| |
இன்றைய உலகில் பெருகிவரும் கருத்தோட்டங்களில்
பெண்ணியமும் ஒன்று. பெண்களை அழுத்தி வைத்திருக்கும்
சமூகக்
கட்டுப்பாடுகளும் கருத்துப் போக்கும் மாறவேண்டும்
என்னும்
எண்ணத்தோடு பேசுவதும் எழுதுவதும் போராடுவதும்
பெண்ணியக்
கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இன்றைய
இத்தகைய கருத்துகளுக்கு முன்னோடியாக
விளங்கியவர்
பாரதியார். அந்தக் கருத்துகளைப் பார்க்கலாம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆண்கள் அதிகமாகப்
பங்கெடுத்துக் கொண்டனர். அந்தக் காலக் கட்டத்தில் பெண்கள்
வீட்டில் இருந்து வந்தனர். இதனால் பெண்கள் அடிமைகளாக
இருந்து வந்தனர் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. பெண்கள்
அடிமைகளாக இருப்பதற்குப் பெண்களுக்கு என
வரையறுக்கப்பட்ட ஒழுக்கநெறியும் ஒரு காரணமாகும்.
கற்பு என்பது ஆணுக்கும் வேண்டற்பாலது என்ற சிந்தனையை
முதன்முதலில் பாரதியார் எடுத்துரைப்பதன் மூலம் ஆணும்
பெண்ணும் சமம் என்ற பெண்ணியச் சிந்தனையை அவர் முன்
வைத்ததாகக் கருதலாம். பாரதியின் பெண், ஆண்களுக்கு
நிகரானவள். உரிமை மிக்கவள். பெருமை மிக்கவள்.வையகத்தைப்
புதுமையுறச் செய்பவள், கலியை அழிப்பவள், உலக நுட்பம்
தேர்பவள், காதலன் ஒருவனைக் கைப்பிடிப்பவள். அவனுக்குத்
தோள் கொடுத்துத் துணையாக நிற்பவள்.
பாரதியாரின் புதுமைப்பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
ஆகிய பெண்மைக் குணங்களைத் தவிர்ப்பவள். அடுப்பூதும்
பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற வினாவிற்கு விடையாக,
“பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்” விரும்புபவர்கள்
என்கிறார். பாரதியின் சிந்தனைகளைப் பார்க்கும்போது,
பாரதியிடம்
பெண்ணடிமை குறித்த வலுவான மறுப்புணர்வு
இருந்திருக்கிறது
என உணர்ந்துகொள்ள முடிகிறது. பெண்கள்
மீதான
சமூகத்தளைகள் களைந்தெறியப்பட வேண்டும் என்ற
வேட்கை
பாரதியாரிடம் அதிகமாக இருந்தது என்பதைப்
பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பாரதியாரின் காலச்சூழலைப் பொறுத்தவரையில் அவருடைய
பெண் பற்றிய சிந்தனை என்பது முரண்பட்டதாகவே இருக்கிறது.
அதாவது அன்றையக் காலக்கட்டத்தில் பெண்கள் வீட்டிற்குள்
அடக்கப் பட்டிருந்தனர் என்பதை உணர்ந்ததால்தான் அதனை
எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு
நேர்ந்துள்ளது. அதனால் அவர் புதுமைப்பெண் எப்படி
இருக்கவேண்டும் எனப் பட்டியலிடுகிறார். ஆனால்
அடிப்படையில் அவர் ஓர் இந்துவாக இருப்பதால் பெண்ணைத்
தெய்வமாகக் காணுதல், தெய்வத்தைப் பெண்ணாகக் காணுதல்,
புதுமைப் பெண்ணைக் காண விரும்புதல், பெண்ணின் அழகைப்
போற்றுதல் ஆகியன இவரது பெண் வருணனைக்கான
அடித்தளங்களாக அமைந்துள்ளன. இவற்றின் மூலம் பாரதியார்
இந்திய மரபு சார்ந்த பெண்ணைப் படைப்பதில் ஆர்வம்
காட்டியுள்ளதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
சமுதாயம் குறித்த புதிய தேடல் என்பது பெண்ணின்
பரிமாணத்தை உள்ளடக்கியது. பெண் மதிக்கப்படும் பொழுது
சமூகம் மிளிரும். ஏனென்றால் ஒரு சமூகத்தின் இயக்கத்திற்குப்
பெண்ணின் பங்களிப்பும் அவசியமாகிறது. பெண்ணைப் புறம்
தள்ளி எந்த வளர்ச்சியும் கிடையாது. பெண் இயற்கையானவள்.
இயற்கை எப்படிச் சமூகத்திற்குப் பயன்படுகிறதோ அதைப்
போலப் பெண்ணும் சமூகத்திற்குப் பயன்படுகிறாள்.
அதனால்தான்
பெண்ணும் இயற்கையும் ஒன்று எனக் கூறுகின்றார்.
பெண் அறிவை வளர்த்துக் கொள்ளும்போது சமூகம்
வளர்ச்சிப் பாதை நோக்கி நகரும் என்பதில் உறுதியாக
இருக்கிறார் பாரதியார்.
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
பேதமை அற்றிடுங்காணீர் (முரசு-10)
என்று பாரதி கூறுவதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். |