1.4 இலக்கியத் திறன்

    கவி ராட்சசர் என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தரின்
இலக்கியத்திறனை, காட்சித்திறன், அணித்திறன் ஆகிய இரு தலைப்புகளில் காணலாம்.
1.4.1 காட்சிகளின் சிறப்பு

    வீரபத்திரர் படைக்கும் தக்கன் படைக்கும் இடையே நிகழும் போரை அப்படியே கண்முன் காட்சிப்படுத்துகிறார், ஒட்டக்கூத்தர்.
தக்கனுக்கு உதவியாகத் தேவர்களும், வீரபத்திரருக்கு உதவியாகப்
பூதகணங்களும் வந்து போர் புரிந்தனர். அப்போது,

    சிரமும் சிரமும் செறிந்தன
    சரமும் சரமும் தறிப்பவே

    கனமும் கனமும் கனைத்தன
    சினமும் சினமும் சிறக்கவே

    கடையும் கடையும் கலித்தன
    தொடையும் தொடையும் துரப்பவே

    தாரும் தாரும் தழைத்தன
    தேரும் தேரும் திளைப்பவே

    தோலும் தோலும் துவைத்தன
    கோலும் கோலும் குளிப்பவே


(சிரம் = தலை; சரம் = அம்பு; கனம் = மேகம்; சினம்=கோபம்;
கடை = நீர்; கலித்தன = ஒலித்தன; தொடை = அம்பு; தார் =
காலாட்படை, தூசிப்படை; தோல் = யானை; கோல் = ஈட்டி)

    போரில் அம்புகளும் எதிர் அம்புகளும் மேலே விழுவதால்
வீரர்களின் தலைகள் எல்லாம் கீழே கொட்டுவது போல
விழுந்தன.

    வீரபத்திரரின் பூதகணங்கள் மேகங்களாக மாறி, கோபம்
மிகுவதற்காக ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்பின.

    தேவர்கள் விட்ட    அம்புகளுக்கு எதிர் அம்புகளாக
மிகுதியான மழை நீராகிய அம்புகளை விட்டது.

    காலாட்படையும்    காலாட்படையும் மோதிக்கொண்டன.
தேர்ப்படையும் தேர்ப்படையும் மிகுதியாக மோதிக்கொண்டன.

    ஈட்டியும், ஈட்டியும் மிகுதியாகப் பாய்ந்து நிறைந்ததால்
யானைகள் இறந்து போயின.

    தோளும் தோளும் மோதிக்கொண்டன.     கால்களும்
கால்களும் தளராது நிலைபெற்றுப் போர் புரிந்தன என்று
போர்க்களக் காட்சியைக் கண்முன் ஒட்டக்கூத்தர் நிறுத்துகிறார்.

    ஒட்டக்கூத்தர் பலவகையான அணிகளைப் பயன்படுத்தி
மிகச் சிறப்பாகத் தக்கயாகப் பரணியை எழுதி உள்ளார்.
அவற்றில் இரண்டை இங்குப் படிக்கலாம்.

இல்பொருள் உவமை அணி

    உலகில் இல்லாத ஒரு பொருளை உவமையாகக் கூறுவது
இல்பொருள் உவமை அணி எனப்படும்.

    கோயிலைப் பாடியது என்ற பகுதியில் காளிதேவியின்
இருக்கையாக ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் என்ற பாம்பு
அமைந்துள்ளது. அதன் கண்களுக்கு வடமுகாக்கினி என்ற தீயும்,
பற்களுக்கு நஞ்சோடு சேர்ந்த சந்திரனின் அமுத கிரணமும்
உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

உலகம் அழியும் காலத்தில் தோன்றக்கூடிய தீ என்பது உலகம்
அழியாத     இன்று     இல்லை.     சந்திரன்     குளிர்ந்த
அமுதகிரணங்களையே (ஒளிக்கதிர்) உடையவன்.    ஆனால்
நஞ்சோடு சேர்ந்த கதிர்கள் சந்திரனுக்கு இல்லை. எனவே இவை இரண்டும் இல்பொருள் உவமை அணி ஆகும்.

    வேலைநின்று எழா உகக்கனல் என
    வேகநஞ்சு அறா மதிப்பிளவு என
    மாலையும் படாவிழித் திரளது
    வாய்தொறுங்குவால் எயிற்று அணியே
(155)

(வேலை = கடல்; எழா = எழுகிற; உகக்கனல் = யுகம் அழியும்
காலத்தில் தோன்றும் தீ; என=போல; மதிப்பிளவு = நிலவு ஒளி ;
படா விழி = உறங்காமல் விழித்திருக்கும் கண்கள்; குவால் =
மிகுதியான; எயிறு = பற்கள்)

    உலகம் அழியும் ஊழிக் காலத்தில் தோன்றக் கூடிய
வடவைத்தீ போன்றனவாய், இரவிலும் உறங்காதனவாய், நெருப்பு
விடக் கூடியனவாய் ஆயிரம் தலையையுடைய ஆதிசேடனின்
கண்கள் காணப்பட்டன. நஞ்சை நீங்காமல் உமிழும் சந்திரனின்
வெண்மை நிறமுடைய ஒளிக்கதிர்கள் போன்று வாயில் மிகுதியான
விஷமுடைய பற்கள் இருந்தன என்று இல்பொருள் உவமை அணி
அமைந்துள்ளது.

நிரல் நிறை அணி

    செய்யுளில் சொல்லையும் பொருளையும் முறையே வரிசையாக
வைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.இதை,
தண்டி அலங்காரம்

    நிரல் நிறுத்தி இயற்றுதல் நிரல்நிறை அணியே

என்று கூறுகிறது.

    இந்நூலில் காளிதேவியின் இருக்கையாகிய ஆதிசேடனை
வருணிக்கும் போது இவ்வணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மாயிரும் பய உததித் தொகைஎன
    வாள்விடும் திவாகரத்திரளென
    ஆயிரம் பணம் அமிதப் பரவையது
    ஆயிரம் சிகாமணி ப்ரபையே (154)


(மாயிரும் = மிகப்பெரிய; பயம் = பால்; உததி = கடல்;தொகை =
கூட்டம்; வாள் = ஒளி; திவாகரம் = சூரியன்; பணம் = பாம்பின்
படம்; அமிதப் பரவையது = அளவிடமுடியாத பரப்பளவுள்ளது;
சிகாமணி = மாணிக்கம்; ப்ரபை = ஒளி)

    பெரிய பாற்கடல் போன்று    வெண்மையான ஆயிரம்
படங்களையும், ஒளிவிடும் சூரியக்கூட்டம் போன்று ஒளிவிடும்
ஆயிரம் நாகரத்தினங்களையும் உடையதாக ஆதிசேடன் காட்சி
அளித்தது என்று வரிசையாக உள்ள முதல் இரண்டு வரிகளும்
முறையே மூன்றாவது,    நான்காவது வரிகளுக்கு உவமையாகி உள்ளன. எனவே இது நிரல் நிறை அணி ஆகும்.

இயற்கை இறந்த நிகழ்ச்சிகள்

    ஒட்டக்கூத்தர்    உலக    இயல்பைக் கடந்த காட்சிகளை
அமைப்பதில் சிறந்தவராக    விளங்குகிறார். எனவே இவரை
‘கௌடப்புலவர்’என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். அவ்வகை உலக
இயல்பை- உலக இயற்கையைக் கடந்த நிகழ்ச்சிகள் கூளிகள் கூழ்
சமைக்கும்    பகுதியில்    அழகாக    இடம் பெறுகின்றன.
இவ்வகை வருணனைகள் பரணி இலக்கிய வகையில் மிகுதியாகக்
காணப்படுகின்றன. அவற்றில் இரண்டை இங்குப் படிக்கலாம்.
    ..............................
    மலைகளும் வான யானைத்
    தலைகளும் அடுப்புக் கொள்ளீர் (730)


    சிவனுக்குத்     துரோகம்    செய்து அழிந்து போன
மலைகளையும்,     தேவலோக யானைகளின் தலைகளையும்
கொண்டு அடுப்பு அமைப்பீர்!

     வானவர் பல்லும் வானோர்
    மன்னவர் பல்லும் எல்லாத்
    தானவர் பல்லும் தீட்டி
    அரிசியாச் சமைத்துக் கொள்ளீர்


(வானவர் = தேவர்கள்; வானோர் மன்னவர்=இந்திரன்;தானவர்=
அசுரர் முதலியோர்)

    தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய இந்திரனின்
பல்லையும் எல்லா அசுரரகளின் பற்களையும் எடுத்துத் தீட்டி
அரிசி ஆக்கிக் கொண்டு அதைச் சமைப்பீர் என்பன போன்று
இந்த நூலில் உலகின் இயல்புக்கு மாறுபட்ட வருணனைகள்
இடம் பெறுகின்றன.