3.3 புறத்திணைகளின் எண்ணிக்கை

    புறத்திணைகளை அகத்திணைகளுக்கு இணையாக வைத்து
ஏழு என்று தொல்காப்பியர் வகுத்தாலும், பிற்கால இலக்கண
நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளைப்
பன்னிரண்டு என்று கூறுகிறது.

தொல்காப்பியர் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை,
காஞ்சி, பாடாண் என்று ஏழு திணைகளாகக் கூறுகிறார்.
தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள்
புறத்திணைகளைப் பன்னிரண்டாகப் பிரித்தனர். அவை வெட்சி,
கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை,
பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப்பட்டன.
பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற
புற இலக்கண நூல்கள்     பன்னிரண்டு திணைகளாக
விளக்கியுரைக்கின்றன.

    எனவே தொல்காப்பியருக்குப் பிறகு புறப்பொருள் மேலும்
பிரிக்கப்பட்டதை உணருகிறோம். ஆனால் உரையாசிரியர்
இளம்பூரணர் அகங்கை ஐந்து உடையாருக்குப் புறங்கை
ஐந்தாதற்போல அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும்
ஏழுதான் என்றுரைப்பர்.

    இவற்றுள் கரந்தை, நொச்சி, பொதுவியல் புதிதாகக்
கொள்ளப்பட்ட புறத்திணைகளாகும். அகத்திணையுள் அடங்கிய
கைக்கிளை, பெருந்திணை புறத்திணையிலும் இணைக்கப்படவே
இவற்றின் எண்ணிக்கை பன்னிரண்டாயிற்று.

ஆநிரை கவர்தலைக் கூறிய தொல்காப்பியர், ஆநிரை
மீட்டலாகிய கரந்தையைக்     கூறவில்லை.     ஏனெனில்
அகத்திணைகளுக்கு இணையாகவே புறத்திணைகளைக் கூறும்போது
ஒருவனும் ஒருத்தியும் காதல் கொள்ளும் களவினைக் கூறியவர்
ஆநிரை கவர்தல் என்னும் களவினைக் கூறி ஒப்புமைப்
படுத்துகிறார். ஆநிரை மீட்டல் என்றால் களவு நிலை மாறி,
அடுத்தவர் தலையீடு நிகழ்ந்து, காதல் முறிக்கப்படுதல்
வந்துவிடும் என அவர் நினைத்திருக்கக் கூடும்.

அதே போல, நொச்சித் திணையையும் அவர் கூறவில்லை.
நொச்சித் திணை என்பது     கோட்டையின் உள்ளே
இருந்துகொண்டு தன் மதில் அழிவு படாமல் காத்தலாகும்.
பகைவேந்தன் மதிலை வளைப்பான். இது, பகைவர் மதிலை
அழித்துக் கோட்டைக்குள் நுழையும் உழிஞைத் திணையுள்
அடங்கி விடுகிறது. ஏனெனில் ஊடலும், ஊடல் நிமித்தமும்
உள்ள மருதத் திணையின் புறத்திணை, உழிஞைத் திணையாகும்.
வாயில் அடைத்து ஊடல் கொள்ளும் தலைவியின் ஊடல்
தீர்த்துத் தலைவன் உள்ளே நுழைந்துவிடுவதைக் குறிக்கும்
மருதத் திணைக்குப் புறத்திணையாகிய உழிஞையுடன் நொச்சித்
திணைச்     செய்திகளும்     அடங்கிவிடுவதால்     அதனைத்
தொல்காப்பியர் பிரிக்கவில்லை.

    மேலும் கைக்கிளை, பெருந்திணை ஆகியன காதல் பற்றிய
செய்திகளுக்கு உரிய ஆகலான் அவற்றைத் தொல்காப்பியர்
புறத்திணையில் சேர்க்கவில்லை.     பொதுவியல் என்பது
புறத்திணைகளில் கூறப்படாது விட்ட துறைகளும் கூறப்பட்ட
புறத்திணைகளுக்குப் பொதுவாய் வருவனவும் ஆகியவற்றுக்கு
இலக்கணம் கூறுவதாகும். இதனையும் தொல்காப்பியர் கூற
வேண்டிய தேவையில்லை என்பதால் விட்டு விட்டார்.

    எனவே தொல்காப்பியர் மிகச் சிறப்பாகப் பாகுபாடு செய்த
புறத்திணைகளை ஏதோ காரணம் கருதி, பிற்காலத்தார்
பன்னிரண்டாகப் பிரித்தனர் என நாம் கருதலாம்.