3.1 தொல்காப்பியப் புறத்திணையியல்

    தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு
புறத்திணையியலைக் கூறக் காரணம் என்னவென்றால் அகப்
பொருள்     பகுதிக்குப்     புறனாய     பகுதிகளைக்
கூறுவதற்கேயாகும். தொல்காப்பியர் முன்னர் அகத்திணைகள்
ஏழு வகைப்படும் என்று கூறினார். அந்த அகத்திணைகளுக்கு
இவ்வியலில் கூறப்பெறும் புறப்பகுதிகள் அவ்வகத்திணைகளுக்கே
புறத்திணைகளாய் அமைந்த சிறப்பினையும் உணர்த்துகின்றார்.

3.1.1 புறத்திணைப் பாகுபாடு

    காதல் தவிர, பிறவற்றைக் கூறும் புறத்திணைப் பகுதியில் ஏழு
திணைகள் உள்ளதாகத் தொல்காப்பியர் கூறுவார். அவை வெட்சி,
வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர்
பெறும். அன்பின் ஐந்திணை எனப் பெறும் முல்லை, குறிஞ்சி,
மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும்
பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம்.
‘பாடாண்’ மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை.

    ஏழு     அகத்திணைகளுக்கு     இணையாக ஏழு
புறத்திணைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். அகத்திணைக்குரிய
குறிஞ்சி இங்கு வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப்
புறத்திணையாகக் கொள்ளும். முல்லைக்கு வஞ்சித் திணை
புறத்திணையாகும்.

     மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத்
திணையாகும். நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும்.
பாலை என்னும் நடுவுநிலைத் திணைக்குப் புறத்திணையாக வாகைத்
திணை அமையும்.

     பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய
அகப் புறத்திணைக்கு நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித்
திணை புறத்திணையாகும். கைக்கிளை என்னும் ஒரு தலைக்
காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும்.

     இவ்வகத்திணைகள் ஏழும், புறத்திணைகள் ஏழும்
ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாகக் கூறப் பெறுதல்,
தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றது.