3.2 பாரதிதாசனின் இன்பத் தமிழ்


தமிழ் மக்களுக்கு, இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்,
நல்ல தொண்டு; எனத் தமிழுக்குச் செய்யும் தொண்டையே தம்
வாழ்நாள் தொண்டாகச் செய்தவர்.

தமிழ் இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர் எனத் தமிழை
உயிரெனக் கருதிப் போற்றியவர்.

    தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
    தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
    தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
    தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

    (பாரதிதாசன் கவிதைகள்)        


    பாரதிதாசன் தமிழை அமுதத்தோடு ஒப்பிடுகிறார்.அதாவது,
அமுதம் எப்படி இனிமையாக இருக்குமோ அதைப்போலத்
தமிழ் இனிமையான மொழி என்கிறார்.மேலும் தமிழை மனித
உயிருக்கு நிகராக ஒப்புமைப் படுத்திக் கூறுகின்றார். சமூகம்
சிறப்புற்று வளர்வதற்குத் தமிழ்மொழி நீராகப் பயன்படும்
என்றும் தமிழ் நறுமணம் உடையது என்றும் கூறுகின்றார்.

    ‘உண்டவர்களை மயக்கம் கொள்ளச் செய்யும் மதுவாகத்
தமிழை உவமிக்கின்றார். மனிதர்கள் இளமையோடு பொலிவாக
இருக்கப் பால் எப்படிப் பயன்படுகிறதோ, அத்தகைய பால்
போன்ற சுவையும் வளமும் நிறைந்தது தமிழ். இந்தத் தமிழ்
புலவர்களின் புலமையை அறிவிக்கும் கூர்வலோகும். தமிழ்
எங்கள் உயர்வுக்கு வானமாகும்.இன்பத் தமிழ் மொழியே எங்கள்
அறிவுக்குத் தோளாகும். இன்பத் தமிழ் எங்கள் கவிதையில்
கவித்துவத்திற்கு வாளாகும். எங்கள் பிறவியின் தாயாகும்.
அப்படிப்பட்ட இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கையை
வளமுடையதாக மாற்றக் கூடிய தீ ஆகும்’.

    இப்பாடல் உவமைச் சிறப்பு மிக்கதாகும். தமிழுக்கு
அமுதையும், நிலவையும், நறுமணத்தையும் மதுவையும்
உவமிக்கின்றார். தமிழின் சுவையைத் தேனின் சுவையோடு
ஒப்பிடுகிறார்.

    தமிழை ஓர் அழகிய பூக்காடு என்றும் தன்னை அதில்
வட்டமிடும் ஒரு தும்பியாகவும் உருவகித்துக் கூறுகின்றார்.

    தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி
    (பாரதிதாசன் கவிதைகள்)


தமிழுக்குத் தொண்டு செய்தான் சாதல் இல்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டா
?

    என்று தமிழ்த் தொண்டர்க்கும், தமிழ் கற்றார்க்கும்
நிலைப்பேறு உண்டு என்கிறார். தமிழையும், பாரதியையும்
புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழை என்னுயிர் என்பேன்

    என்று தமிழை உயிரோடு இணைத்துப் பாடிய மாபெரும்
கவிஞர் பாரதிதாசன்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1) பாரதிதாசன் எந்த ஆண்டில் பிறந்தார்?
2) புதுச்சேரியின் சிறப்பு யாது?
3) பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
4) பாரதியாரை, பாரதிதாசன் எப்பொழுது சந்தித்தார்?
5) இருவருக்கும் இடையேயான ஒற்றுமை யாது? (விடை)
6) பாரதிதாசனின் படைப்புகளுள் இரண்டைக்
குறிப்பிடுக.
(விடை)
7) பாரதிதாசனின் இயற்கைப் பாடல்களின் தொகுப்பு
யாது?