4.2 புறநானூற்றில் ஆற்றுப்படை

புறத்திணை பற்றிய சிறந்த பாடல்களின் தொகுப்பான
புறநானூறு
பற்றி விரிவாக அடுத்த பாடத்தில் படிப்பீர்கள்.
இதில் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த சிறு பாடல்கள் பல
உள்ளன.

     புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள முதல் ஆற்றுப்படைப்
பாடல் புலவர் ஆற்றுப்படையாக அமைந்துள்ளது. புலவர்
பொய்கையார் ஒரு வறுமையுற்ற புலவனைச் சேரமான்
கோக்கோதை
மார்பனிடம் ஆற்றுப்படுத்திப் பாடி உள்ளார்.

     கோதை மார்பின் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி
அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்.... (புற. 48: 1-5)

(கோதை = சேரமன்னனின் பெயர், பூமாலை; மாக்கழி = கருநீல
நிறம் கொண்ட கடற்கரை நீர்நிலை; கள்நாறும் = தேன்
மணக்கும்; கானல் = கடற்கரைச் சோலை; இறைவன் = மன்னன்)

    இவ்வாறு சேர மன்னனையும் அவனது தலைநகர்
தொண்டியையும் அறிமுகம் செய்கிறார் புலவர். “தொண்டி
தேனின் மணம் கமழும் ஊர். அதுவே எங்கள் ஊர். அவன்
தான் எங்கள் அரசன். அவனிடம் நீ சென்றால் அவன் தரும்
செல்வங்களைப் பெற்று நீ உன் வறுமையையும், அந்த வறுமை
மிக்க கடந்த காலத்தையும் மறந்துபோவாய். அவற்றை மட்டும்
அல்ல. வழிகாட்டிய என்னையும் கூட மறந்துவிடுவாய்.அதனால்
கோதையிடம், “போரில் வென்று வாள் வன்மையால் நீ ஓங்கி
நிற்கும் போது தன் வாய் வன்மையால் உன் புகழை ஓங்கச்
செய்யும் புலவரைக் கண்டேன்” என்று, என்னை நினைத்துப்
பார்த்துச் சொல்” என்று பாடுகிறார் பொய்கையார்.

    இப்பாடலில், தொண்டியில் தேன் மணம் கமழ்வதற்குக்
காரணம் சொல்கிறார். கோதை என்ற சொல் சேரமன்னன்
பெயரைக்     குறிக்கும்.      பூக்களால்     தொடுக்கப்பட்ட
மாலையையும் குறிக்கும்.     இந்தச் சொல் மீண்டும்
மீண்டும் வரும்     வகையில்     அழகாகச் சொற்களைத்
தொடுத்துள்ளார் புலவர்.

     கோதை மார்பில் அணிந்துள்ள மாலையின் மலர்கள்;
அவனைத் தழுவிய மகளிர் கூந்தலில் சூடிய மாலையின் மலர்கள்;
கரிய நிறம் கொண்ட கடற்கரைப் பொய்கையில் மலர்ந்துள்ள
நெய்தல் மலர்கள் இவற்றில் உள்ள தேனால் தொண்டி என்ற
ஊரே தேன் மணக்கிறதாம்.

     வறுமையில் வாடி வள்ளலைத் தேடி வறண்ட நிலத்தைத்
தாண்டிச் செல்கிறான், இந்தப் புலவன். இவனுக்குத் தேன்
மணத்தால் இனிமையான வரவேற்புத் தருகிறது சேரனின் ஊர்.
இனிய முகம் காட்டி விருந்தினரை ஓம்பும் வள்ளலின் இயல்பை
ஊரின் மேல் ஏற்றி, அங்கு எங்கும் இனிமை, எல்லாம் இனிமை
என்று பொய்கையார் உணர்த்துகிறார் இல்லையா?

     கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய
மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம்
ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில்
ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று
தோன்றுகிறது அல்லவா? என்ன அது? எண்ணிப் பார்ப்போமா?

     சேரமான் வீரத்தில் சிறந்தவன். அதையும் விஞ்சுகின்ற
வகையில் ஈகைப் பண்பில் மிகவும் சிறந்தவன். இதையே மீன்
மணமும் அதை விஞ்சி எழுகின்ற தேன் மணமும்
குறிப்பாகச் சுட்டுகின்றன. எப்படி? இரத்தமும் சதையும்
நாறும் போர்க்களத்தில் சிறப்பது வீரம். இதைப் புலால் நாற்றமான
‘மீன் மணம்’ குறிக்கிறது. பூப்போன்ற மெல்லிய நெஞ்சத்தில
ஊறும் தேன் போன்றது அருள். எப்போதும் புகழ் மணமும்
இனிமையும் கொண்ட இந்த ஈகைப் பண்பைத் ‘தேன் மணம்’
குறிக்கிறது.

4.2.1 சொல்லின் செல்வர்
    சொற்களைச் சிறப்பாக ஆளுவதில் சங்கப் புலவர்களுக்கு
இணை எவரும் இல்லை என்பதை அறிவீர்கள் அல்லவா?
இனிய சொற்களால் கூர்மையுடன் சொல்லும்     முறை,
பொருத்தமும் அழகும் பொருந்திய உவமைகள், இவை
அவர்களின் தனிச்சிறப்பு. ஆற்றுப்படைப் பாடல்களிலும் இந்த
ஆற்றல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
  • உடும்பும் கடும்பும்
  •     பல     நாட்களாக உணவையே காணாத பசியின்
    கொடுமையால், பாணனின்     சுற்றத்தார்     எவ்வளவு
    மெலிந்துபோய் இருக்கின்றனர்! உடை இல்லாத அவர்களின்
    உடம்பின் விலாப் புறத்தில் எலும்புகள் புடைத்து, நடமாடும்
    எலும்புக் கூடுகளாகக் காணப்படுகின்றனர். இந்த உடம்பைச்
    சிறந்த உவமையால், அழகிய சொற்களால் ஓவியமாக்கிக்
    காட்டுகிறார்

    கோவூர்கிழார்:

         உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
    கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
    சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
    ஈங்குஎவன் செய்தியோ பாண...    (புறம் 68: 1-4)

    (உடும்பு = பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பெரிய உயிர் இனம்;
    என்பு
    = எலும்பு; மருங்கு = இடுப்பு, விலாப்புறம்; கடும்பு =
    சுற்றத்தார்; களையுநர் = நீக்குபவர்; சில்செவித்து = சில
    செவிகளை உடையது ; கேட்போர் குறைந்த)

        உடும்பைத் தோல் உரித்ததுபோல எலும்புகள் துருத்திக்
    கொண்டு தெரியும் இடுப்புப் பகுதியுடன் மெலிந்து
    காணப்படுகின்றனர் பாணனின் கூட்டத்தார். இந்த நிலைக்குக்
    காரணம் ஆன பசியைப் போக்கும் வள்ளலைக் காணாமல் தேடி
    அலைகிறான் பாணன். “இசையின் நுணுக்கங்களை அறிந்து,
    கேட்டுச் சுவைக்கும் செவிகள் உலகில் மிகக் குறைவு.
    கேட்பவர்களிலும், பலருக்கு அறிந்து கொள்வதற்கு அரிய கலை
    இசைக்கலை. ‘இந்தக் கலையைக் கொண்டு வாழும்படி இறைவன்
    நம்மைப் படைத்துவிட்டானே’ என்று நொந்து நொந்து புலம்பிக
    கொண்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் பாணனே?”
    என்று உரிமையுடன் கேட்டு, நலங்கிள்ளியிடம் போகச் சொல்லி
    ஆற்றுப்படுத்துகிறார் புலவர்.

    உடம்பு பற்றிய உடும்பு உவமை சிறப்பாக உள்ளது. மேலும் ‘கடும்பின்- கடும்பசி’ சொற்களின் ஒத்த அளவும் ஓசையும்,
    ‘கடும்பசியே மனித உருவம் எடுத்து வந்தது போல் இவர்கள்
    இருக்கின்றனர்’ என்று காட்டுவதுபோல் உள்ளது, இல்லையா?

  • இரு மருந்து
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மிகச் சிறந்த
    வள்ளல். இவன் பல புலவர்களால் சிறப்பித்துப் பாடப்
    பெற்றுள்ளான். நீர் நிறைந்த தை மாதப் பொய்கை போல்
    அள்ள அள்ளக் குறையாத சோறு கொண்ட இவனது வளம் பல
    கொண்ட நல்ல நாடு நயமாகப் பாடப்பட்டுள்ளது.

         அடுதீ அல்லது சுடுதீ அறியாது
    இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
    கிள்ளி வளவன்     (புறம் 70: 8-10)

    (அடுதீ = சமையல் செய்யும் தீ; சுடுதீ = பகைவர் வந்து ஊரைக்
    கொளுத்தும் தீ, எதையும் விடக் கடுமையாகக் கொளுத்தும் தீ
    ஆகிய பசி; இருமருந்து = நீரும், சோறும்)

         உலகில் மக்கள் நோய் இன்றி நலமாக வாழ்வதற்கு
    ஆதாரமாய் உள்ள நீரையும் உணவையும் இருமருந்து
    என்று பாடியுள்ள கோவூர் கிழாரின் சொல்லாட்சி நயமாக
    உள்ளது அல்லவா? இருமருந்து என்பது இரண்டு மருந்துகள்
    என்றும், மருந்துகளுக்கு எல்லாம் பெரிய மருந்து என்றும் இரு
    பொருள் தரும்.

        பொருநன் என்னும் சொல்லும் போர்வீரன், பாடல்
    ஆடல்களில் வல்ல கலைஞன் என்ற இரு பொருள்கொண்டது.
    அந்தச் சொல்லால் வள்ளல் சுட்டப்படுகிறான். போர் செய்து
    வீரத்தால் பல நாடுகளை வென்று பொருள் வளம் சேர்த்துச்
    சோறு விளைவிக்கிறான். தன் அருள்மிக்க கொடை உள்ளத்தாலும்
    செங்கோல் ஆட்சியாலும் மழை பெய்யக் காரணம் ஆகி நீரை
    விளைவிக்கிறான் என்ற பொருளையும் உள்ளடக்கியவை இந்த
    வரிகள். ‘நம் ஆள்’தான் அவன் என்று உரிமையுடன் சொல்வது
    போலக் கலைஞன் என்ற பொருளையும் தரும் பொருநன் என்ற
    சொல் ஆளப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

  • வறுமை பேசும் வாய்கள்
  • கலைஞனின் வறுமையை அவன் உடுத்துள்ள ஆடையின்
    கிழிசல்கள் நமக்குக் கூறுகின்றன.

         கையது கடன்நிறை யாழே, மெய்யது
    புரவலர் இன்மையின் பசியே, அரையது
    வேற்றுஇழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
    ஓம்பி உடுத்த உயவல் பாண...     (புறம் 69: 1-4)

    (வேற்று இழை = தைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வேறு நூல்;
    வேர்நனை
    = வியர்வையில் நனைந்த; அரையது = இடுப்பில்
    உள்ளது; சிதாஅர் = கந்தல் ஆடை; ஓம்பி = பாதுகாப்பாக)

        “உன் கையில் இருப்பது இலக்கண முறைமை நிரம்பிய
    யாழ், ஆதரிப்பார் இல்லாமையால் உன் உடம்பின் உள்ளே
    நிரம்பி இருப்பது பசி” இவ்வாறு தொடங்குகிறார் ஆலத்தூர்
    கிழார். ‘கடன்நிறை யாழ்’
    இலக்கண முறைமையுடன் அமைந்த
    யாழ், இசைக்கப்படும் யாழ் என்ற பொருளுடன்; சுற்றத்தாரின்
    பசியை எல்லாம் போக்கும் கடமை நிறைந்த யாழ் என்றும்
    பொருள் தருகிறது. அதை நம்பிப் பலரிடம் கடன் வாங்கி
    இருப்பான் அல்லவா? அந்தக் கடனும் நிறைந்த யாழ் என்று
    இத்தொடர் இன்னும் ஒரு பொருள் குறிக்கிறது.

        இடுப்பில் உள்ள கந்தல் உடையில் நெய்த நூலைவிடத் தைத்த
    நூல் அதிகம் ஆகிவிட்டது. அத்தனை முறை கிழிந்து,
    தைக்கப்பட்டு உள்ளது அது. இனி நீரில் நனைத்துத் துவைக்க
    முடியாது, இற்றுப்போய்விட்டது. அதனால் வேர்வையில் மட்டுமே
    நனைவது அது     என்கிறார். பாணன் அதை ‘ஓம்பி’
    உடுத்திருக்கிறான்.    மிகக்     கவனத்துடன் பாதுகாத்து
    உடுத்திருக்கிறானாம். ஏன்?    இருப்பது அது    ஒன்றுதான்.
    இற்றுப்போய் இருக்கிறது, அமர்ந்து எழுந்தால் மேலும் கிழிந்து
    போகலாம். பல இடங்களில் கிழிந்திருக்கிறது. கிழிசல் வழி
    உடம்பின் மானப்பகுதி தெரிந்துவிடக் கூடாது என்று
    எப்போதும் கவனமாய் இழுத்து இழுத்து மூடிக் கொள்ள
    வேண்டிய நிலை. இவ்வளவு காரணங்களை ‘ஓம்பி உடுத்த’
    என்ற தொடர் அடக்கியுள்ளது. வேறு ஒரு பாடலில் (புறம் 138: 5),
    சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
    என்று ஒரே வரியில்
    கந்தல் அணிந்த கலைஞன் அழைக்கப்படுகிறான். ‘டார்’
    என்ற ஒலியோடு பழந்துணி கிழியும் ஓசையை இந்த, ஒர் அடி
    தருவதை மனத்தின் செவிகொண்டு கேளுங்கள்; மருதன்
    இளநாகனாரின்
    கவிதைத் திறன் புலப்படும்.

    4.2.2 வரிசை என்னும் சிறப்பு
        வள்ளலைக் கண்ட உடனேயே கலைஞனின் வறுமை நிலை
    மாறிவிடும் என்பதைப் பரிசு பெற்றவன் சொல்வான். தனக்குக்
    கிடைத்த வரிசை எனப்படும் சிறப்பினை விளக்கியும் இதைக்
    கூறுவான். அந்தக் கலைஞன் பெறப்போகும் வரிசையை
    விளக்கியும் இதைச் சொல்வான்.

         ‘வண்டுகள் மொய்க்காத தாமரைப் பூவைப்
         பரிசாகப் பெறுவாய்' (69: 20-21)


    என்கிறான். பொன்னால் செய்யப்பட்ட தங்கத் தாமரைப் பூ
    இவ்வாறு நயமாகக் குறிப்பிடப்படுகிறது.

         “செல்வை ஆகில் செல்வை ஆகுவை” என்ற இனிய
    சொல்லாட்சியால் கோவூர்     கிழாரின் பாடலில் பாணன்
    பேசுகிறான். (செல்வை = சென்றாய் ஆனால்; செல்வை
    ஆகுவை
    = பெரும் செல்வத்தை உடையவன் ஆகிவிடுவாய்)

  • இழந்துவிட்டும் வரலாம்
  •     என்னென்ன பெறுவாய் என்று சொல்லும் வழக்கிலிருந்து
    மாறுபட்டு, எதை இழப்பாய் என்றும் கூறுவதாகப்
    புதுமையாய்ப் பாடுகிறார் புலவர் நெடும்பல்லியத்தனார்,
    இசைக் கருவிகளால் பெயர் பெற்றவர் இவர். பாண்டியன்
    பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப்
    பாடுகிறார்.
    யாகம் என்பது வேள்வி. வேள்விகள் பல செய்யும் அவனைத்
    துறவிகள் பலர் நாள்தோறும் கண்டு வருகிறார்கள். நாமும்
    அவனைக் கண்டு ஒரு பொருளைத் துறந்து, துறவிகளாகி வரலாம்
    என்று விறலி ஆற்றுப்படை பாடுகிறார் இப்புலவர். அந்தப்
    பொருள் எது? வறுமைதான். அதை வறுமை என்று
    வெளிப்படையாக நேரான சொல்லால் சொன்னால் அது
    கவிதையாகாது, உரைநடை. அதனால் நயமாகச் சொல்கிறார்:

    குடுமிக் கோமான் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே
                 (புறம் 64: 6-7)

    (புற்கை = கஞ்சி)

    மிக அதிக நீரும் மிகச் சிறிய அளவு தானியமும் கொண்டு
    காய்ச்சப்படுவது கஞ்சி. அதிலும் நீரை அதிகம் கலந்து குடித்துப்
    பசி தாங்கி வாழ்ந்திருக்கின்றனர். வள்ளல் வழுதியைக் கண்டு,
    அந்தக் கஞ்சியை (வறுமையை) நீங்கித் ‘துறவு பூண்டு’ வருவோம்
    என்று நயமாகப் பாடுகிறார். புதுமையாக உள்ளது அல்லவா?

  • வறுமையை நோக்கினான்; மறுமையை அன்று
  • பாணன் சூடிய பசும்பொன் தாமரைப்பூ, சிறந்த அணிகளை
    அணிந்த விறலி அணிந்த பொன் அரி மாலையுடன் மின்னத்,
    தேரில் பூட்டிய குதிரைகளை இளைப்பாறவிட்டுச் சொந்த ஊரில
    இருப்பவர்கள் போல இந்தப் பாலை இடைவழியில் இருக்கும்
    நீங்கள் யார், யார் என்று எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்
    கந்தல் அணிந்த பாணனே, வெற்றி வேலை உடைய தலைவனான
    பேகனைக் காண்பதற்கு முன் உன்னை விட மிக்க வறுமையில்
    இருந்தோம்”, இது பரணர் வள்ளல் பேகனைப் பாடிய
    பாணாற்றுப்படைப் பாடல். இதில் பாணன் தான் பெற்ற பரிசில்கள்
    என்னென்ன என்பதைக் கூறுகிறான் அல்லவா?

         மயில், தான் உடுத்தவும் செய்யாது; போர்த்திக் கொள்ளவும்
    செய்யாது என்பதை அறிந்தும் அதற்கு ஆடையைக் கொடையாக
    வழங்கிய பேகன் எத்தகைய வள்ளல் என்பதையும் எடுத்துக்
    கூறுகிறான்.

         மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண் மையே
                    (புறம் 141: 14-15)

    மறுமையாகிய மேல் உலகத்தில் தனக்கு நன்மை கிடைக்கும் என்று
    ‘மறுமையை நோக்கி’ அவன் ஈவது இல்லை. மற்றவரின்
    ‘வறுமையை நோக்கியே’ வழங்குகிறான் என்ற இந்தச் சொற்களின்
    அழகைப் பார்த்தீர்களா?

  • நம் பசி தீர்க்க அவன் இரப்பான்
  •     இந்தப் பாடல்களுக்கு எல்லாம் மணிமுடியாக விளங்கும் ஒரு
    பாணாற்றுப்படைப் பாடலைப் புறநானூற்றில் (180), கோனாட்டு
    எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
    பாடியுள்ளார்.
    ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று அழைக்கப்பட்ட தோயன்
    மாறன்
    என்னும் குறுநிலத் தலைவனின் வள்ளல் தன்மை மிக
    அழகாகச் சொல்லப்படுகிறது.

        “நாள் தோறும் தொடர்ந்து வாரிக் கொடுக்கும் அளவு
    பெருஞ்செல்வம் அவனிடம் இல்லை. ஆனால் பரிசில் பெற
    வருபவர்க்கு இல்லை என்று சொல்லும் சிறுமையும் அவனிடம்
    இல்லை. தன் மன்னனுக்குத் துணையாகப் போர்கள் பல
    செய்ததால் இவன் உடம்பை இரும்புக் கருவிகள் சுவைத்தன.
    அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறி விழுப்புண் ஆகிய வடுக்கள்
    உடம்பில் மிக உள்ளன. அதனால் மருந்துக்காக வெட்டப்படும்
    மூலிகை மரத்தைப் போல் அவ்வுடம்பு வாள் செய்த வடுக்கள்
    மிகுந்து அழகின்றிக் காணப்படுகிறது. ஆனால் அவன்
    ஆண்மையோ வடு (களங்கம் - குறை) இல்லாதது. அவன்,
    கொடை வண்மைக்கு நண்பன், பாணர் பசிக்குப் பகைவன்.
    கலையில் முதிர்ச்சிமிக்க பாணனே, உன் வறுமை நீங்க வேண்டும்
    என்றால் என்னோடு அவனிடம் வா.

         நாம் அவனிடம்     இரக்கும்     பொழுது, அவன்
    வேறொருவனிடம் சென்று இரப்பான். உண்ணாமல் இளைத்த
    நம் வயிற்றுப்பகுதியை அவனிடம் காட்டி ஒரு பொருளைக்
    கேட்டு இரப்பான். அந்த வேறொருவன் அவனது ஊரைச்சேர்ந்த
    வேல் செய்யும் கொல்லன்தான். அவனிடம் என்ன சொல்லி
    இரப்பான் தெரியுமா? உடனே ஒரு வேல் வடித்துக் கொடு
    என்றுதான்! போர் செய்து பொருள் தேடி வந்து இவர்களின்
    வாடிய வயிற்றுக்கு உணவு இட வேண்டும் என்றுதான்!”
    (இரத்தல் = பொருள் உதவி கேட்டல்).

         அருமையான கொடை வள்ளல்தானே இவன்?

         இனிய மாணவர்களே! இப்பாடலில் இருந்து என்ன
    உணர்கிறோம்? கொடையாக     வழங்கப்படும் பொருளின்
    அளவைவிடக்     கொடுக்கும்     இயல்பாகிய அந்தப்
    பண்பைத்தான் புலவர்கள் சிறப்பித்துப் பாடுகிறார்கள் என்பதைப்
    புரிந்து கொள்வோம்.