p10313 பாரதிதாசனின் கவிதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் கவிதை வானில்
முழுநிலவாய் விளங்கியவர். பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்.
பிறவிச் சிந்தனையாளர். கவிதை உலகில் ஒப்பாரும், மிக்காரும்
இல்லாது விளங்கியவர். பாரதியின் சிந்தனைக்கு மெருகேற்றியவர்
பாரதிதாசன்.பாரதிதாசன் பாடாத பொருள்கள் இல்லை.அவர் ஓர்
உலகச் சிந்தனையாளர். தமிழ்ப் பற்றாளர். ஒரு பொதுவுடைமைக்
கவிஞர். தமிழையே உயிரெனக் கொண்டு விளங்கிய ஏந்தல்.
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் எளிய நடையில்
இன்பத்தமிழாக அமைந்தவை என்பதை இப்பாடம் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
பாரதிதாசனின் தமிழ்ப்பற்று     எவ்வாறு கவிதையாக
வெளிப்பட்டு இருக்கிறது என்பதை அறியலாம்.

நாமும் தமிழ்ப்பற்றை வளர்த்துக் கொள்ளலாம்.
உழைப்பாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை,
பாரதிதாசன் இளம் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்வதை
அறியலாம்.

நாட்டு விடுதலை வேட்கை, மொழிப்பற்று முதலியவை
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டும் என்று
வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

கவிஞர் பல்வேறு பொருள்கள் குறித்துச் சிந்தித்து,
அவற்றைத் தம் கவிதைகளில் சிறப்பாக
எடுத்துக்கூறியுள்ளதை அறிந்து போற்றலாம்