சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராகவே தம்
நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இரணியன்,
இராவணன்,
எமதருமன், சனீஸ்வரன், கடோற்கஜன் போன்ற
வேடங்களையே ஏற்று நடித்து வந்தார். சிறிது
காலத்துக்குப் பின்னர், நாயுடு நாடகக் குழுவில்
நாடக
ஆசிரியராகப் பணியாற்றினார். சிறிது காலத்துக்குப் பிறகு
அவரே நாடகம் எழுதி, இயக்கி, அரங்கேற்றி
நாடகத்துக்குப்
பெருமை சேர்த்தார்.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராக இருந்த
போது நடந்த ஒரு நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக அவர்
வாழ்க்கையில் அமைந்தது. இவர் சனீஸ்வரன் நாடகத்தில்
சனிபகவான் வேடம் தாங்கி நடித்தார். விடியும் வரை
நாடகத்தில் நடித்துவிட்டு விடியற்காலையில் வேடத்தைக்
கலைப்பதற்காக ஏரிக்குச் சென்றார். அங்கே சலவை
செய்து கொண்டு இருந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்
ஒருத்தி சனீஸ்வரன் வேடத்தில் இருந்த சுவாமிகளைக்
கண்டாள்; அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திலேயே
இறந்து விட்டாள். இந்த நிகழ்ச்சி சுவாமிகளின் உள்ளத்தை
வெகுவாகப் பாதித்து விட்டது. இதன் பின்னர் சுவாமிகள்
வேடம் தரிப்பதை நிறுத்தி விட்டார்.
|