|
மலையாள மொழியின் நாடகத் தொடக்கமும் இசைப்பாட்டு
நாடகத்திலிருந்தே தொடங்குகிறது. கதகளி, கூடியாட்டம்,
ஓட்டந்துள்ளல் ஆகிய நாடக வடிவங்களில் புராணக் கதைகள்
இசைப்பாட்டுகளாகப் பாடி நடிக்கப் பட்டன.
கேரளத்தில் தோன்றிய முதல் மொழிபெயர்ப்பு நாடகம்
அபிஞ்ஞான சாகுந்தலம் என்பதாகும். இந்த வடமொழி
நாடகம் 1882ஆம் ஆண்டு மலையாளத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப் பட்டது.
போர்ச்சுக்கீசியர் வருகைக்குப் பின்னர், மலையாள
நாடகத்தில் புதிய போக்கு ஏற்பட்டது. இது, பிற தென்னிந்திய
மொழி நாடகங்களில் காணப் பெறாத புதிய போக்காகும்.
போர்ச்சுக்கீசியர் நடித்த நாடக வகைகளில் ஒன்று சவுட்டு
நாடகம் ஆகும். இந்த நாடக வகையின் தாக்கம், மலையாள
மொழி நாடகங்களில் காணப்பட்டது.
கன்னடம், ஆந்திர மொழிகளின் நாடகத் தொடக்கம்
போல் கேரளத்திலும் வடமொழி மொழிபெயர்ப்பு
நாடகங்கள்தான் முதலில் அரங்கேறின. ஜானகி பரிணயம்,
மாளவிகாக்னி மித்ரம், உத்தரராம சரிதம், சூடாமணி
ஆகியன வடமொழியிலிருந்து மலையாளத்துக்கு
மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கில நாடகங்களும் சில மொழி
பெயர்க்கப்பட்டன.
கேரள நாடக உலகைச் சரியான முறையில்
புதுமைப்படுத்தியவர் சி.வி. இராமன் பிள்ளை என்பவராவார்.
தொடக்கத்தில் இவர் ஒரு புதின ஆசிரியராக இருந்தார். இவர்
எழுதிய மார்த்தாண்ட வர்மா, தர்மராஜா, ராஜராஜ பகதூர்
ஆகிய புதினங்கள் மேடை நாடகமாக மாறிய போது மலையாள
நாடகம் சிறந்த தரத்தைப் பெற்றது. இவருக்குப் பின்னர் பலர்,
பல வடிவங்களில் நாடகங்களை எழுதி அரங்கேற்றினர்.
|