1.1 தக்கயாகப் பரணி


    இந்தப் பகுதியில் தக்கயாகப் பரணி என்ற பெயரைப்
பற்றியும், நூல் ஆசிரியர், அவரது சிறப்புகள் பற்றியும்,
உரையாசிரியர் பற்றியும் படிக்க இருக்கிறோம்.

1.1.1 நூற்பெயர்
    ஒரு நூலில் யார் சிறப்பித்துப் பாடப்படுகிறாரோ
அவரைப் ‘பாட்டுடைத் தலைவன்’    என்று    கூறுவார்கள்.
பொதுவாக, நூலில் சிறப்பித்துப் பாடப்படும் பாட்டுடைத்
தலைவன்    பெயரையே    நூலுக்குப்    பெயராக வைப்பர்.
ஆனால் பரணி இலக்கியத்தில் மட்டும் பெயர் வைத்தல்
வேறுபட்டு இருக்கும். அதாவது, பாட்டுடைத் தலைவனிடம்
தோற்றவர்களின் பெயரையோ, தோற்றவர்களுடைய நாட்டின்
பெயரையோதான் பரணி இலக்கியத்தின் பெயராக வைப்பர்.

    தக்கயாகப்பரணியின்     பாட்டுடைத்     தலைவன்
சிவபெருமானாகிய வீரபத்திரக் கடவுள்.    சிவபெருமானின்
மனைவி பார்வதியின் தந்தை    பெயர்    தக்கன். இவன்
சிவபெருமானை    அவமதித்து அவரை அழைக்காமல் ஒரு
யாகம் செய்கிறான். அதனால் வீரபத்திரராகிய சிவபெருமான்
தக்கனின் யாகத்தை    அழித்து    அவனுக்கு உதவிய
தேவர்களைத் தோற்கடிக்கிறார். அதனால் இந்த நூலுக்கு,
தக்கயாகப் பரணி என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது.

தக்கன் யாகம் செய்தல்

1.1.2 நூலாசிரியர்

     இந்த நூலை எழுதியவர் ஒட்டக்கூத்தர். இவரது
இயற்பெயர் கூத்தன்.

    இவர் விக்கிரம சோழனைப் பற்றி ‘விக்கிரம சோழன்
உலா’ என்ற ஓர்    உலா இலக்கியத்தைப் பாடியுள்ளார்.
அவ்வரசன் அதிலிருந்து ஒரு பாடலை    எடுத்துக் கூறி
‘அதை ஒட்டி ஒரு பாடல் பாடுக’ என்று கேட்க இவர்
ஒட்டிப் பாடியதால் இவருக்கு ‘ஒட்டக்கூத்தர்’ என்ற பெயர்
வந்தது     என்று     கூறுகிறார்கள்.    கவிராட்சசன்,
கவிச்சக்கரவர்த்தி,
கௌடப்புலவர் முதலிய பல சிறப்புப்
பட்டங்கள் ஒட்டக்கூத்தருக்கு உண்டு.

    இவர் சோழநாட்டில் உள்ள    மலரி என்ற ஊரில்
பிறந்தவர். இவர் இந்த நூலில்    சீர்காழி என்ற ஊரைப்
பற்றியும் அதில் உள்ள சட்டைநாதரையும் உமாபாகரையும்,
அவ்வூரில் பிறந்த திருஞான    சம்பந்தரையும் சிறப்பித்துப்
பாடுகிறார்.

  • நூல்கள்
    இவர் தக்கயாகப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்
தமிழ்
ஆகிய நூல்களையும், விக்கிரம சோழன் உலா, அச்
சோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கனைப் பற்றிக்
குலோத்துங்க சோழன் உலா, அவன் மகனாகிய இரண்டாம்
இராசராசன் பற்றி இராசராசன் உலா என்று மூன்று உலா
இலக்கியங்களையும் பாடியுள்ளார். இந்த மூன்று உலாவையும்
சேர்த்து    மூவருலா    என்று    குறிப்பிடுவார்கள். கம்பர்
பாடாது விட்ட    இராமாயணத்தின் இறுதிப் பகுதியாகிய
உத்தரகாண்டம் என்ற பகுதியையும் இவர் பாடியுள்ளார்.
இவை தவிரக் குலோத்துங்கன் கோவை, நாலாயிரக் கோவை,
அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது ஆகிய
நூல்களையும் எழுதி உள்ளார்.

  • சிறப்புகள்
    இவர் விக்கிரம சோழன், அவன்    மகன் இரண்டாம்
குலோத்துங்கன், அவன்    மகன் இரண்டாம் இராசராசன்
ஆகிய மூன்று சோழ அரசர்களிடத்திலும்    அவைக்களப்
புலவராய் இருந்த சிறப்பைப் பெற்றிருந்தார்.

    இவ்வரசர்களில் ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில்
ஓர் ஊருக்குக் ‘கூத்தனூர்’ என்று இவரது பெயரை வைத்து,
இவருக்குப் பரிசாகக் கொடுத்தான். அங்கு இவர் கல்விக்
கடவுளாகிய    கலைமகளுக்கு    ஒரு    கோயிலைக் கட்டி
வழிபட்டார். அக்கோயில் இன்றும் அங்கு உள்ளது.

  • ஆக்குவித்தோன்
    ஒரு நூலை எழுதச் சொல்லி, புலவர் எழுதுவதற்கு
உதவி    செய்பவன்    ஆக்குவித்தோன்    என்று
அழைக்கப்படுகிறான். தக்கயாகப் பரணியை எழுதச் சொல்லி
ஒட்டக்கூத்தருக்கு உதவிய அரசன் இரண்டாம் இராசராசன்
ஆவான்.

  • அடிப்படை நூல்
    இந்த நூலில் உள்ள தக்கனின் யாகத்தைச் சிவபெருமான்
அழித்த கதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று
தெரியவில்லை. ஆனால் வட மொழியில் உள்ள சிவ
மகாபுராணம் போன்ற நூல்களில் உள்ள தக்கயாக சங்காரக்
கதையிலிருந்து இது வேறுபட்டுள்ளது என்று அறிஞர்கள்
கூறுகின்றனர்.