2.0 பாட முன்னுரை

    கோவை என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. கோவை
என்றால் வரிசை; வரிசையாகக் கோக்கப்பட்டது என்று பொருள்.

    இலக்கியங்களில் அகப்பொருள்    என்று கூறப்படும்
தலைவன் தலைவியின் அக    வாழ்க்கை நிகழ்ச்சிகளையோ,
புறப்பொருள் என்று கூறப்படும் வெட்சி, கரந்தை, வஞ்சி,
காஞ்சி முதலிய புற வாழ்க்கை நிகழ்ச்சிகளையோ வரிசையாகப்
பாடுவது கோவை இலக்கியம் எனப்படும்.

    எனவே கோவை இலக்கியம் அகக்கோவை, புறக்கோவை
என இருவகைப்படும். புறக்கோவை என்பது பற்றிச் சுவாமிநாதம்
என்ற இலக்கண நூல் கூறுகிறது.ஆனால் புறக்கோவை இலக்கியம்
இதுவரை பாடப்படவில்லை. அகக்கோவை    நூல்கள் மட்டுமே
உள்ளன. ஆகவே பெரும்பாலான இலக்கண நூலார் கோவை
என்பது அகப்பொருள் துறைகள் அமைந்த நானூறு கலித்துறைப்
பாக்களால் அமைவது என இலக்கணம் கூறியுள்ளனர்.
கோவைக்கு அகப்பொருட் கோவை என்றும் பெயர் உண்டு.

    தமிழில்    8ஆம்    நூற்றாண்டில் எழுதப்பட்ட
பாண்டிக்கோவை என்ற நூலே முதல் கோவை நூல் ஆகும்.
இதே நூற்றாண்டில் மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார்
அகப்பொருள் துறைகள் அமைந்த சமய இலக்கியம் ஆகும்.
இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார் எனும் பெயரும்
உண்டு.

    தஞ்சைவாணன் கோவை 13ஆம்    நூற்றாண்டில்
எழுதப்பட்ட நூலாகும். தஞ்சைவாணன் கோவை பற்றிய
செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.