6.5 நாவலில் கையாளும் உத்திகள்

    நாவலில் கையாளும் உத்திகளால் நாவல் தனிச் சிறப்பைப்
பெறுகிறது. உத்தி மூலம் ஆசிரியரின் மொழித்திறனும்
எழுத்தாற்றலும்     வெளிப்படுவதோடு     அல்லாமல்
கலைப்படைப்பும் சிறப்படைகிறது. இந்நாவலில் வர்ணனை,
உவமை, ஆகிய உத்திகளுக்கு உரிய ஒரு சில உதாரணங்களை
இங்குக் காணலாம்.

6.5.1 நாவலின் தலைப்பு

    நாவலின் தலைப்பான என் இனிய இயந்திரா என்பது
ரோபாட் நாய் ஜீனோவைக் குறிக்கிறது. இந்த நாவலை
இயக்கும் சக்தி ஜீனோ தான். அது இயந்திர பொம்மையாக
இருந்தாலும் மனிதர்களைப் போல எச்சரிக்கை உணர்வோடு
தானும் செயல்பட்டு, நிலாவையும் காப்பாற்றுகிறது.

    ‘ஏன் தான் பிறந்தேன் எனக்கே புரியாது
    நான் யார்? இயந்திரமா நாயா தெரியாது’

என்று பாடிய ஜீனோவிடம் ‘நீ இனிய இயந்திரம் உயிருள்ள
இயந்திரம்’ என்கிறாள் நிலா. இனிய இயந்திரமாக ஜீனோவைப்
படைத்துள்ள ஆசிரியர்,

    “எல்லா விதிகளுமே மனிதன் அமைத்தது தானே?
அதனால் அவற்றை மீற முடியும். ஓட்டை காண முடியும்.
என்ன, கொஞ்சம் நிறையவே பொறுமை வேண்டும். எல்லா
பிரச்சனைகளையும் தர்க்க ரீதியாக அலசுவதற்கு ஜீனோ என்று
ஒரு மெஷின், இனிய இயந்திர மூளை இருக்கிறது! “ஜீனோ
இங்கே வா!”

என்று நிலா பேசுவதாக விளக்கம் தருகிறார். ஜீனோ என்ற
கற்பனைப் பாத்திரத்தின் பண்பு நலனை விளக்குவதாக
இந்நாவல் அமைந்துள்ளது.

6.5.2 வர்ணனை

    எளிய     முறையில், நடைமுறையில் காணப்படும்
பொருள்களையும் அவற்றின் தன்மைகளையும் கொண்டு தன்
ஆற்றலால் சிறப்பாக வர்ணிக்கிறார் சுஜாதா.

எடுத்துக்காட்டு:

    “காணாமல் போன சிபியின் எண் கிடைத்ததும் நிலா, தன்
நரம்புகளுக்குள் சின்னச் சின்ன மின்சாரத் துகள்கள்
செலுத்துவது போல உணர்ந்தாள். திருட்டுத்தனமாக அரசாங்க
ரகசியத்தின் வாசல் திறக்கப்பட்டு விட்டது அவளுக்கு. கொஞ்ச
நேரம் திரை ‘காத்திரு’ என்று சொன்னதுடன், ஒரு பச்சை
சதுரம் கண் சிமிட்டிக் கொண்டிருக்க, திடீரென்று உயிர் பெற்று,
சிபி பெங்களுர் சிறைச்சாலையில் 124.ஆம் எண் அறையில்
இருக்கிறார்.”

மற்றொரு வருணனை:

    பெங்களுர் மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் வந்து
இறங்கியபோது மணி காலை 6.36. லேசாகப் பனிப்படலம்
மூடியிருக்க, அதனூடே தானாக அணைய மறந்த சோடியம்
வெளிச்சம். ஓட்டல் ஜீவாவின் ஐம்பது மாடிக் கட்டடம்
கத்திக்குத்து போல் நின்றது. வாசலில் இருந்த டெர்மினலில்
பிளாஸ்மா டிஸ்ப்ளேயில் “நிலா நல்வரவு” என்று சொல்லி
“ரூம் நம்பர் 1223” என்றது.”

    பன்னிரண்டாவது மாடி 1223வது அறையிலிருந்து
பார்த்தபோது பெங்களுர் பிளாஸ்டிக் நகரம் போலத் தெரிந்தது.
அஸ்ட்ரோடோம் ஒரு ராட்சசப் பறவையின் கூடு போலத்
தெரிய இழுத்துக் கட்டின கான்கிரீட் வார்களின் அருகில்
அபரிமிதமாகப் புல் சரிந்தது. கும்பல்     கும்பலாக
உபநகரங்கள். ‘சண்டைக்குப் பிறகு பெங்களுரை அழகாகவே
புதுப்பித்திருக்கிறார்கள் என்றாள் நிலா.’

இவ்வாறு பல வர்ணனைகள் அமைந்துள்ளன.

6.5.3 உவமை

    காலையில் சூரியன் வெளுக்கும் போது வெள்ளை மயில்
போல விசிறியடித்த நீர்த்திரையில் கடைச் சன்னல்கள்
அலம்பப்பட்டு ஆளரவமே இல்லாமல் எல்லாமே சாது
இயந்திரங்கள் தத்தம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தன
என்ற சொற்றொடரில் விசிறியடிக்கப்பட்ட நீர்த்திரைகள்
வெள்ளை மயிலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

    இந்த விநோத தேசத்தில் ஆடை மாற்றிக் கொள்வது
போல ஆடவனை மாற்றிக் கொள்ளுகின்றனர். ஜீவாவின்
ஆட்சியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. சிபியைத் தேடும் முயற்சியின் போது
மாட்டிக் கொண்டால் “இயந்திரக் கோழி பிடிப்பது போல
அமுக்கி விடுவார்கள்” என்று நிலா அஞ்சுகிறாள். நிலாவைச்
சந்தித்த சிபி “நிதி கிடைத்தாற் போல” மகிழ்ச்சியடைகிறான்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து மனிதர் தொப்பி
அணிந்து ஷேக்ஸ்பியர் பாத்திரம் போல இருந்தார். வயதான
அந்த மனிதரின் நெற்றியில் உழுதாற் போல கோடுகள்
இருந்தன. இவை போன்று பல உவமைகள் இடம் பெற்றுள்ளன.