|
படிமம் என்பது கற்பனையின் விளைவு எனப் பிரமிள்
கூறுகிறார்.
சிந்தனை, கற்பனை இரண்டும் இணைய, கவிதையில்
ஆழமும், பொருட்செறிவும் கிடைக்கின்றன. உதாரணமாக, பிரமிள்
எழுதிய ‘விடிவு’ என்ற கவிதை முதல் படிமக்கவிதையாக
இருப்பதைப் படித்துணரலாம்.
விடிவு.
பூமித்தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்ச சிறகில்
மிதக்கும் குருவி (பிரமிள்கவிதைகள், ப. 14)
இக்கவிதையில் இரவைக் கிழித்து வெளிச்சம் புலருகிறது. மரத்தின்
மீது வெளிச்சம் படருகிறது. மரநிழலுக்குள் வெளிச்சம்
ஊடுருவுகிறது. அது பூமியில் படுகிறது. பூமியாகிய உடலில் தேமல்
அழகாகக் காட்சி தருகிறது. அதாவது பாதி இருளும் பாதி
வெளிச்சமும் தேமலாகப் படிமப் படுத்தப்படுகிறது. கரு உடலில்
தேமல் (வெள்ளைத் தழும்பு) பளிச்சென்று தெரியும்.
|