2.1 நாடகமும் கூத்தும்


நாடகம், கூத்து ஆகிய இரு சொற்களும்
ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களாகும். ஆனால்,
இரண்டும் ஒன்றல்ல. நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே
சிறிதளவு வேறுபாடு உண்டு. சதிராட்டம் அல்லது நாட்டியம்,
நாடகம் ஆகிய இரண்டும் இணைந்தது கூத்து.
சதிராட்டத்தில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டது நாடகம்.
ஒரு தனிப் பாட்டுக்கோ, ஒரு சிறு நிகழ்ச்சிக்கோ அபிநயம்
பிடிப்பது நாட்டியம்; ஒரு கதையை மையப்படுத்தி
வேடமிட்டு ஆடுவது நாடகம். இந்த இரண்டையும் கூத்து
என்னும் பொதுப் பெயரால் பண்டைத் தமிழர் வழங்கி
வந்தனர். கூத்து என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில்
பல இடங்களில் காணப்படுகின்றன.

2.1.1 பலவகைக் கூத்துகள்

மரப் பொம்மைகளால் நிகழ்த்துவது மரப்பாவைக்
கூத்து; மண், துணி ஆகியவற்றின் துணையுடன் மனித
உருவம் செய்து, அவ்வுருவத்தின் கை, கால்களைக்
கயிற்றினால் ஆட்டி நிகழ்த்தியது பொம்மலாட்டம். அட்டை,
காகிதம் ஆகியவற்றினால் உருவம் செய்து, வெள்ளைத்
திரைகளுக்குப் பின்னால்,     விளக்கின் துணையுடன்
நிகழ்த்திக் காட்டியது நிழற்பாவைக் கூத்து. இவ்வாறு
நாடகத்துக்கு முன்னோடியாக இக்கூத்துகள் இருந்தன.
 
  • நாடகம்

  •  
        கூத்துகளின் வளர்ச்சி நிலையில் நாடகம் உருவானது;
    தனக்கென ஓர் அமைப்பையும் உருவத்தையும் பெற்றுக்
    கொண்டது. நாட்டின் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றைக்
    காட்டும் அளவிற்கு நாடகம் உயர் நிலையில் வளர்ந்தது.
    நாடகத்தின் சிறப்பை அவ்வை தி.க.சண்முகம் பின்வருமாறு
    கூறுகிறார்.

        ‘நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரிகத்துக்குக்
    கண்ணாடி; பாமர மக்களின் பல்கலைக் கழகம்;
    உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உள்ளத்தில் புதைந்து
    கிடக்கும் அன்பையும், அறிவையும், தூய்மையையும்
    வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான
    கலை’ என்று நாடகக் கலையைப் பற்றிக் கூறுகிறார்.