2.3 பெண் விடுதலைச் சிந்தனைகள்


     இந்தப்பாடலில் பெண்கள் விடுதலை பெற்று மகிழவும்,
அவர்களைப் பற்றி மகிழ்வோடு நாம் பாடவும், கண்களிலே
ஒளிபோல உயிரில் கலந்து ஒளிரும் தெய்வம் காத்தருள வேண்டும்
என்று வேண்டுகிறார். இவர், பெண்களைப் பார்த்து, கும்மி
அடிக்கச் சொல்கிறார். தமிழ்நாடு முழுவதும் குலுங்கிட அதிர்ந்து
கும்மியடிக்கச் சொல்கிறார். அப்படிக் கும்மியடிக்கும் பொழுது
நம்மைப் பிடித்த பிசாசுகள் போக வேண்டும் என்று எண்ணிக்
கும்மியடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு வேண்டிக்
கொள்ளும்போது பிசாசுகள் ஒழியும். நன்மைகள் காணமுடியும்
என்று எண்ணிக் கும்மியடிக்க வேண்டும் என்கிறார்.

2.3.1 பெண்களும் கல்வியும்


     ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்களுக்குக் கல்வி உரிமை
கூடாது எனத் தடைவிதித்து வந்துள்ளது. பெண்கள் கல்வி கற்றால்
ஆண்களை மதிக்கமாட்டார்கள் என்று எண்ணிப் பெண்கல்வியை
மறுத்து வந்துள்ளனர் என்பதைக் கவிதையின் மூலம் எடுத்துக்
கூறுகிறார். பெண்கள்     கல்வி கற்கக்கூடாது. பெண்கள்
வீட்டைவிட்டு     வெளியில் செல்லக்கூடாது.     பெண்கள்
வீட்டிற்குள்ளே இருந்து வாழவேண்டியவர்கள் என்ற ஆண்
ஆதிக்கச் சிந்தனையை முதன்முதலில் எதிர்த்தவர் பாரதியார்.
அதனால் தான் ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார் ; வீட்டுக்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’
என முழங்குகிறார்.

    ‘தொழுவத்தில் (மாடுகட்டுமிடம்) கட்டுவதற்கு மாட்டை எப்படி
அடித்து வசப்படுத்துகின்றாரோ, அதைப்போலப் பெண்களை
அடக்கி வைக்க வேண்டும் என்று மாட்டோடு பெண்ணை
இணைத்துப் பார்க்கும் கயவர்களை வெட்டிவிட்டோம்’ என்று
சொல்லிக் கும்மியடிக்கச் சொல்கிறார்.

     நல்ல விலை கொண்டு நாயை விற்பதைப்போலப்
பெண்ணையும் விற்று விடுகிறார்கள். நாயிடம் யோசனை கேட்பது
எப்படி     மடமைத்தன்மை     பொருந்தியதோ அதேபோலப்
பெண்ணிடமும் யோசனை கேட்கக்கூடாது என்று கூறும்போது
பெண்ணின் முடிவுகள், தீர்மானங்களை ஆண்கள் மதிப்பது
கிடையாது என்று எள்ளி நகைக்கிறார்.

     இதன் காரணமாகத்தான் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு
நீதியா? எனத் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார்.

2.3.2 பெண்களும் கற்பும்

    பெண்விடுதலை விரும்பியான பாரதியார், பெண்ணைச்
சக்தியாகவும், தாயாகவும் பார்க்கிறார். பெண்மை போற்றுதற்குரியது
எனக் கூத்தாடுகிறார்.

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா
(பெண்மை, 1)


என்று குதூகலப்படுகிறார். அதனால்தான் பெண்ணிற்கு மட்டும்
கற்பு அவசியம் என்ற ஆணாதிக்கக் கருத்தாக்கத்தை
உடைக்கிறார். ஒழுக்கம் சார்ந்தது கற்பு. பெண்ணின் பண்பைத்
தீர்மானிப்பது கற்பு. ‘கற்புநிலை என்று சொல்லவந்தால் இரு
கட்சிக்கும்     அதைப் பொதுவில் வைப்போம்' என்று
பொதுமைப்படக் கூறுகிறார்.

2.3.3 பெண்களின் ஆளுமைச்சிந்தனை

பெண்கள் பட்டங்கள் பெறவேண்டும். சட்டங்கள் இயற்ற
வேண்டும். உலகமெங்கும் பெண்கள் அறிவில் மேம்பட்டு விளங்க
வேண்டும். ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்களில்லை
என்றெண்ணிக் கும்மியடிக்கச் சொல்வதன் மூலம் பெண்கள்
ஆளுமை நிறைந்தவர்கள் என்பதைப் பதிவு செய்கிறார்.

ஆண்கள்     எந்தெந்தத்     துறைகளில்     சிறப்பாக
விளங்குகின்றார்களோ அந்தந்தத் துறைகளில் பெண்களும் சிறந்து
விளங்க வேண்டுமென்கிறார். வேதம் படைத்தலும், படித்தலும் ஓர்
ஆணுக்குரிய தொழிலாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நீதிகள்
செய்யவும், சோறு படைக்கவும், தெய்வச்சாதி படைக்கவும்
செய்திட வேண்டும் என்று கும்மியடிக்கச் சொல்கிறார்.

ஓர் ஆணின் வெற்றிக்குக் கை கொடுக்கும் விதத்தில்
காதலனைக் கைப்பிடிக்க வேண்டும். பெண்கள் சார்ந்த பழைய
அறங்களைத் தவிர்த்து மாட்சிகள் பல பெற வாழவேண்டும்
என்றெண்ணிக் கும்மியடிக்கச் சொல்கிறார்.