுமியர், இளைஞர்கள், முதியோர் என்று அவரவர்
வயதுக்கேற்றாற் போல் இவை வேறுபடலாம். திருமாலின் பத்து
அவதாரங்களில்     கண்ணனாகக்     கோபியரிடையே
வளர்ந்தவனைப் பற்றிய கதைகள் பல உண்டு அல்லவா?
அதைப்பற்றிய ஒரு சிறுமியின் எண்ணம் அம்பையின்
சொற்களில் இப்படி வெளிப்படுகிறது:

    பழத்தைக் கடித்துக் கொடுக்கும் சுகாதாரமற்ற முறைகளைக்
கையாண்ட கண்ணன் இன்னமும் அவளுக்குப் பிடிபடவில்லை
(காட்டில் ஒரு மான்).

    மலைக்காட்டில் பிறந்து வளர்ந்த பெண் செந்திரு. அவள்
வாழ்க்கையையும், அவள் எழுதும் வாழ்க்கைக் கதையையும்
கூறும் சிறுகதை 'அடவி' (காட்டில் ஒரு மான், ப. 136).
கணவன் வியாபாரம் செய்பவர். பல கிளைகள் கொண்ட
வியாபாரத்தில் அவளைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ள
அவன் தோழர்கள் உடன்படவில்லை என்று கூறிவிட்டான்.
இதனால் அவள் மனம் நொந்து காட்டிற்குச் செல்கிறாள்.
அங்குச் சீதையின் கதையை எழுதுகிறாள். இராமன் செயலைச்
சிந்திக்கிறாள். பல நாட்கள் வனத்தில் இடர்ப்பட்டு
இராமனையே நினைத்துக் கொண்டிருந்த சீதையை அக்கினியில்
குளிக்கச் சொல்லும் இராமனை, அவனுடைய மனப்பான்மையை
அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இசை ஈடுபாட்டுடன்
சீதைக்கும் அந்த இசையைக் கற்றுத் தர விரும்பும் இராவணன்
நண்பனாகத் தெரிகிறான்.

    மனித நேயத்தை மையமாகக் கொண்ட சிறுதைகளையும்
அம்பை படைத்துள்ளார். அவை பற்றி இனி பார்ப்போமா?

6.2.4 மனித நேயம்

    மன நோயால் துன்புறும்     ஒருவனுடைய வாழ்க்கை
அவனுக்கும், அவன் குடும்பத்தார்க்கும் அளவற்ற துன்பத்தைத்
தருகிறது. அவனுடைய வாழ்க்கையிலும் மனைவி என்ற
முறையில் பங்கு கொண்ட அவள் மீது காட்டும் மனித
நேயத்தைச் சொல்லும் சிறுகதை ' அறைக்குள் இருந்தவன்'
(சிறகுகள் முறியும்). வறுமையின் காரணமாய் அந்த
மன நோயாளிக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுக்க
உடன்படுகிறாள் தாய். வீட்டில் உள்ளவர்களே அவன்
தொல்லை     பொறுக்க     முடியாமல்,      அவனைத்
துன்புறுத்துகிறார்கள். அவனுடைய சகோதரன் மற்றும்
அவனுடைய பெற்றோர்களிடமிருந்து காப்பாற்றி அவனுக்குத்
தேவையான பணிவிடைகளைச் செய்து வருகிறாளஅந்த பெண்.
நோயாளி அறையிலிருந்த ஓர் ஆணியால் தன்னைக் குத்திக்
கொண்டு துன்புற்ற போது அவனை மனநல மருத்துவ
மனையில் சேர்ப்பதைத் தவிர்த்துத் தானாகவே அவனை
அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறாள். அவனுக்கு நோய்
முற்றிப் போய் விட்டதைப் பற்றி அவனுடைய பெற்றோர்களும்
சகோதரனும் ஈடுபாடின்றித் தூரத்தில் நின்று பேசும்போது,
அவளே அறைக்குள் சென்று அவனுக்குப் பரிவுடன் மருந்து
கொடுத்துப் பணிவிடை செய்ய முயல்கிறாள்.

    நோயாளியைச் சமாளிக்க முடியாத நிலையில் குடும்பத்தில்
அவனை அறையில் பூட்டி வைத்திருக்கும் பரிதாபத்தையும்,
வறுமையை விரட்டுவதற்காக அவனை மணந்தாலும் தன்னுடைய
பொறுப்பை அலட்சியப்படுத்தாமல் அவனிடம் அந்தப் பெண்
காட்டிய மனித நேயத்தையும் எடுத்துக் காட்டும் சிறுகதைதான்
'அறைக்குள் இருந்தவன்' (சிறகுகள் முறியும்).

6.2.5 சுற்றுச் சூழல் பாதுகாப்பு

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வு மக்களுக்கு இருக்க
வேண்டியதன் அவசியம் இன்று கட்டாயமானதாகிறது. நாம்
செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதுபற்றிய கவனம் இருத்தல்
அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு சிறுகதை
'கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்' (காட்டில் ஒரு மான்).
பிள்ளையார் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாள் பிள்ளையாரைத்
தண்ணீரில் அமிழ்த்தும் நாளும் முடிந்தது. மறுநாள்
கடற்கரையில் சென்று பார்க்கும் போது     கடலில்
அமிழ்த்தப்பட்டிருந்த எண்ணற்ற பிள்ளையார் சிலைகள்,
அலைகள் மோதி உடைந்தும், உடையாமலும், விரிந்தும்,
நசுங்கியும், குப்புறவும், மல்லாக்கவும், பக்கவாட்டிலும் கரையில்
விழுந்து கிடந்தன. தலைகளும், மகுடங்களும், கால்களும்,
கைகளும் தும்பிக்கை படிந்த தொப்பைகளும் சிதறிக் கிடந்தன.
பூசைப் பூக்கள்     திணிக்கப்பட்டு அமிழ்த்தப்பட்டிருந்த
பிளாஸ்டிக் பைகளும் காற்றில் பறந்தபடி கரையெல்லாம்
கிடந்தன . இறுதியாக வரும் இருபதடிக் காவிப் பிள்ளையார்
தான்     ஊர்வலத்தில் கடைசியாக வருபவர். இந்தப்
பிள்ளையாரைப் படகில் ஏற்றி, நடுக்கடல் வரை சென்று
அமிழ்த்திவிட்டு வருவார்கள். இந்த ஆண்டு ஆழ்கடல் வரை
சென்று அமிழ்த்தவில்லை போலும், இடுக்காக இருந்த ஒரு
கரையில் காவிப் பிள்ளையார் மல்லாக்கக் கிடந்தார். உடலின்
பல பகுதிகள் உடைந்து கம்பிகள் துருத்திக் கொண்டு நின்றன.
உடம்பெல்லாம் முள் தரித்துக் கொண்டது போல் கிடந்தது
சிலை.ஒரு கிறித்தவக் குடும்பத்தினர் இதைப் பார்த்தனர்.
தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மாதா     கோவில்
செல்வதற்காக நின்றிருந்த ஜோசப்பும் இன்னும் சில
ஆண்களும் விசைப்படகைக்     கிளப்பிச்     சிதைந்த
காவிப் பிள்ளையாரை அதில் வைத்துக் கடலுக்குள்
வெகுதூரம் சென்று அமிழ்த்திவிட்டு வந்தனர். "இப்படி
நனைந்து போய் விட்டாயே" என்று கேட்டவரிடம் ஜோசப்,
"அதுவும் யாரோடவோ சாமிதானே" என்கிறான். மனம்
செம்மையானால் மத வேறுபாட்டால் மனம் வேறுபடாது
என்பதை உணர்த்துகிறதல்லவா இக்கதை? அவனுடன் வந்த
பத்து வயதுச் சிறுமி, "அந்தச் சாமிக்குள் இருக்கிற கம்பி இல்ல
கம்பி? அது மீனோட வாயைக் கிழிச்சுடும். வாயெல்லாம்
ரத்தமா, வயிறெல்லாம் ரத்தமா வர மாதிரி மீனைக் கீறி
விட்டுடும். அப்புறம் அந்தப் பையைச் சாப்பிட்ட மீன்
செத்துவிடும். தண்ணில மிதக்கும்"    என்று     சொல்லி
வருந்துவதாக இக்கதை நிறைவு பெறுகிறது.

    சுற்றுப்புறச் சூழலின் தூய்மையைப் பொருட்படுத்தாத
நிலை மக்களிடையே இருப்பதைத் திக்கு சிறுகதையில்
அம்பை எப்படிக் கூறுகிறார் என்று பாருங்கள்:சில
கோயில்களின் பக்கத்திலேயே நிரம்பி வழிந்து தெருவெல்லாம்
குப்பை சிதறியபடி அழுகல் நாற்றமும், சிலசமயம் ஏதாவது
பிராணி ஒன்று செத்த வாடையும் வீசியபடி குப்பைத் தொட்டி
இருக்கும். கன்னத்தில் போட்டுக் கொண்ட உடனேயே
மூக்கைப் பிடித்துக் கொண்டு விடலாம். கோயிலை ஒப்புக்
கொண்ட அதே ஏற்புடன் குப்பைத் தொட்டியையும் ஒப்புக்
கொண்டனர்.     இத்தகைய மனோபாவத்துக்குக் கீதை
புராணங்களில் இருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டினர்
சிலர்.

    இவ்வாறு சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியை
மறைமுகமாக வற்புறுத்துகிறார் அம்பை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

அம்பையின் இயற்பெயர் என்ன?

(விடை)
2) அம்பையின் மூன்று சிறுதைத் தொகுதிகளைக்
குறிப்பிடுக.
(விடை)
3) அம்பையின் சிறுகதைகள்     வெளிவந்த
இதழ்களைக் குறிப்பிடுக.
(விடை)
4) அம்பை நிறுவிய பெண்களுக்கான அமைப்பின்
பெயர் யாது?
(விடை)
5) ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையின்
கருப்பொருள் யாது?
(விடை)