6.1 பிள்ளைத் தமிழ் இலக்கியம


    இச் சிற்றிலக்கிய வகையினைத் தோற்றுவித்தவர் பன்னிரு
ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரே ஆவார். இவர்
கண்ணனைக் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடல்கள்
பல பாடியுள்ளார். பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
என இவரைக் கூறலாம். இது பிள்ளைப் பாட்டு எனவும்
பிள்ளைக் கவி எனவும் வழங்கப்படும்.

6.1.1 பிள்ளைத் தமிழ் வரலாறு
    கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம்
குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்டுள்ள குலோத்துங்கன்
பிள்ளைத் தமிழே
. முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். இது
சோழர்களின் வரலாற்றைக் கூறும் சிறந்த இலக்கியமாகும்.

    கி.பி.17 ஆம் நூற்றாண்டில்    குமரகுருபரர் பாடிய
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி
பிள்ளைத் தமிழ்
ஆகிய இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில்
பெரும் புகழ் படைத்தவை. கி.பி.18ஆம் நூற்றாண்டில் பகழிக்
கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் சிறப்புடையது.
சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய
சுவைகள் ஒரு சேர அமையப் பெற்ற நூலாக இந்நூல் உள்ளது.

    19ஆம் நூற்றாண்டில் அழகிய சொக்கநாதர் பாடிய
காந்திமதியம்மை    பிள்ளைத் தமிழ், மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
ஆகியவை சிறப்பானவை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
அவர்கள் பத்துப்    பிள்ளைத் தமிழ் நூல்களைப் படைத்த
பெருமைக்குரியவர்.

    சிவஞான சுவாமிகள் எழுதிய அமுதாம்பிகை பிள்ளைத்
தமிழ்
, அருணாசலக் கவிராயர் எழுதிய அனுமார் பிள்ளைத்
தமிழ்
ஆகியவற்றோடு செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்
தமிழ், திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், சுந்தரர்
பிள்ளைத் தமிழ், மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்

போன்ற பிள்ளைத் தமிழ் நூல்களும்     பிற்காலத்தில்
தோன்றியுள்ளன.

    தற்காலத்தில் பாவேந்தர் பிள்ளைத் தமிழ், மறைமலை
அடிகள் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ்,
பெரியார் பிள்ளைத் தமிழ், கலைஞர் பிள்ளைத் தமிழ்,
எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்
போன்றவை தோன்றியுள்ளன.
சிற்றிலக்கிய வகைகளில் மிகுதியான இலக்கியங்கள் பிள்ளைத்
தமிழிலேயே தோன்றியுள்ளன.

6.1.2 பிள்ளைத் தமிழ் இலக்கணம்

    புலவர்கள்    தாம்    விரும்பும்    தெய்வத்தையோ,
அரசனையோ, தலைவனையோ, வள்ளலையோ, சான்றோரையோ
குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத் தமிழ்
எனப்படும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம்
மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக்
கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும்.
இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப்
பருவங்களுக்கு மொத்தம் 100    பாடல்கள் பாடப்படும்.
இவ்விலக்கியம்    ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற்
பிள்ளைத் தமிழ்
    என இரண்டு வகைப்படும். வெண்பாப்
பாட்டியல் (செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு,
தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி,
சிறுபறை, சிற்றில், சிறுதேர்
எனப் பத்துப் பருவங்களை
உடையது பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது. இதில்
முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கும்,
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று
பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற்
பிள்ளைத் தமிழுக்குரியன. இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாக,
கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப்
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.

  • காப்புப் பருவம்
    பாட்டுடைத்    தலைவனை    அல்லது தலைவியைக்
காத்தருளுமாறு    இறைவனை    வேண்டிப்பாடுவது. இது
குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.

  • தாலப் பருவம்
    தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது.
குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.

  • செங்கீரைப் பருவம்
    ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும்
ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை
ஆடுமாறு    வேண்டுவது. இது    குழந்தையின்    7ஆம்
மாத்திற்குரியது.்

  • சப்பாணி
    குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை
இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.

  • முத்தம்
    இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை
முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.

  • வருகை அல்லது வாரானை
    குழந்தையின்    13ஆம் மாதத்தில் குழந்தையைத்
தளர்நடையிட்டு வருக என அழைப்பது.

  • அம்புலி
    15ஆம் மாதத்திற்குரிய    இப்பருவத்தில்    நிலவைப்
பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது.
இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு
வழிகளில்    அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக்
கடினமான பருவம் என்பர்.

  • சிற்றில்
    17ஆம்    மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண்
குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள்
சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

  • சிறுபறை
    19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை
முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.

  • சிறுதேர்
    21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி
விளையாடுதல் குறிப்பிடப்படும்.

  • நீராடல்
    குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.

  • அம்மானை - கழங்கு
    கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.
  • ஊசல்
    ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.

6.1.3 பாவேந்தர் பிள்ளைத் தமிழ்

     பாவேந்தர் பிள்ளைத் தமிழைப் படைத்த ஆசிரியர்
பாவலர் புலமைப்பித்தன் ஆவார்.    1935இல் கோவை
மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் இராமசாமி.
பஞ்சாலையில் பணியாற்றிக் கொண்டே பயின்று 1961இல் புலவர்
பட்டம் பெற்றார். 1000 கவியரங்குகளில் பங்கு    கொண்ட
பெருமைக்குரியவர். பாவலர் புலமைப்பித்தனின் நூல்கள்
புரட்சித் தீ (இந்தி எதிர்ப்புப் பாக்கள்), பாவேந்தர் பிள்ளைத்
தமிழ், புரட்சிப் பூக்கள்
ஆகியவையாம். இயற்கையைப் பாடும்
போதும் பசித்த மக்களை - அடக்கி ஒடுக்கப்பட்டவர்களையே
பாடினார் பாவேந்தர். அவ்வழியில் பாடுபவர் இவர். பெரியார்,
அண்ணா, எம்.ஜி.ஆர். மூவரையும் மூச்சாகக் கொண்ட கவிஞர்.
மக்கள் வேதனை போக்கவே பாடும் சமுதாயக் கவிஞர்.
கவிதைச் சிறப்பும், அணிநயமும், வளமான கருத்துகளும்,
கற்பனைகளும் இவர் கவிதைக்குரிய சிறப்புக்களாகும்.

    தமிழ் இலக்கிய உலகம் காணாத பல கருத்துகளுக்குக்
கவிதை வடிவம் அளித்த    புரட்சிக் கவிஞரைச் சிறு
குழந்தையாகக்    கருதி, பாவேந்தர் பிள்ளைத் தமிழைப்
படைத்துள்ளார்; ஆசிரியர்.    இந்நூலில் புலமைப் பித்தனின்
சிறந்த சொல்லாட்சியையும், கற்பனை வளத்தையும், சந்தச்
சிறப்பையும் காணமுடிகிறது. பழைய பிள்ளைத்    தமிழ்
இலக்கியங்களைப் போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. சிறப்பாக,
குமரகுருபர அடிகளின் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை
ஒத்தும், உறழ்ந்தும் பாடியிருப்பதாக, பாவேந்தர் பிள்ளைத்
தமிழுக்கு உரையெழுதிய    ந.இராமநாதன் பாராட்டுகிறார்.
(பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பக்.25)

6.1.4 பாடுபொருள்

     பழைய பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் உள்ளடக்கம்
பருவ இயல்புகளைப் பாடுவதோடு அமைந்து விட்டது. ஆனால்
பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பெரியாரில் தொடங்கி, பேரறிஞர்
அண்ணா    வரையிலான    அறிஞர்களின் வளம் மிக்க
கருத்துகளை விளக்குகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி
தொடங்கி, தொடர்ந்து திராவிட இயக்க அரசாகவே தமிழக
அரசு இயங்கிவரும் நிலையை, நடைமுறையை எடுத்துப்பாடும்
ஒப்பற்ற இலக்கியப் படைப்பாக இப்பிள்ளைத் தமிழ் இலக்கியம்
விளங்குகிறது.

     அளி முரல மலரவிழ வருமுதய கதிரவனை
     அரசாள வைத்த அண்ணன்
- (பாடல் - 9)

என்று பிள்ளைத் தமிழில் திராவிட இயக்கத்தார் உதய
சூரியனைச் சின்னமாகக் கொண்டு தமிழக அரசை ஆளத்
தொடங்கிய வரலாறு சுட்டப்படுவதைக் காணலாம்.

     இருபதாம் நூற்றாண்டின் அரசியல், சமுதாய இயல்
ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய
பெரியாரையும்,    பெரியாரின்     சிந்தனைகளைச்
செயல்படுத்துபவராக    விளங்கிய     பேரறிஞர்
அண்ணாவையும்    பாடி    மகிழ்ந்த    புரட்சிக் கவிஞர்
பாரதிதாசனின் வாழ்வையும், சமுதாயப் பணிகளையும் பாடு
பொருளாகக் கொண்டது இந்நூல். ஒப்புயர்வற்ற இலக்கியமாகத்
திகழும் இப் பிள்ளைத் தமிழ்,    பாவலர் புலமைப்பித்தன்
பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டின் மொத்த
வடிவம் எனலாம்.

  • வரலாறும் வாழ்க்கையும்
     தமிழை உயிராகக் கருதிய பாவேந்தர் பாரதிதாசன்
29.04.1891இல்    பாண்டிச்சேரியில் பிறந்தார். இவருடைய
இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பெற்றோர் கனகசபை -
இலக்குமி. இவர் இளமையிலேயே, கவிதை புனையும் ஆற்றல்
பெற்றவர். அப்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த
பாரதியாரோடு தொடர்பு ஏற்பட்டது ; அவருடைய அன்பாலும்
கவிதையாலும் ஈர்க்கப்பட்ட இவர், தம்மைப் பாரதிதாசன் எனக்
குறிப்பிடத் தொடங்கினார். தொடக்க காலத்தில் காங்கிரஸ்
தொண்டராக    இருந்தவர், பின்னர், தந்தை பெரியாரின்
பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் புரட்சிகரமான
சிந்தனைகளைப் பாடல்களாக்கி, தன்மான இயக்கத்தின் சிறந்த
பாவலர் எனப் பாராட்டப் பெற்றார். 1946இல் புரட்சிக் கவிஞர்
என்ற விருது பெற்றார். 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம்
நாள் இயற்கை எய்தினார். 1968இல் பாவேந்தரின் உருவச்
சிலை    சென்னை    மெரீனா    கடற்கரையில்    திறந்து
வைக்கப்பட்டது. பாவேந்தர்    நூல்களைத் தமிழக அரசு
நாட்டுடைமையாக்கியது.     பாவேந்தர் பெயரில் அமைந்த
பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறது.

  • சமுதாயப் பங்களிப்பு
     தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மூட
நம்பிக்கைகளைத்    தகர்த்தெறிந்து கவிதையில்    மாற்றம்
செய்தமையால்    புரட்சிக்கவிஞரானார். சாதிக்கொடுமையை
வேருடன் களைந்தெறிய வேண்டும், பெண் இனம் முன்னேற
வேண்டும் என்பதே இவருடைய கொள்கை. பொன்னி, குயில்
இதழ்களின் மூலம் புரட்சிகரமான தன்னுடைய கவிதைகளை
வெளியிட்டார்.

    பெண் கல்வியைக் குடும்ப விளக்கிலும், புதிய
உலகத்தைப் பாண்டியன் பரிசிலும், இயற்கை அழகை
அழகின் சிரிப்பிலும் நயம்பட மொழிகிறார். புரட்சிக்கவியில்
காதலும் வீரமும் வெளிப்படக் காணலாம். மணிமேகலை
வெண்பா
வில் மணிமேகலையைச் சமூகச் சீர்திருத்த வாதியாகக்
காட்டுகிறார். எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு முதலிய
காப்பியங்களையும், சௌமியன், சேர தாண்டவம், நல்ல
தீர்ப்பு, பிசிராந்தையார்
    ஆகிய    நாடகங்களையும்
இயற்றியுள்ளார். இவரது பிசிராந்தையார் நாடகம் 1970இல்
சாகித்திய அகாதமி விருது பெற்றது.