| 6.3 கதைமாந்தர் 
    இக்கதையில் இடம் பெறும் கதை மாந்தரைத் தலைமைமாந்தர், துணைமாந்தர் என்று இருவகைகளாகப் பிரித்துப்
 பார்ப்போம்.
 6.3.1 தலைமை மாந்தர் 
    என் இனிய இயந்திரா என்ற நாவலின் தலைமை மாந்தர்நிலா, ஜீனோ. ஆகியோர்.
 • நிலா 
    சிபியின் மனைவி நிலா. புத்தாண்டை மகிழ்ச்சியாகக்கொண்டாடும் பொழுது ஜீனோ கி.பி.2022 இனிப்பான
 செய்தியைக் கொண்டு வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளக்
 கிடைத்த அரசாங்க அனுமதியைக் கண்ட நிலா இன்ப அதிர்ச்சி
 அடைகிறாள். நிலாவுக்கு இப்போது இதயத்துடிப்பு அதிகரித்தது.
 பவுன் கலரில் இதயம் தனியாகத் தடக் தடக்கென்று சத்தமாக
 இரைச்சலிட்டது. பிழம்பாக அதற்குள் ஒரு சந்தோஷம் ஒளிந்து
 கொண்டு பிதுங்கினாற் போல வெளிக் காட்டியது. வயிற்றுக்குள்
 தேன் கலந்த ஒரு நேர்த்தி தெரிந்தது. கான்கீரிட்
 கட்டடங்களின் உச்சியில் வெள்ளி விளிம்புகளில் சிலிக்கன்
 தேவதைகள் தெரிந்தார்கள். புதிய யுகம், புதிய சகாப்தம், புதிய
 குழந்தை, புதிய பிரஜை குழந்தை மணி! மணியோ மணி என்
 பொன்மணி.. தங்கமணி.. ரேடிய மணி. பிறக்கப்போகும்
 குழந்தைக்கு மணி என்று அரசாங்கமே பெயரும்
 நிர்ணயிக்கிறது. ஆனால் நிலாவிற்கு இரண்டு எழுத்து பெயர்
 பிடிக்கவில்லை. தன் குழந்தைக்கு சோமசுந்தரேசுவர
 சுப்பிரமணி என்று பெரிய பெயராக வைக்க விரும்புகிறாள்.
 கம்ப்யூட்டர் கேந்திரத்திற்குச் சென்ற தன் கணவன் சிபி
 திரும்பி வராததால் பல வழிகளில் அவனைத்தேடி
 அலைகிறாள். அந்த நிலையில் மருத்துவமனை அவள்
 கணவனுக்குப் பதிலாக ஒரு பொம்மையை அனுப்பி வைக்கிறது.
 அதை ரவி மூலம் தெரிந்துகொண்ட நிலா அறிவியல்
 ஆட்சியின்     தலைவரான     ஜீவாவைச்     சந்திக்கிறாள்.
 பிறந்ததிலிருந்து ஒருநாள் கூடச் சிரிக்காதவர் போல
 மங்கோலிய முகத்துடன் காணப்பட்ட ஜீவா ‘வா குழந்தாய்’
 என்று நிலாவை அருகில் அழைத்தார். ஜீவா கருநீலத்தில்
 கால்சராயும் மேலங்கியும் அணிந்திருந்தார். நிலாவின்
 பிரச்சனையைப் பற்றி விசாரித்துவிட்டு உன் கணவன்
 நீக்கப்பட்டிருக்கிறார். உன்னுடைய அஞ்சல் சபைக்கு
 விண்ணப்பித்து அதிகாரியிடம் கேட்டுக்கொள். சிபிக்குப்
 பதிலாக ரவியை எடுத்துக்கொள் என்று கூறுகிறார். இந்தத்
 தேசத்தில் ஆடையைப் போல ஆடவனும் மாற்றிக்கொள்ளும்
 பொருளா? என்று ரவி, நிலாவிடம் வினா எழுப்புகிறான்.
 ஜீனோவின் உதவியால் ஜீவா மனிதன் அல்ல ஒரு பிம்பம், ஒரு
 ஹோலோ பிம்பம்! முப்பரிமாண ஒளி வடிவம் என்பதை நிலா
 அறிந்து     கொள்கிறாள்.     அச்செய்தியை     மக்களுக்கு
 உணர்த்துகிறாள். ‘எல்லாத் தலைவர்களுமே ஒரு நிலையில் குடி
 மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது தான் சரித்திரம். எந்த
 அளவுக்கு எத்தனை நாட்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதில்தான்
 மாற்றம். மனித சரித்திரத்தில் முழுவதும் படிப்படியாக
 ஏமாற்றங்கள் தான்’ என்று இருபதாம் நூற்றாண்டு தத்துவஞானி
 ரஸ்ஸல் சொல்லியிருக்கிறார். அவருடைய ப்ரின்ஸிப்பியா
 மாத்தமாட்டிக்கா வைப் படிக்க ஆசை என்று ஜீனோ
 நிலாவிடம் கூறுகிறது. சிந்தனை இஷ்டங்கள், இண்டலெக்ட்
 அறிவு ஆகிய இவற்றைக் கொண்டிருந்த ஜீனோ, நிலாவிற்கு
 உற்ற தோழியாகத் தக்க சமயத்தில் உதவி செய்கிறது. ரவி,
 மனோ     இவர்களின் முயற்சியால் நிலா நாட்டின்
 தலைவியாகிறாள்.
 • ஜீனோ          
    நிலாவிற்குப் பக்கத்துணையாக இருப்பது ஜீனோ. ஜீனோஎன்பது கிரேக்கத் தத்துவ ஞானியின் பெயர். ஜீனோ ஓர்
 உயிரில்லாத இயந்திரமாக இருந்தாலும், பொய் நாயாக
 இருந்தாலும் அதன் தோற்றம் ஒருவகையில் நிலாவிற்கு மன
 உறுதியளித்தது. மனித சிந்தனையைக் கற்றுக் கொண்டதும்
 மனிதத் தந்திரங்களும் தானாக வருகிறது. இந்த நாவலை
 இயக்கும் சக்தி, ஜீனோ தான். ரோபாட் நாய் என்றாலும் கூட
 கூரிய அறிவு கொண்ட நாய். நிலாவின் உயிரோடு உயிராய்
 ஒட்டிக் கொண்டது. நிலா தவறு செய்யும் போதெல்லாம்
 அவளை எச்சரித்துக் காப்பாற்றுவது ஜீனோதான். தன் கணவன்
 சிபி காணாமல் போனான் என்று நிலா அரசாங்கத்திற்குப் புகார்
 செய்ய, அவர்கள் ஒரு ரோபாட்டைக் கொண்டு வந்து அவள்
 வீட்டில் இறக்கிவிட்டார்கள். அது மனிதல்ல; இயந்திர
 பொம்மை; டோட்டல் ப்ராஸ்தொரிஸ் (T.P) என்று ஜீனோ தான்
 நிலாவுக்குக்     கண்டுபிடித்துச்     சொல்லியது. இவ்வாறு
 அரசாங்கத்தின்     ஒவ்வொரு     சதியையும்     ஜீனோவே
 வெளிப்படுத்திக் காட்டுகிறது.
 
    ஜீவா ஒரு பிம்பம், வெட்ட முடியாது, தொட முடியாது !என்று ஜீனோ கண்டு பிடிக்கிறது. ஜீனோ இயந்திரமாக
 இருந்தாலும் நிலாவுடன் ஒட்டி வாழ்ந்து விட்டதால் நிலாவுக்கும்,
 ஜீனோவுக்கும் இனம்புரியாத உறவு ஒன்று வளர்ந்து விட்டது.
 அதனால் தான் ஜீனோவை மரண பயம் கடைசியில் பிடித்துக்
 கொள்கிறது. “உன் சூடான கரத்தால் என்னைத் தொட்டுத்
 தடவிக் கொடு நிலா, எனக்குப் பயம் என்பதன் முழு
 அர்த்தங்களும் விளங்கிவிட்டது. நான் இயந்திரமாகவே
 இருக்கலாம். எனக்குத் தற்செயலாகச் சிந்திக்கும் சக்தியைக்
 கற்றுக்     கொடுத்து,     பயம்,     பாசம்     போன்ற
 உணர்ச்சிகளையெல்லாம் புரிய வைத்தது தப்பு... பொய்
 சொல்லக் கற்றுக் கொண்டு தந்திரங்கள் எல்லாம் புதுசாக
 அமைத்துக் கொண்டு விட்டேன்” என்று ஜீனோ பரிதாபமாகச்
 சொல்கிறது. ஜீனோ ஒரு ரோபாட். அஜாக்ஸ் கம்பெனியில
 வாங்கினது. ஜீவாவின் சுபீட்சராஜ்யத்தில் எதுவுமே சாத்தியம்.
 என்ன விந்தை நாயைப் பேச வைத்து விட்டார்கள்! அவ்வளவு
 முன்னேற்றம் என்று மக்கள் வியக்கின்றனர். நிலாவைப்
 போலவே ரோபாட்டாக இருந்தாலும் ஜீனோவும் தலைமை
 மாந்தராகச் செயல்புரிகிறது.
 6.3.2 துணை மாந்தர் 
    சிபி, ரவி, மனோ போன்றவர்களெல்லாம் துணைமாந்தராகஇந்நாவலில் இடம்பெறுகின்றனர்.
 • சிபி 
    சிபி நிலாவின் கணவன். இவன் கம்ப்யூட்டர் கேந்திரத்தில்பணியாற்றுபவன். அவர்கள் வீட்டின் முன்னறையில் குடியிருக்க
 ரவி என்பவனுக்கு அரசாங்க அனுமதி கிடைக்கிறது. ரவியின்
 வரவு நிலாவின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
 ரவி தங்கள் வீட்டில் குடியிருக்க வந்திருப்பதைப் பற்றி
 அரசாங்கத்திடம் கேட்கச் செல்லும் சிபி எதிர்பாராத விதமாக
 அரசாங்க இரகசியங்களடங்கிய மூன்று ஆணைகளைத் தெரிந்து
 கொள்ள நேரிடுகிறது. அதனால் காவல் படையினர், சிபியைப்
 பெங்களுர் கொண்டு சென்று கதிரியக்கச் சிறையில்
 அடைக்கின்றனர். நிலாவின் தொடர் முயற்சியினால் சிபி
 மீட்கப்படுகிறான்.
 • ரவி 
    மற்றொரு துணைப் பாத்திரமான ரவி, தலைமைப்பாத்திரமான நிலாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படக்
 காரணமாக உள்ளான். ரவி மக்களாட்சி திரும்ப வரும்
 கழகமான ம.தி.க.வின் உறுப்பினன். தீவிரமாக ஜீவாவின்
 தலைமையில் நடைபெறும் அறிவியல் ஆட்சியை எதிர்ப்பவன்.
 
    “பொய் வியாபாரியே! வயதானவர்களைக் கொல்ல உனக்குஎன்ன உரிமை? தப்பிப் போன கருக்களைக் கலைக்க என்ன
 உரிமை? அருமையான நூல்களைத் தடைசெய்ய என்ன
 உரிமை? பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்க
 உனக்கு என்ன உரிமை? பதில் சொல்” என்று ம.தி.க கட்சி
 உறுப்பினர்கள், ஜீவாவின் பிறந்த நாளான டிசம்பர் மூன்றாம்
 தேதிக்கு     முன்     ஜீவாவுக்குப் பகிரங்கக் கடிதம்
 அனுப்புகின்றனர்.
 
    ஜீவாவைக்     கொல்ல நடந்த சதியில் ரவியும்செயலாற்றியதால் அதனைக் கண்டறிந்த அரசாங்கம் அவனைக்
 கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, ஒரு அந்தமான் விளையாட்டு
 விடுமுறையும்,     ரொக்கம் இரண்டாயிரமும் தருவதாக
 அறிவித்தது. இருந்தாலும் ரவி காவலர்களிடம் பிடிபடாமல்
 சுரங்கப்பாதை வழியாக நடமாடுகிறான். ரவி. மனோ, நிலாவுடன்
 இணைந்து ஜீவாவின் அராஜகத்தை ஒழித்துக்கட்டுகிறான். ரவி
 பாத்திரம்     இந்நாவலுக்கு ஒரு தனித் தன்மையாக
 அமைந்துள்ளது. இந்நாவலில் தலைமை மாந்தரைப் போலவே
 துணை மாந்தரும் சிந்தனைத் தெளிவுடையவர்களாக உள்ளனர்.
 
 
 | 
 
 | 
தன் மதிப்பீடு : வினாக்கள் - I  |  
 | 1. | 
சுஜாதாவின் இயற்பெயர் என்ன? | விடை |  
 | 2. | 
சுஜாதாவின் முதல் நாவலின் பெயர் என்ன? | விடை |  
 | 3. | 
என் இனிய இயந்திரா எத்தகைய புதினம்? | விடை |  
 | 4. | 
ஜீவாவைப் பற்றி ஜீனோவின் கருத்து யாது? | விடை |  
 | 5. | 
நிலா தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குஎன்ன பெயரிட விரும்பிளாள்?
 | விடை |  |  |