1.1 கவிதை


     கவிதை என்பது உள்ளத்து உணர்ச்சிகளைச் செறிவாகவும்
சுருக்கமாகவும் சொல்வது.

  • இலக்கணம்
     கவிதை என்பது உணர்ச்சியைச் சிந்தனையுடன் கலந்து
வெளிப்படுத்தும் ஓர் ஊடகம். சமுதாயத்தில் நிகழும்
நிகழ்ச்சிகளின் தீவிர உணர்வின் வெளிப்பாடுதான் கவிதை.     
  • கவிமணி தேசிகவிநாயகம்,
“உள்ளத்துள்ளது கவிதை; இன்ப
உணர்வெடுப்பது கவிதை
தெள்ளத்தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை”

எனக் கவிதைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.


    கவிஞனின் கண்ணில் படும் காட்சிகள் மனத்தில்
பதிகின்றன.காட்சிகளை,அனுபவங்களைப் பொருத்திப்பார்க்கிறான்.
காட்சியும் அனுபவமும் இணைந்து கவிதையாக வெளிப்படுகிறது.
கவிதை என்பது தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்களால் அழகுறக்
கட்டப்படுவது. கவிதை, எந்தப் பொருளைப் பற்றியும் பேசலாம்.

மேனாட்டாரின் வருகையாலும், அச்சு இயந்திரங்களின்
வளர்ச்சியினாலும் தமிழில் உரைநடை இலக்கியம் வளர்ந்தது.
படைப்பாளர்கள் உரைநடையில் எழுதத்தொடங்கினர். எனினும்
நீண்ட உரைநடையில் கருத்துகளை வெளிப்படுத்துவதைக்
காட்டிலும் கவிதையில் வெளிப்படுத்துவதில்     ஆர்வம்
அதிகரித்தது.

  • கவிதையின் வகைகள்
    கவிதை மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டு
வகைப்படும்.