| 4.2 அறப்பளீசுர சதகம் | ||||||||||||||||
இச்சதகம் சதுரகிரி என்னும் ஊரிலே எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுரரை முன்னிலைப் படுத்திப் பாடப்பட்ட நூலாகும். சதுரகிரி கொல்லி மலையைச் சார்ந்தது என்பர். அறப்பளி என்பது ஒரு சிவத்தலம். அறப்பள்ளி என்பது கோயிலின் பெயராகும். இந்நூலாசிரியர் மதவேள் என்னும் வளோண் செல்வர் ஒருவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இச்சதகத்தை இயற்றினார் என்பது அவரைக் குறித்து ஆங்காங்கு வரும் சொற்றொடர்களால் இனிது புலப்படும். அறப்பளீசுர சதகத்தில் முதலில் காப்புச் செய்யுளில் விநாயகர் காக்க வேண்டும் என்று துதிக்கையுளான் காப்பு என்று கூறி விநாயக வணக்கம் செய்கிறார் அம்பலவாணக் கவிராயர். முதலில் வரும் காப்புச் செய்யுள் ‘வெண்பா’வில் உள்ளது. இச்சதகம் பன்னிரு சீர் ஆசிரிய விருத்தப் பாவால் இயற்றப்பட்டுள்ளது. இச்சதகத்திற்கு மகுடமாக ஒவ்வொரு பாடலிலும் ‘அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே’ என்ற வரி அமைந்துள்ளது. சிவபெருமான் அருளும், சிறப்பும் பாடல்களில் குறிப்பாகப் பேசப்படுகின்றன. விடமுண்ட கண்டனே (9) என்றும்
|
||||||||||||||||
| 4.2.1 பாடுபொருள் | ||||||||||||||||
| இச்சதகத்தின்கண் உள்ள நூறு செய்யுட்களும் சிறந்த பொருள்களை மிக எளிதாய்ப் புகட்டுகின்றன. குடும்பத்துக்கு வேண்டப்படும் சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும் அறிய வேண்டுவனவாம். அரசர், வளோளர், வைசியர் (வணிகர்) மறையோர் சிறப்புகள் பேசப்படுகின்றன. இல்லறம், நன்மக்கட்பேறு, நன்மாணாக்கர் இயல்பு, நல்வினை செய்தோர், மலோன பொருள் ஆகியன பற்றி நூல் எடுத்துரைக்கிறது. செய்யத்தக்கவை, செயற்கு அருஞ்செயல் அவரவரிடத்து நடக்கும் முறை, பகை கொளத் தகாதவர், பொருள் செயல்வகை பற்றியும் விவரிக்கிறது. உதவியின்றிக் கெடுவன இவையென்பது பற்றியும், குறைவுற்றும் குணம் கெடாமை பற்றியும், குணத்தை விட்டுக் குற்றத்தைக் கவர்தல் பற்றியும் விவரிக்கிறது. ஊழின் வலிமை பற்றியும், ஒளியின் உயர்வு பற்றியும், கற்பு மேம்பாடு பற்றியும், நற்சார்பு பற்றியும், பிறவிக் குணம் மாறாமை பற்றியும் பேசுகின்றது. வறுமையின் கொடுமையையும், கோபத்தின் கொடுமையையும் விளக்குகிறது. யாக்கை நிலையாமை பற்றியும் தருமம் பற்றியும் எடுத்துரைக்கின்றது. திருமங்கை இருப்பிடத்தையும், மூதேவி இருப்பிடத்தையும் சுட்டுகிறது. மேலும் மருத்துவக் குறிப்பும், மழைநாள் குறிப்பும் சோதிடக் குறிப்பும் கூட இந்நூலில் இடம் பெறுகின்றன, |
||||||||||||||||
| 4.2.2 சிறப்புக் கூறுதல் | ||||||||||||||||
திரைகடலோடியும் திரவியம் தேட வேண்டும். நினைவு தடுமாறாமல், ஊக்கம் உடையவராய், மலிவு குறைவது விசாரித்து அளவில்லாமல் பற்பல சரக்கும் அமைவுறக் கொள்வர். கணக்கைச் சரியாக வைத்துக் கொள்வர். செலவு வந்தால் மலையின் அளவும் கொடுப்பர். இவை வணிகர் சிறப்பு என்கிறார் (83). அந்தணர், அரசர், வணிகர் ஆகியோர் தத்தம் கடமைகளையும் தொழில்களையும் தவறாமல் செய்து பெருமை பெறுவதற்கும், எல்லாத் திசைகளிலும் உள்ள கோயில்களில் வழிபாடு முதலியன தடையில்லாமல் நடைபெற்றுச் சிறப்படைவதற்கும் அடிப்படையாய் இருப்பவர், பெருமை பெற்ற ஏரைப் பிடிக்கும் வளோளர்களே என்று வளோளர் புகழ் பேசுகிறது அறப்பளீசுர சதகம் (84). விடியலில் நீராடி, மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் செபித்து, நாளும் அதிதி பூசைகள் செய்து, பேராசை கொள்ளாமல், ‘வைதீக நன்மார்க்கம் பிழையாதிருக்கும் மறையோர் பெய்யெனப் பெய்யு முகில்’ என்று மறையோர் சிறப்புப் பேசப்படுகிறது (81). |
||||||||||||||||
| 4.2.3 குணமும் குற்றமும் | ||||||||||||||||
எதற்கும் பயன்படாதவை பற்றிப் பேசும் போது குணமற்ற பேய் முருங்கை தழை தழைத் தென்ன குட்ட நோய் கொண்டுமென்ன மதுரமில்லா உவர்க்கடல் நீர் கறுத்தென்ன மாவெண்மையாகி லென்ன உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன படராது உலர்ந்துதான் போகிலென்ன என்றெல்லாம் கூறி, ஈகைக்குணம் இல்லாதவரிடத்துச் செல்வமிருந்தென்ன பயன்? என்று கேட்கிறார் அம்பலவாணக் கவிராயர். உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தாலென்ன - (22) இதற்கு மாறாக, குறைவு பட்டாலும் குணம் கெடாத உயர்ந்தோரைப் பற்றிக் குறிப்பிடும் பாடலைப் பாருங்கள். தறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினுஞ் சார்மணம் பழுதாகுமோ தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு சார மதுரங் குறையுமோ நெருப்பிடை யுருக்கினும் அடிக்கினும் தங்கத்தின் நிறை மாற்றுக் குறையுமோ (சுவறிட = வற்றும்படி,
சுண்ட; மதுரம் = இனிமை)
|
||||||||||||||||