| 1.5 சமுதாயப் பிரச்சனை 
    கி.ரா. விடுதலைக்கு முற்பட்ட காலத்தில் இருந்தஇந்தியாவின் நிலையையும், விடுதலைப் போராட்டத்தின்போது
 இந்திய நாட்டின் நிலையையும் அப்பொழுது நிலவிய
 சமுதாயப் பிரச்சினைகளையும் பலர் மூலம் இந்நாவலில்
 வெளிப்படுத்தியுள்ளார்.
 1.5.1 விடுதலைப் போராட்டம் 
    கழுகுமலை ஐயர், “நாடு அந்நியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. மக்களின் பசியும், ஏழ்மையும் ஒழிய வேண்டும்
 என்றால் மிக விரைவில் நாடு சுதந்திரம் அடைந்து
 ஆகவேண்டும்” என்று சுட்டிக் காட்டுகிறார். இதனால் “கரிசல்
 காட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கோபல்லபுரத்து
 மக்களின்     மனசில்     இந்திய    நாட்டின் சுதந்திரப்
 போராட்டக் கனல் ஒன்று தெறித்து வந்து விழுந்து மெல்ல
 கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது” என்று கூறுகிறார்
 ஆசிரியர்.
 • காந்தியக் கொள்கைகள்          
     விடுதலைப் போராட்ட வீரர்கள் மூலம் விழிப்புணர்வுபெற்ற மக்கள், காந்தியக் கொள்கைகளையும் வாழ்க்கையில்
 கடைப்பிடித்தனர். அந்தக் காலத்தில் வீசிய காந்தியப்
 பெரும்புயல் அவர்களையும் வெகுவாகப் பாதித்தது. சில
 உணர்ச்சி மிகுந்த வீரர்கள் கிராம மக்களிடமுள்ள மூட
 நம்பிக்கைகள் பற்றியும், அறியாமை, சுத்தமின்மை ஆகியவை
 பற்றியும் பேசினர். முதலில் மது ஒழிப்பை மேற்கொண்டனர்.
 பின்னர் சாதி ஒழிப்பில் ஈடுபட்டனர். இவ்வாறு காந்தியக்
 கொள்கைகள் பரவின. கொடிகாத்த குமரன், பகத்சிங் போன்ற
 வீரர்களின் வரலாற்றை அறிந்த இளைஞர்கள் நெஞ்சம்
 குமுறினர். பெரியவர்களின் திடமனத்தையும் இச்செய்திகள்
 பாதித்தன.
 
    “வெள்ளைக்காரனிடமிருந்து நாம் விடுதலை பெறுவதற்குமுன் பார்ப்பனியத்திலிருந்தும், மக்கள் விடுதலை பெறணும். இது
 ரொம்பவும்     முக்கியம். நாடு விடுதலையடைந்தவுடன்
 இப்படியான சீரழிவு சக்திகளும் அழிந்தே தீரும்” என்று
 அன்னமய்யா எடுத்துக் கூறுகிறார். நாடு விடுதலை அடைந்த
 பிறகு கிராமத்தில் மூன்று அரசியல் பிரிவுகள் ஏற்பட்டன.
 அவை காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி
 ஆகும். இந்த மூன்று கட்சிகேளாடு ஆங்கிலேயர்களுக்குத்
 துதிபாடும் உதிரிகளின் கட்சியும் சேர்ந்தது. இவ்வாறு
 விடுதலைக்கு முற்பட்ட, விடுதலைக்குப் பிற்பட்ட மக்களின்
 நிலையைச் சித்திரித்துள்ளார்.
 |