3.5 புறத்திணைகள் கூறும் சமூகச் செய்திகள்

புறத்திணைகள் போர்ப்     பிரிவுகளை விளக்குகின்றன.
ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக
அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை
மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

    பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப்
பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்
பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில்
இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்
தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய
துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

    போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல்
ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான
காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது.
வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்
கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி
பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை      ஓர் ஒழுங்கு
கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர்
இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ள
புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில்
உள்ள ஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும்
மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக்
கொண்டே இயற்றப்பட்டுள்ளன.