1.2 மரபுக்கவிதைகள்

     மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு
அமைந்தது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள்.
அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற
இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய
இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு என்பது செய்யுள்
எனவும் பொருள்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா எனச் செய்யுள் நான்கு வகைப்படும்.


1.2.1 அமைப்பும் போக்கும்

நமது தமிழ் இலக்கியத்தில் உள்ள சங்க இலக்கியப்
பாடல்கள், பக்தி     இலக்கியப்     பாடல்கள் முதலிய
அனைத்தும் மரபுக்கவிதையைச் சார்ந்தவை.

  • வெண்பாவின் அமைப்பு
மரபுக்கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டான வெண்பா
யாப்பைப் பார்ப்போம்.
  • வெண்பாவின் ஈற்றடி முச்சீர்களாகவும், ஏனைய அடிகள்
    நான்கு சீர்களாகவும் இருக்கும்.
  • ஈற்றடியி்ன் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற
    வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று முடியும்.
  • செப்பலோசை பெற்று வரும்.

எடுத்துக்காட்டு

நளன் தமயந்தி ஆகியோரின் கதையைக் கூறும் நளவெண்பா
வெண்பாவால் எழுதப்பட்டது. காட்டிலே காதலியைக் காரிருளில்
கைவிட்டு நளன் சென்று விடுகிறான்; தன்னந்தனியாகத் தமயந்தி
துயர்ப்படுகின்றாள். இத்துயரைக் காணப்பொறாது, கோழிகள்
இறகுகளால் தங்கள் வயிற்றிலடித்துக் கொண்டு சூரியனை
விரைவில் தேரேறி வருகவென்று அழைப்பன போலக் கூவின
என்று ஆசிரியர் புகழேந்தி கற்பனை செய்கிறார்.


தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென்ற ழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம். (293)


(தையல் = பெண்; தரியாது = பொறுக்காமல்; வெய்யோன்
= கதிரவன்; வாவுபரி = தாவும் குதிரை)

பிற பாவகைகளுக்கு விளக்கம் பிற பாடங்களில் காணலாம்.