2.5 உவமை


மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே

     (பெண்கள் விடுதலைக் கும்மி, 3)


என்ற வரிகளின் மூலம் பெண்களின் நிலையை மாட்டின்
நிலையோடு ஒப்பிடுகிறார். மாட்டிற்கு உரிய இடம் தொழுவம்.
அதுபோலப் பெண்களுக்குரிய இடம் வீடாகும். மாடு எப்படிக்
கடினமாக உழைக்கின்றதோ அதைப் போலப் பெண்களும்
உழைக்கப் பிறந்தவர்கள். இவர்கள் சமூக     அங்கீகாரம்
பெறாதவர்கள் என்று கூறுகின்றார். நாயைப் போன்றவர்கள்
பெண்கள் என்று கருதப்படுவதையும் அவர் தெரிவிக்கிறார். ‘நல்ல
விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை
கேட்பதுண்டோ’ - என்பது அவர் வாக்கு.

நிலத்தின் தன்மையை ஒட்டி அதில் விளையும் பயிர்
வளமுள்ளதாக அமையும். அதேபோல, அறிவும் விடுதலையும்
கொண்ட பெண்களின் மக்களே அறிவிலும் பண்பிலும் சிறந்து
விளங்குவார்கள். பெண்களை நிலத்துக்கு ஒப்பாகக் கூறிய
பாரதியின் வரிகளைப் பாருங்கள்.

நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்
நீசத் தொண்டும் மடமையும் கொண்ட தாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதோர் செய்தியாம்
-(புதுமைப்பெண், 5)

பாரதியாரின் புதுமைப்பெண் பகுதியில் வரும் உவமைகள் இவை.
அவரது பாடல்களில் உவமை நயத்தைப் பரவலாகக் காணலாம்.