1.5 புதுக்கவிதையும் பாடுபொருளும்

பாரதி, பாரதிதாசனை, மணிக்கொடி எழுத்தாளர்கள் முக்கியப்
படுத்தி எழுதினர். ‘எழுத்து’ இதழில் மேலைநாட்டுத்தாக்கம்,
அதாவது காலனி ஆதிக்கம், நிறவெறி எதிர்ப்பு, இந்திய தேசிய
விடுதலை உள்ளிட்ட எதிர்ப்பு உணர்வுகள் வெளியாயின. ஆனால்
வானம்பாடி கவிஞர்கள், உண்மைகளுக்குப் புறம்பாக மக்கள்
மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமைகளை உடைப்பது,மற்றும்,
சமூகக் கொடுமைகளை எதிர்ப்பது, உழைக்கும் மக்களை மதிப்பது
ஆகிய உணர்வுகள் நிறைந்த கவிதைகளைப் பாடுபொருளாகக்
கொண்டனர். அவற்றுள் சிலவற்றிற்குச் சில கவிதைகளை
உதாரணமாகப் பார்க்கலாம்.

  • புதுக்கவிதையின் போக்கு
    கவிதைகளை வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் பெரிதும் பயன்பட்டன. ஏனென்றால், பத்திரிகை நடத்திய ஆசிரியர்கள் மொழி, இன, நாட்டுப்பற்றுடையவர்களாக விளங்கினர். இந்திய தேசிய விடுதலை இயக்கம் குறித்து திராவிட இயக்கத்தினர் தீவிரமாக விமரிசித்தனர். பாரதி காலத்திய சுதேசமித்திரன், போன்றவை நாளிதழ்கள். பிறகு விகடன், கல்கி போன்ற வார இதழ்கள் தோன்றின. வணிகப்போக்கு முதன்மைப்படுத்தப்பட்டது. அதாவது சாதிஒழிப்பு, தமிழினச்சார்பு பின்னுக்குத் தள்ளப்பட்டன. இதன்பிறகுதான் மணிக்கொடி காலக் கவிதைகள் வளரத்தொடங்கின.

1.5.1 மணிக்கொடிக் காலக் கவிதைகள்

     பாரதியின் வசனகவிதைத் தாக்கத்தால் புதுமைப்பித்தன்,
ந. பிச்சமூர்த்தி ஆகியோர் வசன கவிதை எழுதினர். பழமை
(மரபு), புதுமை ஆகிய இரண்டையும் இணைத்துக் கவிதை
எழுதியவர் புதுமைப்பித்தன். எதிர்மரபு (ஆதிக்கச் சமூகத்திற்கு
எதிரான போக்கு) கவிதையாகியிருக்கிறது. இந்திய தேசிய
விடுதலைபற்றிய கருத்தாக்கத்தை (concept) இலக்கியத்தின்
மூலம், இலக்கிய விடுதலை மூலம் எடுத்துச் சொல்லிய
காலம் மணிக்கொடி காலம்.
  • மணிக்கொடிக் காலக் கவிஞர்கள்
    ந. பிச்சமூர்த்தி,          சி.சு செல்லப்பா,      கு.ப.ரா,
போன்றோர்      குறிப்பிடத்தக்கவர்கள்.     உதாரணமாக,
ந . பிச்சமூர்த்தியின்.

     சாரலின் கடுஞ்சினத்தில்
     பூமோகம் ஆடவில்லை
என்ற கவிதையின் கட்டமைப்பை
விளக்கலாம்.

இக்கவிதையில்

  • சாரல் என்பது மழைச்சாரலைக் குறிக்கின்றது. இது
    மென்மையானது.
  • சினம் கோபம். கடுஞ்சினம் என்பது அதிக கோபம்.
  • பூமோகம் ஆடவில்லை என்று கூறும்போது மழைச்
    சாரலைப்போல பெண் மென்மையானவள். ஆனால்
    அவள் பூவைப்போல இல்லை, பூமோகம் ஆடவில்லை
    என்பதைப் படிக்கும்போது இளம் விதவையை அது
    நினைவு படுத்துகின்றது.
  • இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து
    அறிவுத்தெளிவுடன் ஒரு தேடலை முன் வைப்பவர்
    ந. பிச்சமூர்த்தி.
1.5.2 “எழுத்து”க்காலம்

     மணிக்கொடிக் கால இலக்கிய வளர்ச்சியைத் தொடர்ந்து,
ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி எழுபதுகளின் தொடக்கத்தில்
நின்றுபோன ‘எழுத்து’ நடுத்தர மக்களின் வாழ்வின் பல்வேறு
நிலைகளை, மரபுக்கும் புதுமைக்கும் இடையே ஏற்படும்
குழப்பங்களை மையப்படுத்தி வெளிவந்தது.

     1) புதுக்குரல்கள் என்ற தொகுப்பில் 1959முதல் 1962 வரை
வந்த கவிதைகள் 63 தொகுக்கப்பட்டன.இந்தத் தொகுப்பில் இடம்
பெற்ற கவிஞர்களின் எண்ணிக்கை 24.

     இக்காலக் கவிதைகளைப் பற்றி, தி.க. சிவசங்கரன் என்னும்
திறனாய்வாளர்,

“வெறுமை, விரக்தி, முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள்
பல புதுக்கவிதைகளின் அடிநாதமாக ஒலிக்கின்றன” என்று
கூறுகின்றார்.

     “எழுத்து” காலத்தில் புதுக்கவிதை வரலாற்றில் சி.மணிக்கு
ஓர் இடம் உண்டு.



நிலவைப் பார்த்து,

     நல்ல பெண்ணடி நீ,
     முகத்திரை இழுத்துவிட
     இரண்டு வாரம்
     அதை எடுத்துவிட
     இரண்டு வாரம்
     இதை விட்டால்வேறு
     வேலையே இல்லையா உனக்கு?


என்று     கேட்கிறார்.      பரிகாசமும்      சிந்திக்க வைக்கும் கருத்துச் செறிவும் சி.மணியின்     கவிதைகளின் சிறப்பம்சமாகும். பத்தாண்டுகளுக்கு மலோக நடத்தப்பட்ட ‘எழுத்து’ சிறுபத்திரிகை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். சி.சு. செல்லப்பா என்னும் தனிமனிதர் மிகவும் முயன்று அந்தப் பத்திரிகையை நடத்தினார்.

1.5.3 ‘வானம்பாடிக்’ காலம்

    1) வானம்பாடிக் கவிதைகள் சமூகப்பொறுப்பை வலியுறுத்துகிற
     இயக்கம்.
    2) இதனால், புதுக்கவிதைக்குப் பரவலான செல்வாக்கு
ஏற்பட்டது.
    3) புதுக்கவிதையின் பாடு பொருள் விரிவடைந்தது.
    4) சமூகச் சார்பு இருந்தது.
    5) தமிழ் மண்ணின் மரபு இடதுசாரி கருத்துகளுக்கேற்ப
     மாற்றிப் பாடப்பட்டது.

  • சமூக விமர்சனம்
‘வானம்பாடி’ கவிஞர்களில் சிற்பிக்கு ஒரு தனியிடம் உண்டு.
தனிமனிதக் கொடுமைக்கு, அமைப்பே (ஆதிக்க அரசு) காரணம்
என்பதை இவர் கவிதைகள் உணர்த்தும்.சிற்பி, சர்ப்பயாகம் என்ற
கவிதையில்,

பரமபதத்துச் சோபானபடம் எங்கள் தேசம்
அதில் கட்டங்கள் தோறும்
நச்சுப் பாம்புகள் காத்துக் கிடக்கின்றன
தலைமேல் பூமியை வைத்தால் சுமக்கும்
ஆதிக்க சேடர்கள்
(தமிழில் புதுக்கவிதை, ப.218)


என ஆதிக்கம் புரிபவர்களைச் சாடுகிறார்.