|
பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல் போன்ற
இலக்கண நூல்கள் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம்
வகுக்கின்றன. அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது
அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ,
சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக
அமையப் பாடுவது அந்தாதியாகும். அந்தம் (இறுதி) ஆதியாக
(முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் இயைபு என்னும் வகையில்
அந்தாதி அடங்கும். யாப்பருங்கலக்காரிகை ‘அந்தம் முதலாத்
தொடுப்பது அந்தாதி’ எனக் குறிப்பிடும். இதற்குரிய யாப்பு
வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையாகும்.
அந்தாதி தமிழ் இலக்கியத்திற்கு வடமொழியின்
தாக்கத்தால் வந்தது என்பர். இது சரியன்று. அந்தாதி தனி
இலக்கியமாக இல்லாவிடினும் புறநானூற்றில் முரஞ்சியூர்
முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி
அமைப்பினைக் காண முடிகிறது.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் - (புறம் - 2)
முதல் வரியின் ஈற்றுச் சொல் ‘நிலன்’ அடுத்த வரியின்
முதற் சொல்லாக வருகிறதல்லவா. இதுதான் அந்தாதி
எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க
வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியது.
தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார்
பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
| 5.1.1 அந்தாதி இலக்கிய வரலாறு |
|