|
அகம் என்னும் சொல்லைப் போலவே புறம் என்பதும் ஓர்
இலக்கியக் கலைச் சொல்லாகும். புறம் என்பது காதல் தவிர்ந்த
ஏனைய பொருள்களைப் பற்றியது. அதாவது போர், வீரம்,
கொடை, புகழ், அறநெறி போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப்
பற்றியது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் அகம்,
புறம் ஆகியவற்றைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
“அகப்பொருளானது போக நுகர்ச்சியாகலான் அதனாலாய
பயன் தானே அறிதலின் அகம் என்றார். புறப்பொருளாவது
மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றாலாய பயன்
பிறருக்குப் புலனாதலின் புறம் என்றார்”.
புறப்பொருள் என்பது போர், வீரம், கொடை, புகழ்,
பிறப்பு, இறப்பு முதலிய சமுதாயப் புறச் செய்திகளைச்
சுட்டுகின்றது. இப்பகுதிக்குப் புறத்திணையியல் எனத்
தொல்காப்பியர் பெயரிட்டுள்ளார். அகத்திணையியல் காதலை
மட்டுமே கூறும். ஆனால் புறத்திணையியலோ, காதல் தவிர மற்ற
எல்லாவற்றையும் கூறும்
.
புறத்திணைகளைப் பற்றி நாம் அறியும் போதுதான்
சமூக வாழ்க்கை பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை
அறிந்து கொள்ள முடியும்.
சங்க காலப் புறத்திணைப் பாடல்கள் போர் பற்றிய
செய்திகளையும், அரசர்களின் ஆட்சியின் சிறப்பையும்,
புலவர்கள் மேல் அவர்கள் கொண்டிருந்த பேரன்பையும், மிகச்
சிறப்பாக விளக்குகின்றன. மேலும் அப்பாடல்களில் சொல்லப்படும்
கருத்துகள் அக்கால மக்களின் வாழ்வியலை முழுமையாக
எடுத்துக்காட்டுகின்றன. |